Wednesday, October 28, 2020

தெரு நாய்கள் விதிமுறைகளற்ற வாழ்க்கை


தெருநாய்களுக்கு பெயரேதுமில்லை
எஜமானர்களுமில்லை
அதனால் யாருடைய கால்களையும் நக்க வேண்டியதுமில்லை
யாருக்காகவும் குரைக்கவோ  வாலை ஆட்டவோ
யாருடைய வீட்டிலும்
யாருக்காகவும் கிடந்து தூங்கவோ வேண்டியதில்லை.
யாருடைய பானைச் சோற்றையும் நம்பியும் அவை இல்லை
வீடன்றி வேறிடம் நோக்கிச் செல்லக் கூடாதென்ற
விதிமுறைகள் ஏதுமில்லை.
பொழுதோ வேளையோ என்றேதுமில்லை
கழுத்தில் சங்கிலியாபரணமோ
கடிவாளமோ அடைகூடோ ஒன்றுமேயில்லை.
என்றாலும் அவற்றின் வாழ்க்கை அப்படியொன்றும்
கெட்டு விடுவதில்லை
ஊரிலும் நகரிலும்
மனிதரைச் சார்ந்திருந்தாலும்
மனிதர்களைச் சார்ந்திருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை ஒருபோதும்
எதன் பொருட்டாயும் காடேகி வாழ்வதுமில்லை
கூடவும் குலவிச் சேரவும் ஆயிரம் உறவுகளுண்டு
செல்லுமிடமோ திசையெல்லாம் விரிந்து கிடக்கிறது
சொர்க்கமும் சுதந்திரமும் 
காலடியில் கொட்டிக் கிடக்கிறது
விதிமுறைகளற்ற வாழ்க்கை
சித்திப்பது எத்தனை அழகு! Karunakaran Sivarasa

No comments:

Post a Comment