Saturday, August 17, 2019

எப்படி நாம் வெல்வது அல்லது யாரை ஆதரிப்பது?

Karunakaran Sivarasa
சிறுபான்மையினச் சமூகங்கள் யாரை ஆதரிப்பது?
-----------------------------------------------------------------------------

அரசியலில் எப்போதும் இனிய சந்தர்ப்பங்களே அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. மகாத்மாக்களும் புனிதர்களும்தான் போட்டியாளர்களாகவும் தலைவர்களாவும் நமக்கு முன்னேயிருப்பார்கள் என்றில்லை. கண்ணியமான அரசியல் நடத்தைகளே நிகழ்ந்தேறும் என்பதற்கும் எந்த உத்தரவாதங்களுமில்லை. நமக்கு உவப்பானவர்களே தேர்தற் களத்தில் நிற்பார்கள் என்றும் சொல்ல முடியாது.
யதார்த்தத்தில் எப்போதும் எதிர்நிலைச் சக்திகளே நமக்கு முன்னே எழுந்து நிற்கின்றன. ஆகவே தவிர்க்க முடியாமல் நாம் அவற்றை எதிர்கொண்டே தீர வேண்டியிருக்கிறது. ஆக நமது திறனெல்லாம் அவற்றை எப்படிக் கையாளப்போகிறோம் என்பதிலேயே உள்ளது. இராஜதந்திரமாக, மதிநுட்பமாக, தந்திரோபாயமாக, சாணக்கியமாக, ஆளுமையாக, ஆற்றலைக் கொண்டதாக என.
 
எந்தப் பெரிய எதிர்நிலைச் சக்தியையும் நாம் நமக்குச் சாதகமாகக் கையாள முடியும். காட்டில் முயலையும் சிறு விலங்குகளையும் மட்டும்தான் நாம் வேட்டையாட முடியும் என்றில்லை. நம்மை விட வலுக்கூடிய, அபாயங்களை உண்டாக்கக் கூடிய விலங்குகளைக் கூட மனிதர்கள் வேட்டையாடலாம். கடலிலும் அப்படித்தான். அப்படி வேட்டையாடித்தான் மனித சமூகம் வென்று நிலைத்திருக்கிறது. இங்கே தேவைப்படுவது அவற்றுக்கான உபாயங்களேயாகும்.
தற்போது நமக்கு முன் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் எவரையும், எந்தச் சக்தியையும் எந்தக் கட்சியையும் எதிர்கொள்ள முடியும். அதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில். அதற்கான தெளிவோடு. அதற்கான புரிதல்களோடு. அது சஜித் பிரேமதாசவாக இருந்தாலென்ன? கோத்தாபாய ராஜபக்ஸவாக இருந்தாலென்ன? அல்லது வேறு எந்தப் பேயோ பிசாசாகவோ இருந்தாலென்ன?
எளிய விசயம், எந்த அடிப்படையில் இந்த விடயத்தைக் கையாளப்போகிறோம் என்பதாகும்.
தமிழ் மக்கள் அல்லது தமிழ்பேசும் சிறுபான்மையினச் சமூகத்தினர் தங்களுடைய பிரச்சினைகளின் அல்லது விடயங்களின் அடிப்படையில் (Issue Based) தமது நிலைப்பாட்டை முன்னிறுத்தி ஆதரவை வழங்க முடியும். இந்த விடயங்களின் அடிப்படையிலான (Issue Based) ஆதரவை நாம் இரண்டாக வகுத்துக் கொள்ளலாம். ஒன்று உடனடியான, அவசரகதியில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள். இரண்டாவது, கால எல்லையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள். இதை மையப்படுத்தி எமது நிபந்தனையை விதிக்கலாம். இதற்கான உத்தரவாதத்தைக் கோரலாம். இந்த உத்தரவாதம் தேர்தலுக்குப் பிறகு, அதிகாரத்தில் ஏறிய பிறகு கைவிடப்படலாம் என்றால், தரப்படும் உத்தரவாதத்துக்கே உத்தரவாதம் கோர முடியும். அதெப்படி, உத்தரவாதத்துக்கு உத்தரவாதத்தைப் பெறுவது? என்று நீங்கள் கேட்கக் கூடும்.
தற்போதைய அரசியல் சாசனத்தின்படியும் அரசியல் யதார்த்தத்தின்படியும் இதற்கான வழிகளும் அடிப்படைகளும் தாராளமாகவே உள்ளன. எப்படியென்றால், எந்த வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் மட்டும் வெற்றிபெற்றால் போதாது. வெற்றிபெறும் ஜனாதிபதியானவர் நிம்மதியாகவும் நிறைவாகவும் அதிகாரத்தைக் கையாள வேண்டுமென்றால், ஆட்சி பரிபாலனத்தை இழுபறிகளில்லாமல் மேற்கொள்ள வேண்டுமென்றால் அவருக்கு இசைவான - சார்பான பாராளுமன்றம் அமைய வேண்டும். இல்லையென்றால் தற்போதைய மைத்திரி – ரணில் இழுபறி போலவே தொடர்ந்துமிருக்கும்.
ஆகவே பாராளுமன்றத் தேர்தலின் வெற்றியும் இதனோடு இணைந்தே உள்ளது. இந்த நல்வாய்ப்பை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவர் ஆதரவைப் பெற்றுக்கொண்டு கல்தா காட்டினால் பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு அல்லது அவர் சார்பானவர்களுக்கு நாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம். கல்தா காட்டலாம். இப்படி ஏராளம் வழிமுறைகள் நமக்குண்டு. வாய்ப்புகள் இருக்கின்றன. இதை நோக்கியே நாம் சிந்திக்க வேண்டும். எதற்குள்ளும் காணப்படும் இடைவெளிகளைத் தேடுவதே நமது பலத்தைக் கண்டடைவதற்கான வழி. எதையும் எதிர்மறையாகப் பார்க்க விழைந்தால் அது பலவீனமாகவே இருக்கும்.

No comments:

Post a Comment