Saturday, November 10, 2018

1970 க்குப் பிறகு 60% மிருகங்கள் அழிந்துள்ளன..!"- அதிர்ச்சித் தரும் WWF அறிக்கை.

சுமார் 50 வருடகாலத்தில் மற்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் அனைவரும் அழிந்து இந்தியா, சீனா மற்றும் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய நாடுகளில் மட்டுமே மனிதர்கள் பிழைத்திருக்கும் நிலை வந்தால் என்ன ஒரு பதற்றமும், பயமும் இருக்கும். ஆனால், எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அதுதான் நமது துணை இனங்களான மிருகங்களுக்குக் கடந்த 50 வருடங்களில் நடந்துள்ளது என்கிறது 2018 க்கான WWF (World Wide Fund for Nature) அமைப்பின் `Living Planet' ஆய்வறிக்கை. அதன்படி 1970-ம் ஆண்டுக்குப் பிறகு முதுகெலும்பு இனங்களில் சுமார் 60% மனித நடவடிக்கைகளாலும், ஆதிக்கத்தாலும் நடந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. இது பாலூட்டிகள், பறவைகள் என அனைத்தையும் உள்ளடக்கியது.
நாம் எந்த அளவு அழுத்தத்தை மிருகங்களுக்கும் இயற்கைக்கும் தந்துள்ளோம் என்பதை நினைவுபடுத்தும் அபாயமணி இது என்பதை அணிந்துரையில் கூறுகிறார் இதன் நிர்வாக இயக்குநர் மார்கோ லம்பர்டினி. மொத்தமாகப் பூமியில் நடந்துள்ள மாற்றத்தைக் கண்காணித்துள்ள இந்த 75 பக்க அறிக்கையைப் பார்வையிட்டதில் முக்கிய அச்சுறுத்தும் தகவல்களை மட்டும் இங்குப் பட்டியலிடுகிறேன்.
நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை சமீபத்தில் உலகம் மாறியுள்ளது, இயற்கை நமக்கு ஏன் தேவை, பல்லுயிர்களைக் காப்பது ஏன் மிகமுக்கியம் என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது. தூய்மையான காற்று, நீர் தொடங்கி வணிகவளங்கள் வரை இயற்கைதான் நமக்கு வாழ்வளித்து வருகிறது. வருடம் 125 ட்ரில்லியன் டாலர்கள் வரை இயற்கையின் வழியாக மட்டும் நாம் வருமானம் ஈட்டுகிறோம். உலகமயமாக்கலுக்குப் பின் கடகடவென வளர்ந்துள்ள நாமும், நம் வணிகமும் இயற்கையை அப்படியே மறந்துவிட்டோம். கடைசி பனியுகத்துக்குப் பிறகு சுமார் 11,700 ஆண்டுகளாகச் சமநிலையில் இருக்கிறது பூமி. இது இன்னும் 50,000 ஆண்டுகள் தொடரும் என்பது கணிப்பு. ஆனால் நடந்துவரும் அதிவேக மாற்றங்களால் அவ்வளவு காலம் தொடர வாய்ப்பில்லை. இந்த யுகமே `Anthropocene' என்றுதான் அழைக்கப்படுகிறது. இதற்கு மனிதர்கள் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்திய காலம் என்று பொருள்.
1500 க்குப் பிறகு அழிந்த மிருக இனங்களில் 75% அதிகமானவற்றுக்கு மனித நடவடிக்கைகள்தாம் காரணமாக இருந்துள்ளனவாம். இதில் விவசாயத்துக்காக அழிக்கப்பட்ட காடுகளும் ஒரு முக்கியக் காரணம். இன்றும் வாழ்வினங்களுக்கு அதே வேட்டையாடுதல், அளவுக்கு அதிகமான மீன்பிடித்தல், காடுகளை அழித்தல் போன்ற நடவடிக்கைகள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
நிலச் சீரழிவால் நிலம் சார்ந்த சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது 300 கோடிக்கும் மேலான மனிதர்களையே நேரடியாகப் பாதிக்கிறது. தற்போது உலகில் வெறும் கால் பங்கு நிலம்தான் மனித பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் இருந்துவருகிறது. 2050-ம் ஆண்டை எட்டும்போது இது பத்தில் ஒரு பங்காகிவிடும். இந்த நிலச் சீரழிவால் மகரந்த சேவை செய்யும் தேனீக்கள், பூச்சிகள் தொடங்கி பெரிய மிருகங்கள் வரை பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை குறைவது மிகவும் மோசமான நிலையைப் பூமியில் உண்டாக்கும். உலகின் 75% பயிர்கள் இந்த மகரந்தம் இல்லையென்றால் உயிர்பெறமுடியாது. இந்தப் பயிர்களும் மற்ற காய்கனிகளும்தாம் மனிதனின் முக்கிய உணவாக அன்று முதல் இன்றுவரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றம் தொடங்கி நகரமயமாக்கல் வரை நாம்தாம் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு பெரிய காரணமாக இருந்துவருகிறோம். இந்த மகரந்த சேவகர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டியது நமது கடமை.
பூமியில் மண்ணில் இருக்கும் வளங்களும் பெரும் அளவில் சுரண்டப்பட்டு வருகின்றன. உலகின் கால்வாசி உயிரினங்கள் நம் காலின் கீழ் தான் இருக்கின்றன. இதில் இருக்கும் நுண்ணுயிர்கள்தாம் மண்ணின் தன்மையை நிர்ணயிக்கின்றன. கிட்டத்தட்ட மனிதர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மண்ணுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டேதாம் இருக்கின்றன. மண்ணுக்கு மிகவும் ஆபத்தான சூழல் இருக்கும் பரப்புகளில் இந்தியாவும் இடம்பெறுகிறது.
Soil அறிக்கை:
இந்த வருடங்களில் அடுத்த மிகப்பெரிய பாதிப்புகளை கண்டது காடுகள்தாம். இதற்கென்றே `Living Forests' என்ற சிறப்பு ஆய்வறிக்கையை வெளியிடுகிறது WWF. கால்நடை பராமரிப்பு, அதிக அளவிலான வேளாண்மை, காட்டுத்தீ, சுரங்க வேலைகள், நீர் மின் நிலையங்கள், அதிக அளவில் வெட்டப்படும் மரங்கள் ஆகியவைதாம் காடுகளுக்கு முக்கியப் பாதிப்புகளுக்குக் காரணிகளாகப் பார்க்கப்படுகிறது. அதிக அழிவை 2010 தொடங்கி 2030 வரை சந்திக்கவுள்ள இடங்களும் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அமேசான் போன்ற முக்கியக் காடுகள் பெரும் அழிவைச் சந்திக்கின்றன.
Forest அறிக்கை:
நிலம் மட்டுமல்லாமல் நீர்நிலைகளும் மனித பாதிப்புகளிலிருந்து தப்பிக்கவில்லை. பவளப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள்தாம் மிகவும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. 20 கோடிக்கும் மேலான மக்கள் பவளப்பாறைகளை நம்பிதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது அவர்களுக்கே தெரியாது. அவர்களை பெரும் அலைகளிலிருந்தும், புயல்களிலிருந்தும் பாதுகாப்பது அவைதாம். இப்போது இருக்கும் நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் பாதிக்குள் 90% பவளப்பாறைகள் காணாமல் போக வாய்ப்புண்டு. மேலும் வளர்த்துவரும் சாட்டிலைட், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக மீன்பிடித்தல் எந்த அளவு மீன் இனங்களை அழித்துவருகிறது எனவும் தெரியவந்துள்ளது. பிடிக்கப்படும் 1500 மீன் இனங்களில் 10 மட்டும்தான் மீண்டும் பிடிக்கப்படும் எண்ணிக்கையை அடைகிறது. இது மட்டுமல்லாமல் கடல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக்தான். கோடிக்கணக்கான டன்களில் பிளாஸ்டிக் கடல்களில் வருடாவருடம் கொட்டப்படுகிறது. இவை மக்காமல் பல வருடங்கள் கடலிலையே தங்குகின்றன. இவை பலவும் உயிரினங்களின் உணவு சங்கிலிக்குள் நுழைந்துவிடுகின்றன. 90% கடல் பறவைகளின் வயிற்றில் ஏதேனும் பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இந்த நிலை வரும் வருடங்களில் இன்னும் மோசமடையும். கடல் என்றில்லாமல் நல்லநீர் நிலையங்களான நதிகளும், குளங்களும் கூட சமீபத்தில் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பாதிப்புகள் அனைத்தும் உயிரினங்கள் அழியக் காரணமாக உள்ளன. முக்கியமாக `Neotropical' என அழைக்கப்படும் தென்அமெரிக்கா கண்டத்தில் கடந்த 50 வருடத்தில் எண்ணிக்கையில் உயிரினங்கள் கிட்டத்தட்ட 90% குறைந்துள்ளன. அடுத்து அதிக எண்ணிக்கை குறைந்துள்ளது இந்தியாவை உள்ளடக்கிய 'Indo-Pacific' பகுதியில்தான்.
இது பானையின் ஒரு சோற்றுப்பருக்கைதான். மேலும் பல பாதிப்புகள் இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றமும், அழிவும் மனிதம் ஏற்படுத்தியதாகக் கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால் உண்மையில் மனிதம் என்றில்லாமல் நமது பேராசைகளும் அதைச் சுருண்டும் உலக வணிகமும்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறது ஒரு தரப்பு. அவர்கள் பெரும் வணிக முதலாளிகளிருந்து தான் மாற்றம் தொடங்கவேண்டும் என்கின்றனர். ஆனால் அதற்காக இதில் சாமானியனின் பங்கு இல்லவே இல்லை என்று மறுத்துவிடவும் முடியாது. நாம் தொடங்கிய இதை மாற்றுவதற்கான முயற்சி நம்மிடமும் தொடங்கவேண்டும். 
Source_Vikatan.

No comments:

Post a Comment