Thursday, April 2, 2020

அன்பின் பதட்டம்

சருமத்திற்கு பதிலாக மரப்பட்டைகள் முளைக்கத் துவங்கிய நாளில்
என் படகு எரிந்து சாம்பலை நீர் உண்டது

அருங்காட்சியகத்திலிருக்கும் முன்னர் தொழப்பட்ட சிலையாய்
ஆண்டுக் குறிப்புடன் சுருங்கித் தூசேறுகிறது ஓர் ஆயுள் பரியந்தம்

காயத்தைச் சொல்லத் தெரியாமல்
ஒடுங்கிக் கிடக்கும் வளர்ப்புப் பிராணியின் மௌனத்தை
பிரார்த்தனையென பரிசீலிக்கிறது
உன் வருகை

காற்றுரசியதும் எரியத்துவங்கும்
விண்கல்லாய்
ஒரு புதிய அன்பு கவியத் திரளுகையில்
சற்றே தகிக்கிறது

தலைத்திருகப்பட்ட சேவலின் துள்ளலைச் சுற்றிச் சுற்றி குலைக்கும்
நாய் இந்த அன்பின் பதட்டம்


நேச மித்ரன்

No comments:

Post a Comment