Sunday, February 10, 2019

குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பதன் மூலம் குற்றம் கரைந்து போகுமா?

குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்து வெளியே வந்த பின் அவர்கள் மீதான பார்வை மாறவேண்டுமா? அவர்கள் ஒரு கொடூர குற்றத்தைச் செய்யும் குணத்தைப் பெற்றவர்கள் என்பது மாறிவிடுமா? அவர்கள் மீதான பச்சாதாபம், பரிதாபம் எல்லாம் இருக்கலாம். அவர்களைப் பராமரிக்கலாம். ஆனால் அவர்கள் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்தவர்கள் என்ற பார்வையை மாற்றமுடியுமா?
தண்டனை அனுபவிப்பதன் மூலம் குற்றம் கரைந்து போகுமா? குற்றங்கள் செய்தவர்கள் பலரும் இது போல் தண்டனை அனுபவித்து வெளியேறலாம். ஆனால் அந்தக் குற்றத்தின் நிழல் அவர்களைப் பின் தொடரும் என்பதுதான் இது வரை நடந்திருப்பது. இப்போது அந்தப் பார்வையில் மாற்றம் தேவைப்படும் நிலை ஏற்பட்டுவிட்டதா?
ஒரு குற்றம் செய்தவரை வாழ்நாள் முழுவதும் குற்றவாளியாகவே பார்ப்பதுதான் சரியான அறமா? குற்றம் செய்யாதவர்களையும் குற்றம் செய்தவர்களையும் பிரித்துப் பார்க்கவேண்டியிருப்பது எப்போதும் அவசியமாகிறது. தண்டனை என்பது மட்டுமே இந்தப் பிரிவினையை வழங்கிவிடாது. சமூக வெளியில் குற்றம் புரிந்தவர்களுக்கான இயக்கம் குற்றம் புரியாதவர்களின் இயக்கத்துடன் கலக்க முடியாது என்பதுதான் அறத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது.
குற்றவாளிகளின் நெருக்கத்திற்குரியவர்கள் அவர்களை மன்னிப்பது மட்டுமே அவர்களின் குற்றத்திற்கான தண்டனையை விடப் பெரிதாக இருக்கிறது. மன்னித்தல் மட்டுமே குற்றத்திற்கான இயல்பைச் சீராக்கிவிடும் என்பதை ஏற்க முடியவில்லை. எல்லாவற்றையும் மன்னித்தல் என்பதைத்தான் நவீன காலத்திற்குப் பிறகான தத்துவமாகப் பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஒரு முறை அது போன்ற குற்றத்தை அவர்கள் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. தண்டனை அவர்களை மாற்றிவிடும் என்பதுதான் இதற்கான விளக்கமாக இருக்கிறது. குற்றத்தையும் தண்டனையையும் இணை வைத்துப் பார்ப்பதால் இது போன்ற சிக்கல்கள் நெருகின்றன. ஒரு குற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட தண்டனை என்பது அறம் நிலைக்க உருவாக்கப்பட்ட விதியாக இருக்கிறது.
திருமண பந்தத்திற்கு மீறிய உறவு சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. திருமண பந்தங்களுக்குள் நேரும் கொலைகளைச் சட்டத்தால் மன்னிக்கப்படும் காலம் வந்திருக்கிறது. கொலைகள் எல்லாம் பொதுவானவை என்றாலும் கொலைக்கான காரணங்கள் மட்டுமே தண்டனைகளை நிர்ணயிக்கின்றன. அதே காரணங்கள்தான் குற்றவாளிகள் மீதான பார்வையையும் தீர்மானிக்கின்றன.
குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகவே பார்ப்பது ஆரோக்கியம் இல்லை. மன்னித்தல் ஆன்மீக சார்பைக் கொடுத்துவிடும். இரண்டுக்கும் இடையில் இருக்க முடிவது மீண்டும் மனிதப் பண்பை மீட்டெடுக்க உதவலாம்.

Thanks 


Mubeen Sadhika

No comments:

Post a Comment