Wednesday, October 17, 2018

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை


-சுந்தர ராமசாமி
இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிரு ந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுப வங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்ட காரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி , இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.
பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷய ங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும் பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடு மையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்க ளுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோர ணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.
ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மை க்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தி யைப் பற்றி - நாம் இருக்கும் நிலையைப்பற்றி - உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு - மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு - ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு - ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
கேள்வி :மு.வ. ஒரு படைப்பாளி இல்லை என்றீர்கள் ? அதற்குக் காரணம் கூற முடியுமா ? அப்படியென்றால் ஒரு படைப் பாளிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மதிப்பீடு செய்யுங்களேன் . . . ?
பதில் :இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியது தான் படைப்பு. அது தான் அதன் அடிப்படையான பொருள். இவர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். நாவல் என்றால் அது முற்றிலும் புதுமையானதாக இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்கக்கூடிய ஒன்றையோ பிற மொழிகளில் இருக்கக்கூடிய ஒன்றையோ நகல் செய்ததாக இருக்கக்கூடாது. இந்த படைப்பு ஒருவன் வாழ்க்கையை சுயமாக எதிர் கொள்ளுவதன் மூலம் - அந்த எதிர்கொள்ளு தலிருந்து பெறக்கூடிய அனுபவங்களைச் சார்ந்து - அந்த அனுப வங்களின் சாராம்சம் என்ன என்ற agonyியிலிருந்து, வேதனையிலிருந்து - படைப்பு தோன்றுகிறது.
மு.வ. அவருடைய நாவல்களில் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு முன் அறிந்திராத எந்த அனுபவத்தையோ அல்லது கருத்து க்களையோ முன் வைக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் கூறிய கருத்துக்கள் காலம் காலமாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய - அதிகமும் வள்ளுவர் கூறிய - கருத்துக்களே ஆகும். இந்தக் கருத்துக்களின் கூட்டுத் தொகுப்பு ஒரு படைப்பாகாது. படைப்பும் சமூக இயல் சார்ந்த நூல்களும் அடிப்படையில் வேறானவை. திருக்குறள் ஒரு நாவல் அல்ல. காரணம் அது வாழ்க்கையைப் பற்றி ஒரு கவிஞர் கண்டடைந்த முடிவான கருத்துக்களைக் கூறுகிறது. வாழ்க்கையின் அனுபவ ங்களைப் பற்றியோ அந்த அனுபவங்களி லிருந்து இந்தக் கருத்து நிலைக்கு வந்து சேர்ந்த பயணங்களைப் பற்றியோ அந்த நூலில் எந்தத் தடயமும் இல்லை.
ஆக, இரண்டு விதமான நூல்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பு சார்ந்த நூல்கள். மற்றொன்று ஒரு துறை சார்ந்த - விஞ்ஞானம் அல்லது சட்டம் அல்லது மதம் அல்லது அறவியல் போன்ற துறை சார்ந்த - நூல்கள். இவற்றிற்கு அடிப்படையான வேற்றுமை: ஒன்று அனுபவம் சார்ந்து இயங்குகிறது. அதில் முற்றான முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படவில்லை. வாழ்க்கையைப் பற்றிய கவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழ்க்கை சார்ந்த மிக மேலான அனுபவங்கள் தேக்கப்படுகின்றன. மற்றொன்றில் முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படுகின்றன. இந்த முடிவான கருத்துக்களை வற்புறுத்திய ஆசிரியராகத்தான் மு.வ.வை எடுத்துக் கொள்கிறேன். மாறாக வாழ்க்கையைச் சார்ந்த அனுபவங்களை அவர் முன் வைத்தார் என்று என்னால் கூறமுடியவில்லை. அதனால் ஒரு படைப்பாளியாக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கேள்வி :இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக எதைச் சொல்ல முடியும் ?
பதில் :முக்கியமான காரணம் தமிழ் நாட்டில் போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.
மூன்றாம்தர எழுத்தாளரை முதல் தரமான எழுத்தாளராக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால், அரசாங்கம் கருதுமென்றால், அரசியல்வாதிகள் கருதுவார்கள் என்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் அர்த்தம். மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தில் மிக மோசமான நடிகர்களை மிகச் சிறந்த நடிகர்களாக ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்றால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நடிப்பைச் சார்ந்த அளவுகோல் முறிந்து போகிறது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருகிறது. ஆகவே இது ஒரு பெரிய வீழ்ச்சி என்று நம்புகிறேன்.
கேள்வி :இந்த நூற்றாண்டில் தமிழில் மிகச்சிறந்த கலைஞர்கள் யாவர் ?
பதில் :இந்த நூற்றாண்டில் மிகச் சிறந்த கலைஞர்களாக நான் இருவரை மதிக்கிறேன். ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப்பித்தன். இவர்களின் புத்தகங்களையேனும் மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஆளானால் அதுவே பெரிய விஷயம். ஒரு முக்கியமான விஷயம். இதை ஆரம்பமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான மற்ற புத்தகங்களைப் படிக்கலாம். சிறந்த புத்தகங்கள் ஏராளமாகத் தமிழில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்துப் பார்ப்பது அவசியமென்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூறு புத்தகங்களையேனும் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகங்களை நீங்கள் சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மையான புத்தகங்கள் உங்கள் நூல் நிலையங்களில் இருக்கக் கூடியவைதான். எந்தவிதமான கஷ்டத்துக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகப் பெரிய செல்வங்கள் நம்மை வந்தடையக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி :படைப்பாளிகளில் இரண்டாந்தர படைப்பாளியை எந்த அளவுகோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள் ?
பதில் : இப்போது பல்வேறு வகைப்பட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு அளவுகோல் ஒரு படைப்புக்கும் காலத்துக்குமான உறவு. ஒரு எழுத்தாளன் அவனுடைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவீன மனிதனாக இருக்க வேண்டும். அவனது உடல் இன்று வாழ்கிறது என்ற காரணத்திற்காக அவனை இந்த நூற்றாண்டு மனிதனாகக் கருதி, கருத்துலகம் சார்ந்து, அனுபவ உலகம் சார்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
இன்று வந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான புத்தகங்களும் படைப்புக்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவை. ஆக ஒரு படைப்பாளிக்கும் இந்த காலத்திற்கும் இருக்கக்கூடிய உறவு நிலை காலத்தால் அவன் பெற்ற பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் மூலம் தன்னை நவீன மனிதனாக அவன் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறைவு, இவைதான் படைப்புக்கு அடிப்படையான கூறுகள் என்று நினைக்கிறேன். இதைச் சார்ந்து பல்வேறுபட்ட கூறுகள் இருக்கின்றன. மொழியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான் ? சிக்கனமாகப் பயன்படுத்துகிறானா ? மொழியை விரயம் செய்கிறானா ? மிகப்பெரிய அனுபவங்களை அவனால் அறிய முடிகிறதா ? பல்வேறுபட்ட அர்த்தப் பரிமாணங்களை அந்த படைப்புக்களால் தர முடிகிறதா ? உண்மையென்று முற்றாக நம்பக்கூடிய, நம்பச் செய்துவிடக்கூடிய ஒரு கற்பனை வளத்தை அவன் கொண்டிருக்கிறானா ? மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை அணுக வேண்டும் என்ற வற்புறுத்தல் அந்த படைப்பு நமக்குத் தருகிறதா ? நம்முடைய கவனத்தை முழுமையாக அந்தப் படைப்புக் கேட்டு நிற்கிறதா ? அல்லது அரைத் தூக்கத்திலேயே அந்தப் படைப்பைப் படிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறதா ? என்பது போன்ற பல்வேறுபட்ட அளவுகளை வைத்து உயர்ந்த படைப்புக்கும் இரண்டாம் பட்சப் படைப்புக்குமான வேற்றுமைகளைக் கண்டு கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
[நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி முதுகலை வணிக இயல் துறை பேரவைத் தொடக்க விழாவில் பேசியது - 28.10.1988]
(இவை என் உரைகள் நூலிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்)
நன்றி : இவை என் உரைகள்-சுந்தர ராமசாமி-காலச்சுவடு பதிப்பகம்

No comments:

Post a Comment