Thursday, January 30, 2020

முகம் – குட்டிக்கதை


நீ தொலைந்துபோய்விட்டாய். செய்தித்தாள்களில் வரும் உன் முகத்தின் பாவனைகள் மூலம் உன் மன நிலையை நான் கணிக்கிறேன். வலைதளங்களிலும் நீ பதிவிடும் படங்களிலும் காணொளிகளிலும் உன் இயல்பை நான் அறிந்துகொள்கிறேன். உன் பாதைகள், உன் ஆசைகள், உன் உண்மைகள், உன் பொய்கள், உன் நம்பிக்கைகள், உன் துரோகங்கள், உன் அறியாமைகள், உன் நுட்பங்கள், உன் உயரங்கள், உன் சமரசங்கள், உன் சரிவுகள் எல்லாம் எனக்குத் தெரிந்துவிடுகின்றன. உனக்குள் விரியும் புன்னகைகள், உனக்குள் உடையும் அழுகைகள், ஆர்ப்பரிப்புகள், ஆராதனைகள், அச்சங்கள், அதிர்வுகள் என்று எல்லாம் உன் படங்கள் வாயிலாகவே எனக்குப் புரிந்துவிடுகின்றன. மனிதர்களை பிம்பங்கள் மூலமாகவே எடைபோடத் தெரிந்தவன் நான். படங்களில் இருக்கும் முக பாவனை, கண்ணோர ஒளி, புன்னகைகளின் அளவு, மூக்கு மடல்களின் கனம், உதடுகளின் வளைவு, காதுகளின் விடைப்பு, தொண்டை நாளங்களின் இறுக்கம் என்று பல அம்சங்கள் எனக்கு அனைத்துச் செய்திகளையும் சொல்லிவிடுகின்றன. உன்னை அறிந்துகொள்ள எனக்கு உன் படங்கள் மட்டுமே போதுமானவை. என்னை அறிந்துகொள்ள ஒரு முறை கண்ணாடியில் என் முகம் பார்க்கிறேன். அதில் வேறு முகம் தெரிகிறது. கண்ணாடி, முகம் ஆக முடியாது.
-நிஜந்தன்
-முன்றில் இதழ்
விலை:25ரூ
ஆண்டுச் சந்தா 275ரூ
தொடர்புக்கு
muntilmagazine@gmail.com
thanks 

Mubeen Sadhika

No comments:

Post a Comment