Monday, July 22, 2019

இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல் ஷோபாசக்தி

Karunakaran Sivarasa

ஞானம் விளைந்தது
-------------------------------
சில நாட்களுக்கு முன்பு இணையத் தளமொன்றுக்கான நேர்காணலுக்காக எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் சில கேள்விகளை எழுப்பினேன். நான் எழுப்பியிருந்த கேள்விகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினை, இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல், இனப்பகை அல்லது இன முரணைத்தீர்ப்பதற்கான வழிமுறைகள், பொறுப்புகள் பற்றியவையாக இருந்தன. கூடவே இலங்கையில் இடையீடு செய்யும் வெளிச்சக்திகளைப் பயன்படுத்திக்கொள்வது, புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைச் சமூகங்களின் பொறுப்பும் பணிகளும் என்பதைப் பற்றியும்.
என்னுடைய கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாகவே பதிலளித்திருந்தார் ஷோபாசக்தி. ஆனால் அவருடைய பதில் வேறு விதமாக இருந்தது. “உங்களுடைய கேள்விகளில் பத்துக்கு எட்டுக் கேள்விகள் புராதனத்தன்மை வாய்ந்தவை. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கு இன்றைய சூழலில் கடவுளைத் தவிர வேறு யாராலும் பதிலளிக்க முடியாது. அப்படிப் பதில் இருப்பதாக யாராவது சொன்னால் அது மனமறிந்து சொல்லும் பொய்” என்று.
அத்துடன், “யாருக்கும் அரசியல் புத்திமதியோ ஆலோசனையோ கூறும் நிலையில் நானில்லை. வேண்டுமானால் என்னைப்பற்றி, என்னுடைய செயற்பாடுகளைப் பற்றிக் கேளுங்கள். தாராளமாகப் பதிலளிக்கிறேன்” எனவும்.
அவருடைய இந்தக் கண்ணியமான பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டது என்றாலும் இங்கே அதைத் துணிந்து நான் பகிரங்கமாக எடுத்தாள்வதற்குக் காரணம், அதில் உள்ள நேர்மைத்தன்மையும் உண்மையுமாகும். மட்டுமல்ல அது ஒரு பரந்துபட்ட விழிப்பூட்டலைச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்பதாலும்.
ஷோபாசக்தி இன்று உலகளவில் அறியப்பட்ட எழுத்தாளர். திரைக்கலைஞர். நாடகர். ஷோபசக்தியின் எழுத்துகளும் பிற கலைச் செயற்பாடுகளும் அவரே சொல்வதைப்போல “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” என அரசியல் மயப்பட்டவையே. அதுவும் வெளிவெளியான அரசியல்.
இப்படி அரசியல் முதன்மைப்பாட்டுடன் தன்னுடைய எழுத்துகளையும் கலை வெளிப்பாடுகளையும் முன்வைத்து வரும் ஷோபாசக்தி, நான் எழுப்பியிருந்த அரசியல் ரீதியான கேள்விகளைக் குறித்துச் சொன்ன பதிலிலுள்ள நியாயங்களும் உண்மையும் அவருடைய நிலைப்பாடும் மிகுந்த கவனத்திற்கும் பரிசீலனைக்குமுரியவை. அதாவது தன்னுடைய எழுத்துகளையும் வாழ்வொழுங்கையும் அரசியல் சிந்தனையின் பாற்பட்டு மேற்கொண்டு வரும் ஒரு முன்னணிக் கலைஞர், இந்த அரசியல் குறித்துப் பேச ஆர்வம் கொள்ளவில்லை எனில் அந்த அரசியல் செல்லுபடியற்றது - பொருளற்றிருக்கிறது என்பதே அர்த்தமாகும்.
இதற்குப் பிரதான காரணம் ஷோபாசக்தி எழுத்தாளராகவும் கலைஞராகவும் இருக்கிறார் என்பதாகும். அவர் அரசியல்வாதியல்ல. அரசியல் லாபத்தின்பாற்பட்ட எழுத்துத்துறையைச் சேர்ந்தவரும் இல்லை. அவர் புனைவை எழுதினாலும் புனைவியக்கத்தில் செயற்பட்டாலும் அவற்றில் வலியுறுத்தப்படும் விடயங்கள் எதுவும் புனைவற்றவை. அவை உண்மைக்குரியவை. சத்தியமானவை. நியாயத்தின் அடியொலிப்பான்கள். உண்மைக்குரியவற்றையும் சத்தியமானவற்றையும் எழுதும் ஒருவர் பொய்மைகளால் கட்டமைக்கப்பட்டவற்றின் வழி நின்றியங்க முடியாது.
ஷோபாசக்தியினுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி அரசியல் சார்ந்த எண்ணப்பாடுகளால் வழிநடத்தப்பட்டதே. ஆனாலும் அடிப்படையில் அவர் எழுத்தாளர், கலைஞர். ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் அவர் முற்று முழுதாக எழுத்தாளராகவும் கலைஞராகவுமே இயங்கிக் கொண்டிருக்கிறார். புறச் சூழலில் மட்டுமல்ல, அவருடைய அகமும் அவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஷேபாசக்தி மட்டுமல்ல, இலக்கியம் மற்றும் கலை வெளிப்பாடு போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபடும் எவரும் இன்றைய இலங்கையின் அரசியல் பற்றிப் பேச விரும்பமாட்டார். அது பயனற்றது என்பதே பலரும் உணர்ந்திருக்கும் உண்மை.
ஏற்கனவே பலர் பெரிய நம்பிக்கைகளோடு இன ஐக்கியத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே பூஜ்ஜியத்தில்தான் முடிந்திருக்கின்றன. அவர்களால் அந்த நம்பிக்கைப் பெரு வீதியில் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. இதனால் இந்த மாதிரித் துறைசார்ந்து இயங்குவோர் மட்டுமல்ல, வேறு எவரும் கூட இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் எனக்கு எழுதியிருந்த மிகச் சுருக்கமான – கண்ணியமான பதிலிலிருந்து நானும் கற்றுக்கொண்டேன்.
ஏனென்றால் இலங்கையின் வெகுஜன அரசியல் முற்றிலும் பொய்மையின் மீதும் அநீதியின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்தம் எனப் புனிதப்படுத்தப்பட்ட மேலாதிக்கத்தின் மீது சிங்கள அரசியலும் 'முஸ்லிம் தனித்துவம்' என்ற புனிதத்தின் மேல் முஸ்லிம் அரசியலும் தமிழ்த்தேசியம் என்ற 'மகிமை'யின்கீழ் தமிழர்களுடைய அரசியலும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கட்டமைப்பாக்கம் செய்யப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்படும் அரசியலில் ஏற்கனவே பல தடவை பலராலும் பேசப்பட்டுப் பேசப்பட்டுப் பேசப்பட்டுக் காலாவதியாகிப்போனவற்றைப் பற்றிப் பேசுவதால் பயனென்ன? எப்போதும் புதியதை, புதுமையை, மாற்றை, வளர்ச்சியை, முன்னகர்வை விரும்பும் வலியுறுத்தும் எழுத்தாளர் பேசவேண்டிய அவசியமென்ன என்பதே ஷோபாசக்தியின் கேள்வி. இந்தக் கேள்வி ஏராளமான உண்மைகளை உணர்த்தி மெய்நிலைப்பாட்டைப் புரிய வைக்கிறது. இந்த நிலையில்தான் என்னுடைய கேள்விகளை அவர் புராதனத்தன்மையானவை என்கிறார்.
இந்த அரசியலைப்பற்றி நான் கூடத் தொடர்ந்து எழுதி வருகிறேன். நாளொன்றுக்கு ஏறக்குறைய எழுநூறு தொடக்கம் ஆயிரம் சொற்கள் வரையில் எழுதுகிறேன். என்னைப்போலப் பலரும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஊடகப்பரப்பும் இணைய வெளியும் சமூக வலைத்தளங்களும் அரசியற் கருத்தாடல்களால் நிறைந்து கிடக்கின்றன.
ஆனாலும் பயனென்ன? நிகழ்ந்த மாற்றங்களென்ன?
ஷோபாசக்தியின் பதில் என்னிடம் எழுப்புகின்ற ஏராளம் கேள்விகளும் இவற்றைத் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. நான் அவரிடம் எழுப்பிய கேள்விகளை விட அவருடைய பதில் என்னிடத்திலும் பிறரிடத்திலும் எழுப்பும் கேள்விகள் அதிகம்.
என்பதால் மெய்யாகவே நாம் சிலதை அவதானிக்க வேண்டியுள்ளது.
நமது சூழலில் மிகத்தீவிரமாக அரசியல் விவாதங்கள் நடக்குமளவுக்கும் அரசியல் பேசப்படும் அளவுக்கும் முன்னகர்வுகளோ மாற்றங்களோ நிகழவில்லை. அதற்கான சாத்தியங்களே தென்படவில்லை. புதிய சிந்தனை எங்கும் முளைக்கவில்லை. நற்சாத்தியங்கள் எங்குமே வேர்விட்டதாகத் தெரியவில்லை. மீள் பரிசீலனைகளும் மதிப்பீடுகளும் நடக்கவில்லை. சுயவிமர்சனத்துக்கு யாரும் தயாரில்லை.
மேலும் மேலும் சரிவுகளும் கீழிறக்கங்களுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இன ஒற்றுமையைப் பற்றியும் பகை மறப்பைப் பற்றியும் பேசியதை விட நடைமுறையில் இனப்பகையும் இனமுரணும் வலுவாக்கம் பெறுவதே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமாதானத்தை வலியுறுத்துவதை விட அமைதிக்கெதிரான பதற்றமே உருவாக்கப்படுகிறது. தீர்வுக்குப் பதிலாக தீர்வுகளின்மையே எதார்த்தமாகிறது. ஆக எழுத்துக்கும் பேச்சுக்கும் மாறாகவே நிலைமை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணம் இதனைச் சரியாக முன்னெடுத்திருக்க வேண்டிய, முன்னெடுக்க வேண்டிய தரப்புகள் அவற்றை எதிர்நிலையில் கொண்டு செல்வதேயாகும். இந்தத் தரப்புகளில் பலவும் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தம்மிடம் வைத்திருப்பதால் நடைமுறையில் அவற்றின் நடவடிக்கைகளே வலுவானதாக அமைகின்றன. அவை தவறாக இருப்பதால் பிழைகளும் அதிகமாகி விடுகின்றன. இதையிட்ட கவலையோ கேள்விகளோ இல்லாமல் சனங்களும் இவற்றின் பின்னால் இழுபட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
இதனால்தான் இந்த அரசியலைப்பற்றி மேலும் மேலும் பேசுவது கலைஞர்களின் எழுத்தாளரின் பணி இல்லை என்றாகிறது. அவர்கள் இதை அதற்குரிய வகையில் வெளிப்படுத்தினால் போதும் என்று எண்ணுகிறார்கள்.
ஷோபாசக்தியின் “மிக உள்ளக விசாரணை” என்ற சிறுகதை இதற்குச் சிறந்த உதாரணம். அவர் என்னுடைய பத்துக் கேள்விகளுக்கும் அளிக்கக் கூடிய பதிலை அந்த ஒரு கதையில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விட்டார். என்னுடைய கேள்விக்கான பதிலாக மட்டுமல்ல, ஐ.நாவின் அணுகுமுறைக்கு, அமெரிக்காவின் அறிக்கைகள் பலவற்றுக்கு, சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு, இலங்கை அரசின் நியாயங்களுக்கு, சிங்கள பௌத்த உளவியலுக்கு, விடுதலை அரசியல் பற்றிய தடுமாற்றங்களோடு இருப்போருக்கு இன்னும் இந்த மாதிரியான எல்லாவற்றுக்கும் எல்லாத் தரப்புகளுக்கும் அவர் மிகச் சிறந்த பதிலாக அந்தக் கதையை எழுதி விட்டார்.
எழுத்தாளரின் பணியும் அடையாளமும் இதுதான். இதற்குமேல் எதையும் பேச வேண்டிய அவசியமில்லை. அவசியமிருந்தால் பேசிக் கொள்ளலாம். கட்டாயமொன்றுமில்லை. ஏனெனில் லாப நோக்கோடு இயங்கும் அரசியல்வாதியல்ல எழுத்தாளரும் கலைஞரும். அவர்கள் அதற்கு எதிரானவர்கள், அதிலிருந்து விலகி, வேறுபட்டவர்கள், உண்மையின் வழியில், அறத்தின் ஒளியில் நடப்பவர்கள் என்பதேயாகும்.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழல் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இப்படியே சீரிழிவும் மோசமானதாகவுமே இருக்கப்போகிறது என்பதற்கு சான்றுகளோ விளக்கங்களோ தேவையில்லை. சரியானவர்களும் பொருத்தமானவர்களும் அரசியலில் முன்னிலை அரங்கில் இல்லை. அவர்கள் அதிகாரத்தைப் பெறக் கூடிய சூழலும் தென்படவில்லை. அவ்வாறான தரப்பினரை இனங்கண்டு முன்னிலைப்படுத்துவதற்கான சக்திகளும் ஊடகங்களும் பொதுவெளியில் இல்லை.
மாற்று அரசியல் பண்பாடு, மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் போன்றவற்றைப்பற்றியே சிந்திக்காத அளவில்தான் மக்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பத்திரும்ப தம்முடைய கூடையில் உள்ள கூழ்முட்டைகளே மிகச் சிறந்த குஞ்சுகளைப் பொரிக்கும் என்று நம்புகிறார்கள். கனவு காண்கிறார்கள்.
இதனால்தான் இன்று அரசியலை வெறும் பார்வையாளராக நோக்கும் போக்கு பல மட்டங்களிலும் வளர்ந்துள்ளது. அரசியலில் ஈடுபடுவதை தொழிலாக, வாணிபமாக, அதிகாரத்தின் ருஸியாகக் கொள்வோரைத் தவிர ஏனையவர்கள் அதில் வெல்ல முடியாதவர்களாக இருப்பதற்கான காரணம் இதுவே.
வானம் இப்போதைக்கு வெளிக்கும் என்றில்லை. ஆனால் நமக்கு ஞானம் வசப்பட்டிருக்கிறது. ஷோபாசக்தி எனும் ஞானக் கலைஞருக்கு நன்றி

No comments:

Post a Comment