Saturday, February 2, 2019

முல்லைக்கலி- சோழன் நல்லுருத்திரன்

யாருக்கும் தெரியாமல் ஒருவன் குடித்த கடுங் கள் உடம்பில்
பரவிப் பிறர் நடுங்க வெளிப்பட்டு
விடுவது போல நான் அந்த ஆயனோடு
கொண்டிருந்த நட்பு தெரிந்துவிட்டது தோழி!
ஆடுகள் மேய்த்துவந்த அந்த ஆயர் மகன் தன்
தலையில் சூடியிருந்த முல்லை மாலையில்
ஒரு கண்ணியை நான் சூடிக்கொண்டேன்.
தலைக்கு வெண்ணெய் தடவச் செவிலி
கூந்தலை விரித்தபோது, பெற்றோர் அருகிருக்கச்
செவிலியின் முன்னே விழுந்தது அந்தப் பூ.
அதைப் பார்த்த தாய் என்ன என்று கேட்கவில்லை.
கோபப்படவுமில்லை, தீயைத் தொட்டவள்
போலக் கையை உதறிக்கொண்டே போய்விட்டாள்.
நானும் பக்கத்தில் இருக்கும் கானகத்தில்
ஒளிந்துகொள்ளப் போய்விட்டேன்.’
*********************
தோழி! நாம், காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக் கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம், கண்டாய்; நம் புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி! யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ. அதனை வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள்; நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு, நீங்கிப்புறங்கடை போயினாள். யானும், என் சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த பூம் கரை நீலம் தழீஇத், தளர்பு ஒல்கிப், பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு, எல்லா ஈங்கு எவன் அஞ்சுவது? அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும் அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல் கண் வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம் அல்கலும் சூழ்ந்த வினை!
-
- விளக்க உரை - ஞானக்கூத்தன்

No comments:

Post a Comment