Wednesday, March 6, 2019

ஏழு வகையான அனுபவப் பொருட்கள் (பிருஹதாரண்யக உபநிஷதத் தத்துவங்கள்)

 ஸப்தான்ன பிராம்மணம் :

படைப்பு முழுவதையும் ஏழு வகையான அனுபவப் பொருட்களாகப் பகுக்கிறது இந்தப் பிராம்மணம். அனுபவப் பொருட்களை ‘அன்னம்’ அல்லது ‘உணவு’ என்ற பெயரால் இது அழைக்கிரகுடு. ஏழு வகை ‘உணவுகளை’க் கூறுவதால் இந்தப் பிராம்மணம் ‘ஸப்தான்ன பிராம்மணம்’ எனப்படுகிறது.
எல்லோருக்கும் பொதுவாக முதல்வகை உணவு, இரண்டு வகை உணவுகள் தேவர்களுக்கு, மூன்று வகைகள் மனிதர்களுக்கு, ஒரு வகை உணவு மிருகங்களுக்கென்று வகைப்படுத்தப்படுகிறது.
முதலில் இந்த ஏழு வகை உணவையும் சுலோகங்களாகக் கூறி விட்டு, பிறகு ஒவ்வொன்றாக விளக்குகிறது உபநிஷதம்.
ஏழு வகை உணவுகள்
யத் ஸப்தான்னானி மேதயா தபஸாஅஜனயத் பிதா I
ஏகமஸ்ய ஸாதாரணம் த்வே தேவானபாஜயத் II
த்ரீண்யாத்மனேஅகுருத பசுப்ய ஏகம் ப்ராயச்சத் I
தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டிதம் யச்ச ப்ராணிதி யச்ச ந II
கஸ்மாத்தானி ந க்ஷீயந்தே அத்யமானானி ஸர்வதா I
யோ வைதாமக்ஷிதம் வேத ஸோஅன்னமத்தி ப்ரதீகேன II
ஸ தேவானபிகச்சதி ஸ ஊர்ஜமுபஜீவதி இதி ச்லோகா II 1 II
பொருள்: மேதா சக்தியாலும் தவத்தாலும் பிரஜாபதி ஏழு வகை உணவுகளைப் படைத்தார். அவற்றுள் ஒன்று அனைவருக்கும் பொதுவானது. இரண்டு வகை உணவுகள் தேவர்களுக்கு அளிக்கப்பட்டது. மூன்று வகை உணவுகளை மனிதனுக்காக வைத்தார்; ஒரு வகையை விலங்குகளுக்கு அளித்தார். எவையெல்லாம் உயிர் வாழ்கின்றனவோ, வாழவில்லையோ அவை அனைத்தும் [விலங்குகளுக்கு அளிக்கப்பட்டதான] கடைசி வகை உணவில் நிலைபெற்றுள்ளன.
எப்போதும் உண்ணப்பட்டும் இந்த உணவு வகைகள் ஏன் குறையவில்லை? உணவின் இந்தக் குறையாத தன்மையை யார் அறிகிறானோ அவன் நன்றாக உணவை உண்கிறான். அவன் தேவர்களை அடைகிறான். அவன் அமுதத்தை உண்கிறான். இவை ரிக் மந்திரங்கள்.
இந்த உணவு பற்றிய விளக்கத்தை அடுத்த மந்திரத்தில் காண இருக்கிறோம். ஆனால் இங்கே மிகவும் சிந்தனைக்குரிய கேள்வி ஒன்று எழுப்பப்படுகிறது---‘எப்போதும் உண்ணப்பட்டும் இந்த உணவு வகைகள் ஏன் குறையவில்லை?’ அதாவது, வாழ்க்கையில் அனுபவங்கள், ஒன்று போனால் மற்றொன்று, அந்த மற்றொன்று போனால் இன்னும் மூன்று என்று ஏன் குறைவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது கேள்வி. இதற்கான பதிலையும் அடுத்த மந்திரங்களில் காண இருக்கிறோம்.

No comments:

Post a Comment