Tuesday, August 13, 2019

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' விமர்சகரின் மதிப்புரைகள்


Nakkheeran



நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்...' எனத் தொடங்கும் புதுமைப் பெண்கள் குறித்த பாரதியின் வார்த்தைகளை விட இந்தப் படத்துக்குப் பொருத்தமான டைட்டில் கிடைக்காது. காலம்தோறும் தமிழ் சினிமா பெண்ணியம் பேசிவந்துள்ளது. வெகு சில படங்களைத் தவிர பெரும்பாலான படங்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்வதாகவோ அல்லது ஒழுக்கமான ரௌத்திரமான நாயகிகள் ஆண்களுக்கு அறிவுரை சொல்வதாகவோதான் அமைந்திருந்தன. 'பொண்ணுன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்' என்று சொல்லும் படங்களைப் பார்த்து வளர்ந்த நம்மை 'பெண் எப்படி இருந்தாலும் அவளிடம் அத்து மீற உனக்கு உரிமை இல்லை, அவள் 'நோ' சொன்னால் அதன் அர்த்தம் 'நோ'தான்' என்று நிற்க வைத்து நெற்றியில் அடித்துச் சொல்ல வந்திருக்கிறது 'நேர்கொண்ட பார்வை'.

 
 வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண், அணிந்திருந்த உடையைப் பொறுத்து நீதி சொல்லும் மனங்கள் நிறைந்த ஒரு சமூகத்திடம் "ஜீன்ஸ் டீ-ஷர்ட் அணிந்தாலும் சிரித்துப் பேசினாலும் உடனமர்ந்து மது அருந்தினாலும் அவள் மீது அத்துமீற உனக்கு உரிமை இல்லை" என்று அறிவுரை வசனங்களாக அல்லாமல் அழுத்தமான தர்க்கங்களால் பேசும் 'நேர்கொண்ட பார்வை' இந்தக் காலகட்டத்துக்கு மிக மிக அவசியமான படம். ஏன் இந்தக் காலகட்டத்துக்கு அவசியம்? இது பெண்கள் வெளியே வந்து, ஆண்களுக்கிணையாக சம்பாதிக்கும், ஆண்களுக்கிணையாக பொறுப்புகள் சுமக்கும், ஆண்களுக்கிணையாக மகிழ்ச்சி தேடும் காலம். பெண்கள் தங்கள் காதலை, காமத்தை, விருப்பங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கும் காலம். 'அது தவறு, அவர்கள் அப்படி இருக்கக்கூடாது, இன்னும் அவர்கள் ஆண்களுக்குக் கீழ்தான், வெளியே சுற்றுபவள் அறைக்குள்ளும் ஒத்துழைப்பாள்' என்ற எண்ணம் உள்ள ஆண்களும் கணிசமாக வாழும் காலம். இப்படி ஒரு டிரான்ஷிஷன் காலகட்டத்தில் "ஒரு பொண்ணு குடிச்சா அவ கேரக்டர் சரியில்ல, ஒரு பையன் குடிச்சா அது வெறும் உடல்நலத்துக்கு ஆபத்து மட்டுமா? குடி தப்புன்னா அதை யார் செஞ்சாலும் தப்புதான்" என்று எடுத்துச் சொல்லும் ஒரு ஜனரஞ்சகப் படம் அத்தியாவசியம்தான். இந்தப் பாடத்தை பள்ளியோ, பெற்றோரோ சொல்லாத இடத்தில் ஒரு படம் சொன்னால், அதை பாராட்ட வேண்டும். அறிமுகமோ, நட்போ, காதலோ, காமமோ வெளிப்படுத்தவும் மறுக்கவும் பெண்ணுக்கு உரிமை உண்டு என்பதை ஆண்களுக்கு சொல்லித்தர வேண்டும்தானே? நட்பு, காதல் என்று நம்பி உடன் வந்த பெண்களை பிற காமுக வெறியன்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது, அவள் பண்டமல்ல, அவளை அடிக்கக்கூடாது, அதை வீடியோ எடுத்து மிரட்டக்கூடாது என்று பொள்ளாச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டிவனம், திருத்தணி, திருச்சி என தமிழகமெங்கும் அரங்கு அதிரப் பேசும் ஒரு படம் தேவைதானே?
பெண்களுக்கான அறிவுரை சொல்லும் படங்களைக் கடந்து பெண்கள் குறித்த அறிவை சமகால இளைஞர்களுக்கு சொல்லும் புதிய பார்வை, இந்த 'நேர்கொண்ட பார்வை'. இது பெண்களுக்கான படமல்ல, ஆண்களுக்கான, பெண்கள் குறித்த படம். பெண்களும் பார்க்கலாம். குறைகளைத் தாண்டி நோங்கிய தாக்கத்தை கிட்டத்தட்ட தந்துவிட்டது இந்த 'நேர்கொண்ட பார்வை'. இனி பெண்கள் குறித்த நம் பார்வையை பரிசீலனை செய்யவேண்டும்.        
Geeta Ilangovan
`பிங்க்' பெண்ணியப் பார்வையில் எடுக்கப் பட்ட ஆகச் சிறந்த இந்திப் படம். அதன் மையப் பொருள் மாறாமல் (அஜித்துக்காக சேர்க்கப்பட்ட காதல்&ஆக்சன் பகுதிகளை மன்னித்துவிடலாம்) அருமையாக தமிழில் எடுத்திருக்கும் இயக்குனர் வினோத், நடிகையர் ஷ்ரத்தா, ஆண்ட்ரியா, அபிராமி, முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் அஜித் மற்றும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துகளும், அன்பும் 💐
ஒரு பெண்ணுக்கு ஏதேனும் அநீதி - வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் உட்பட - இழைக்கப்பட்டால், அவளுக்கு குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதை விட, சமுதாயத்தின் "ஒழுக்கக் கண்ணாடி"யை அணிந்து கொண்டு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் `ஒழுக்கமானவளா' என்று ஆளாளுக்கு ஆராய்ந்து தீர்ப்பு சொல்வார்கள்.
அவள் அணிந்திருக்கும் உடை, நேரத்துக்கு வீட்டுக்கு வருகிறவளா இல்லை இரவு தாமதாக வருவாளா, தனியாக வசிக்கும் பெண் என்றால் ஆண்கள் யாரெல்லாம் வந்து போவார்கள், யாரோடு வெளியே போகிறாள், எங்கே போகிறாள், எந்த நேரத்தில் போகிறாள், குடிக்கிறவளா, ஆண்களுடன் சிரித்து பேசுகிறவளா, விவாகரத்து ஆன ஆணுடன் உறவில் இருக்கிறவளா, பலபேருடன் உறவில் இருந்தவளா, கன்னித்தன்மை இழந்தவளா... இத்தியாதி... இத்தியாதி.... இதைப் போல இன்னும் பல. இது சமயத்துக்கு தகுந்தாற் போல மாறும். இதில் ஒரு மாற்று குறைந்தால் கூட `அவளைப் பத்தி தெரியாதா ?' என்று கிழித்து தொங்க விடுவார்கள். `அவளுக்கு இது மாதிரி நடக்கறது பெரிய விசயமில்லை' என்பது போல குற்றத்தை மழுங்கடித்து, குற்றவாளி ஆணை மறந்தே விடுவார்கள்... அப்புறம் எங்கே தண்டனையைப் பற்றி யோசிப்பது ?
`நீங்கள் சொல்லும் "அத்தனை ஒழுக்க விதிகளை"யும் மீறும் ஒரு பெண்ணாக இருந்தாலும், அவள் அனுமதியின்றி அவளை தொடக்கூடாது. அது தண்டனைக்கு உரிய குற்றம். அவள் உடல் மீதான உரிமை அவளுக்கு மட்டும் தான்' என்று பொட்டில் அடித்துச் சொல்கிறது படம்.
பொது சமுதாயம், ஊடகம், காவல்துறை, நீதித்துறை எல்லோரும் `women of objectionable character' என்ற மூளைச்சலவையால், காலங்காலமாக பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெளிவாக பாடம் எடுக்கிறது இந்தப் படம்.
இந்த உரையாடலை எங்காவது ஆரம்பிக்க வேண்டும். `நேர் கொண்ட பார்வை' அதனை இங்கு துவக்கியிருக்கிறது
பாருங்க தோழர்களே !

No comments:

Post a Comment