Thursday, April 2, 2020

*ராமநவமி ஸ்பெஷல்* (*02.04.2020*) வியாழன்!




*மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம்.* சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை,மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது!!!

வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும்ராமபிரானைஎண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்!
பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.
பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர். இவற்றில் ராம அவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்க ளிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான்.
ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவ ரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.

ஏன் நவமியில் அவதரித்தார்?
ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள்கவலையில்ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காமல் இருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரையும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்கின்றன.
(ராம நவமி! கோகுலாஷ்டமி)

ராம நாம மகிமை:
ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்ற ப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்த போது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான்.அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்! ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீராமநவமி உற்சவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, ஜனன உற்சவம் மற்றொன்று கர்ப்ப உற்சவம்.
கர்ப்ப உற்சவம்:
ராமநவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னாலேயே இந்த உற்சவம் தொடங்கப்படும். தினமும் ராமர் படத்துக்கு அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து, விரதமிருந்தும் வழிபடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் போன்ற பிரசாதங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.
ஸ்ரீராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்வார்கள். காரணம், கானகத்தில் விஸ்வாமித்திர முனிவரோடு வாழ்ந்த போது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள். அதை ஒட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகின்றன. அன்று முழுவதும் ராமநாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால் வாழ்க்கையில் சகல சம்பத்துகளோடு வெற்றியும் நிம்மதியும் உண்டாகும் என்பது நிச்சயம்.
இந்த உற்சவம் ஸ்ரீராமநவமி அன்று தொடங்கி பத்து நாட்கள் நடத்தப்படும். பத்தாம் நாள் சீதா கல்யாணமும் பட்டாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்துநாட்களிலும் பஜனை, ராமாயண பிரவசனம் என கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள்.பானகம் நீர்மோரோடு ஆரம்பிக்கும் நிவேதனம் பத்தாம் நாள் கல்யாண ஆராதனையாக நிறைவு பெறும். மானிடத் திருமணத்துக்குச் செய்வது போலவே பலவகையான பதார்த்தங்கள் செய்து அன்னதானமும் நடைபெறும். இந்தக் கல்யாண விருந்தை உண்டால் மனச்சோர்வு, கவலை ஆகியவை நீங்கும். ஆரோக்யம் உண்டாகும் என்பர். உற்சவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல் பொழுது சாயும் நேரம் வரை பக்தர்கள் ராமநாமத்தை உச்சரித்தபடி இருப்பர்.
இதை அகண்ட நாம பஜனை என்று சொல்வார்கள். தீராத கவலை, துக்கம், வறுமை, மனப்பிணி போன்றவை யாவும் அகண்ட நாமத்தில் கலந்துகொண்டு ராமநாமத்தை உச்சரித்தால் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.
ராம நவமி விரதம் இருக்கும்போது
மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்கவேண்டும்.அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள். ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும்.
குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்கவேண்டும். பின்னர், வழக்கமான பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால், பழம், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்கவேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடவேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம்.
நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். நிறைவாக வடையையும், வெற்றிலையையும் அனுமனுக்குப் படைக்க வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாகஎடுத்துக்கொள்ளுதல் நலம். இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும். இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ஸ்ரீராமநவமியிலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்க வேண்டும்.பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல்போல விருந்துணவு செய்து படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலையும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.இந்த வகையில் விரதத்தைக் கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே!
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையில் ராமவென்ற இரண்டெழுத்தினால்!!!

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!!!

சிவகங்கை கணேசன்.
மருதனர் மடம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ராமநவமி

No comments:

Post a Comment