Wednesday, October 31, 2018

முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதிய தமிழ்ப் படைப்புகள்

முனைவர் மு. இளங்கோவன் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்ஆய்வாளர் ஆவார். தமிழ்நாட்டில்அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்ககங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் சி. முருகேசனார், மு. அசோதை அம்மாள்.

 எழுதிய தமிழ்ப் படைப்புகள்
* மணல்மேட்டு மழலைகள்
* இலக்கியம் அன்றும் இன்றும்
* வாய்மொழிப்பாடல்கள்
* பழையன புகுதலும்
* அரங்கேறும் சிலம்புகள்
* பாரதிதாசன் பரம்பரை
* பொன்னி பாரதிதாசன் பரம்பரை
* பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.)
* நாட்டுப்புறவியல் (வயல்வெளிப் பதிப்பகம்,2006)
* அயலகத் தமிழறிஞர்கள் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
* இணையம் கற்போம் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
* பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு
* செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
* கட்டுரைக் களஞ்சியம்
* அச்சக ஆற்றுப்படை
* மாணவராற்றுப்படை
* பனசைக் குயில் கூவுகிறது
* விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்(ப.ஆ)
* மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்


பிரத்யேக நேர்காணல் பின்வருமாறு:-
கேள்வி : உங்களுடைய பூர்வீகம் பற்றி கூற முடியுமா?
பதில்      : என்னுடைய பூர்வீகம் தமிழகத்திலுள்ள அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம். அங்கு எனது பள்ளிப் படிப்பை முடித்து, திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியமும், அதே கல்லூரியிலேயே பிறகு முதுகலைப் பட்டமும் பெற்றேன். அதன் பிறகு திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றேன்.
கேள்வி : கல்லூரி நாட்களில் நீங்கள் எழுதிய நூல்கள் யாவை?
பதில்      : எனது கல்லூரி நாட்களில் நான் இலக்கியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். சிறுவயது முதலே தமிழின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த காரணத்தால் ஒவ்வொரு நாளும் மரபுக்கவிதைகள் எழுதும் சூழலை உருவாக்கிக்கொள்வேன்.என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் யாப்பிலக்கணம் பயிற்றுவித்தார்.ஆர்வமுடன் கற்றதால் இயல்பாகப் பாடல் எழுதிய வண்ணம் இருப்பேன். அப்படி ஒரு இலக்கிய சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த போது தான் எனது மாணவராற்றுப்படை உருவானது. அதன் பின்பு  பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வின் போது ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பில் எனது படைப்பு நூல் வடிவம் பெற்றது.
கேள்வி :  ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பு எப்படி உருவானது?
பதில்      : அதற்கு ஒரு காரணம் உண்டு. புரட்சிக்கவி பாரதியாரின் மீதுள்ள பற்று காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டு அவரைப் போலவே கவிதைகள் எழுதியவர் தான் கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். ஆனால் பாரதிதாசனுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி என்னுள் எழுந்ததின் விளைவு தான் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற நூல் வெளியிடக் காரணமாக அமைந்தது.
கேள்வி :  தமிழ் மொழியில் உங்கள் பங்களிப்பு?
பதில்      : சங்க நூல்களிலும், நாட்டுப்புறவியல் துறையிலும், தமிழ் இணையத் துறையிலும் கொண்ட ஈடுபாடு காரணமாக, அவைகளை பல தமிழறிஞர்கள் மூலமாக முறையாக படித்து அறிந்து கொண்டேன். அதோடு நான் கற்றுத் தெரிந்து கொண்ட அத்தகைய செவி வழிக் கல்வியை தமிழறிஞர்கள் குரல்களிலேயே ஆவணப்படுத்தியும் வைத்துள்ளேன். ஐம்பெருங்காப்பியங்கள், அகநானூறு, புறநானூறு, ஆற்றுப்படைகள் உள்ளிட்ட பல நூல்களை மின்புத்தகங்களாக உருமாற்றுவதில் எனது பங்களிப்பு உள்ளது.
மேலும் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிய ஆய்வுக்காக பல ஊர்களுக்கு பயணம் செய்து அங்கு வாழும் பாமர மக்களுடன் பழகி, அவர்களிடமிருந்து பல நாட்டுப்புறப் பாடல்களைக் கற்று அவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இத்தகைய நாட்டுப்புறப் பாடல்கள் நமது தமிழர்களின் கலாச்சாரமாக இருந்தது  நம் எதிர்கால சந்ததியினருக்கும் தெரியும் வகையில் அவற்றை சேகரித்துள்ளேன்.
அதோடு பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து பல வகுப்புகள் நடத்திவருகிறேன். இதன் மூலம் பல மாணவர்கள் பயனடைந்து தற்போது இணையத்தில் எழுதத் தொடங்கியுள்ளார்கள்.
இதுவரை 19 நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளேன். இணையத்தில் 1000 பதிவுகளுக்கும் மேல் தமிழ் மொழியைப் பற்றிய என்னுடைய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கேள்வி :  பணியாற்றிய இடங்கள் ?
பதில்      : எனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்து விட்டு, இப்பொழுது புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி வருகின்றேன். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, குவைத் நாடுகளுக்கு ஆய்வுரை வழங்கவும் அவ்வப்போது பயணம் செய்து வருகிறேன்.
கேள்வி :  தமிழ் மொழியில் உங்களது அடுத்த கட்ட பணி?
பதில்      : தமிழ் இலக்கண, இலக்கியம் சார்ந்த பேச்சுக்களை பதிவு செய்வது. உலக அளவில் சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றவற்றை கொண்டு சேர்க்கும் வகையில் அதை MP3 வடிவில் பதிவு செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
கேள்வி : இதுவரை வாங்கிய விருதுகள்?
பதில்       : கடந்த 2011 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் கையால் இளம் அறிஞருக்கான ‘செம்மொழி’ விருது பெற்றேன்.
(பரபரப்பாக நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு இடையே செல்லியலுக்காக நேரம் ஒதுக்கி நேர்காணல் அளித்ததற்கு நன்றி! உங்களது பணி மேலும் சிறக்க செல்லியல் சார்பாக வாழ்த்துக்கள்!)
-பீனிக்ஸ்தாசன்

No comments:

Post a Comment