Monday, July 15, 2019

தலைவர் காமராசரின் பிறந்ததினம் ஜூலை 15



" காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர்! மக்களின் புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார்!

முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தோண்டாற்றினால்தான் இந்தப் பாடத்தைப் பெறமுடியும்!

. . . வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பூமியின் அழுத்தத்தால் கீழே அடகி நடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்! அதுபோல, நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய வைரமணிகளிலே ஒருவரே காமராசர்! "
- அறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவான இன்று அவருக்கு என் புகழாஞ்சலியைச் செலுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்!
உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன்.
 

இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்! அவரைப் பற்றிய ஒரு சில செய்திகளை இன்றைய கடிதத்தில் நினைவு கூர்வது அவருக்கு கழகம் செலுத்துகின்ற மரியாதையாக இருக்குமென்று கருதுகிறேன்.

"கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட அவசர உத்தரவு - ஆசிரியர்கள் தவிப்பு" என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "தினமலர்" நாளேட்டின் சிறப்பு நிருபர் வெளியிட்ட செய்தியில், "முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டது. இவ்விழாவையொட்டி, அனைத்துப் பள்ளி களிலும், பல்வேறு வகையான போட்டிகளை முன் கூட்டியே நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஜூலை 15ம் தேதி பரிசுகள் வழங்கி, விழா கொண்டாடப்பட்டு வந்தது. இதற்காக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தனி நிதி உதவியும் வழங்கப் பட்டது. இந்த விழாவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக, முந்தைய (தி.மு.கழக) அரசு தனி சட்டமும் கொண்டு வந்து அமல் படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இவ்விழாவைக் கொண்டாடுவது குறித்தோ, முன்கூட்டியே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவது குறித்தோ, தமிழக அரசு முன்கூட்டியே எவ்வித அறிவிப்பையும் பள்ளிகளுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று மாலை அவசர அவசரமாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, "பேக்ஸ்", "இ. மெயில்" மூலம் காமராஜர் பிறந்த நாள் விழாவை அனைத்து வகையான பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு விழாவிற்கான செலவுத் தொகை பின்னர் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில், திடீரென அரசு இப்படி உத்தரவிட் டுள்ளதால், விழாவை எப்படி நடத்துவது என தெரியாமல் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்."
இவ்வாறு "தினமலர்" நாளேட்டில் செய்தி வந்தது.

காமராஜர் பிறந்த நாளுக்கு முதல்நாள் திடீரென இவ்வாறு அவசரமாக அரசு அறிவிக்கக் கூட காரணம் என்ன? 14-7-2011 அன்று நான் விடுத்த ஓர் அறிக்கையில்;

2007-2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாள்" என்று ஒவ்வொரு பள்ளி யிலும் கொண்டாடப்பட வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் அறிவித்ததோடு அதனைச் சட்டமாகவும் கொண்டு வந்து தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றினோம். ஆனால் இந்த ஆண்டு அரசின் சார்பில் செய்துள்ள அறிவிப்பில் கூட - பெருந்தலைவர் காமராஜர் 109ஆம் பிறந்த நாள் அன்று அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவிப்பார்கள் என்று மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டுள்ளதே தவிர - அந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்றுகூட அறிவிக் கப்படவில்லை என்றெல்லாம் தெரிவித்திருந்தேன்.

அதன் பின்னர்தான் அரசாங்கம் விழித்துக் கொண்டு காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தது. அதனால்தான் இந்த ஆண்டு என்னதான் இந்த ஆட்சியினர் செய்கிறார்கள் என்று இன்று வரை பார்த்தேன். இன்றைய தினம் அரசின் சார்பில் வெளிவந்துள்ள அரைப்பக்க விளம்பரத்தில், முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் கடற்கரை காமராஜர் சாலையிலே உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று கொண்டாடும்படி எந்த அறிவிப்பும் இல்லை.

காமராஜர் அவர்களுடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் அறிவித்து, அந்த அறிவிப்பு தொடர்ந்து நிரந்தரமாக செயல்பட குறுக்கே வருகின்ற அரசு எப்படியிருக்குமோ என்ற சந்தேகத் தினால் - அதை ஒரு சட்டமாகவே ஆக்கி, ஜூலை 15 என்றால் அன்றைய தினம் காமராஜருடைய பிறந்த நாளை சட்டப்படி பள்ளிகளில் கொண்டாட வேண்டு மென்று - சட்டப்பேரவையிலேயே சட்டம் நிறைவேற்றி, அதை கழக ஆட்சியில் உறுதிப்படுத்தியிருக்கிறோம்.

ஏன் சட்டத்தை மாற்ற முடியாதா என்று கேட்கக் கூடும். மாற்றலாம், ஆனால் ஒரு அறிவிப்பை மாற்றுவது சுலபம். அதைக் கண்டு கொள்ளாமலே இருந்து விட்டால் தானாகவே மாறிவிடும். அல்லது வேண்டுமென்றே கூட அறிக்கை விட்டு அதை மாற்றி விடலாம். ஆனால் சட்டமாகச் செய்தால், அதை திரும்பப் பெற, மாற்றுவதற்கு, சட்டசபையைக் கூட்டியாக வேண்டும். சட்டமன்றத்தைக் கூட்டி, இப்படி கழக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது காமராஜருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று குறிப்பிட்டு கொண்டாடினார். அதற்காக ஒரு சட்டம் செய்தார், அந்தச் சட்டத்தை நாங்கள் விலக்கிக் கொள்கிறோம், ரத்து செய்கிறோம் என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சட்டத்தை ரத்து செய்து விட்டு வெளியிலே நடமாட முடியுமா என்பது வேறு விஷயம். அதனால் தான் இதைச் சட்டமாகவே ஆக்கினோம்.

2006 - சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கை யில், ‘காமராஜர் பிறந்த நாளாம் ஜூலை 15ஆம் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்துப் பள்ளிகளில் விழா எடுப்போம்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அரசு அறிவித்து கழக ஆட்சியில் 24.5.2006 அன்று ஆணை வெளியிட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது. அதன்படி, 15.7.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜர் அவர்களின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. அத்துடன் அவ்விழாவில் 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின்னர், 15.7.2007 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும், 15.7.2008 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு; கழக ஆட்சி நடைபெற்ற வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை தி.மு. கழகம் பெருமைப்படுத்திய ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்திட வேண்டுமென்றால், காமராசர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வேளையில் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் அல்ல. ஆனால், 6 மாத காலத்தில் அவர் பேரவை அல்லது மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதனால் அப்பொழுது குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் "குணாளா, குலக்கொழுந்தே" என எழுதி, பெருந் தலைவர் காமராசரின் வெற்றிக்குப் பாடுபடுவோம் எனக் கூறி ஆதரவு தெரிவித்தார். அதன்படி, தி.மு. கழகம்; காமராசரின் வெற்றிக்காக பாடுபட்டு அவரை வெற்றி பெறச் செய்தது.

சென்னை மாநகராட்சி தி.மு. கழக நிர்வாகத்தில் இருந்தபோது பெருந்தலைவர் காமராசர் அவர்களுக் குப் பெரியார் பாலத்திற்கு அருகில் சிலை அமைத்து, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு 9.10.1961 அன்று அச்சிலையைத் திறந்து வைத்தது கழகம்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் 2.10.1975 அன்று மறைந்தபின், கிண்டி காந்தி மண்டபத்திற்கு அருகில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பியது. அந்த நினைவு மண்டப முகப்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவுச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

1990-இல் சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிலையத்திற்கு "காமராசர் முனையம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை கடற்கரைச் சாலைக்கு 1997-இல் "காமராசர் சாலை"" எனப் பெயர் சூட்டப்பட்டது.

கடற்கரைக்கு அருகில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை இருந்த காரணத்தால், குமரி முனையில் காமராசரின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணி மண்டபம் கட்டமுடியாத நிலை இருந்தது. அதன்பின், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் பேசி, கோரிக்கை வைத்து, அனுமதி பெற்று, காமராசர் மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 2.10.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது.

2006- இல் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி சமூகப் பொதுத் தொண்டுகளில் சிறந்து விளங்கும் சான்றோர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியுடன் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்பட்டது.

2006-இல் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த ஜூலை 15 ஆம் நாளை "கல்வி வளர்ச்சி நாள்" எனச் சட்டமியற்றி ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்து கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 19.7.2010 அன்று பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையிலே வாடிய போது, சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி யடைகிறது என்பதையும், தனது தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத காமராசர் உடல் நலிவுற்றுப் படுத்த படுக்கையானார்.

ஒரு நாள் காலை நானும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரும் காமராஜர் அவர்களைக் காண அவரது இல்லம் சென்றோம். அவர் அருகே அமர்ந்த என்னைக் கண்டதும் அவரது கண்கள் கலங்கின. மெதுவாகத் தொட்டேன். தழுவிக் கொண்டார். அவரது கண்கள் நீர்வீழ்ச்சிகளாயின. ‘தேசம் போச்சு! தேசம் போச்சு’ என்று உரக்கக் கூவினார். நான் வாய்விட்டுக் கதறி அழுது விட்டேன். நாவலர் கண்ணீர் வடித்தவாறு எங்களிருவரையும் தேற்றினார். ‘அய்யா! நீங்கள் சொல்லுங்கள்! இப்போதே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுகிறோம்! இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, சர்வாதிகாரத்தை அழிக்க நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள்! உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயார்!’ என்றேன். "பொறுமையாக இருங்கள்! அவசரப்படாதீர்கள்! இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்"" என்று அவர் அறிவுரை கூறினார்.

அப்படிப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  பிறந்த நாள் விழாதான் இன்று! மறைந்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை; மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, காவேரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவரே காமராஜர் அவர்கள்தான்.
இவ்வாறு எத்தனையோ நினைவுகள்!

மாற்றாரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாலை நேரப் பொதுக் கூட்டங்களில் பேசும்போது எப்படியெப்படியோ தாக்கிக் கொள்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய பிறகு, தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தது. அதற்காக தி.மு. கழகத்திடம் வெறுப்பைக் காட்ட வேண்டிய பெருந்தலைவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. அதனால்தான் அவர் பெருந்தலைவர் ஆனார். அஃதே போல பேரறிஞர் அண்ணா அவர்களும், அவருக்குப் பின் நானும் பெருந்தலைவர் காமராஜ ரிடம் எந்த அளவுக்கு மரியாதை செலுத்தினோம், பழகினோம் என்பதை தமிழகம் நன்கறியும். அந்தப் பெருந்தலைவர் பிறந்த நாள் விழாவான இன்று அவருக்கு என் புகழாஞ்சலியைச் செலுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்!

No comments:

Post a Comment