என்னுடைய “இப்படி ஒரு காலம்“ என்ற கட்டுரைப் புத்தகத்தின் முதல் பதிப்பில் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இரண்டாவது பதிப்பைச் செய்யுங்கள் எனப் பலரும் கேட்டிருந்தனர். ஆனாலும் மனதில் இன்னமும் தயக்கமுண்டு. இரண்டாவது பதிப்புக்கு தமிழ்ச் சூழலில் அவ்வளவு வரவேற்பிருக்குமா என.
ஆனால், இது சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “மதக வன்னிய“ Mathaka Wanniya" என்ற தலைப்பில் வெளியாகியபோது மூன்று நாட்களிலேயே 1000 பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது பதிப்பு வெளியாகி அதுவும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.
இதைப்பற்றி இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்த அனுஷா சிவலிங்கம் நேர்காணல் ஒன்றில் கீழ் வருமாறு சொல்லியிருக்கிறார் -
கேள்வி - இந்த நூலுக்கு சிங்கள சமூகத்திடம் வரவேற்பு இருந்ததா?
பதில் - “நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூடுதலாக இருந்தது. புத்தக அறிமுக நிகழ்வு நடத்த முன்னர் சமூக ஊடகங்கள் ஊடாக இவ்வாறு ஒரு புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக பகிர்ந்து மூன்று நாட்களுக்குள் 1000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் அந்த நூலினை பலர் வாங்க முயன்ற போதும் , பிரதிகள் முடிவடைந்து விட்டன. அந்த நூலினை வாசித்த பலர் தம்மையும் தமது இனத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க தொடங்கினார்கள். அதன் பின்னர் இந்த நூல் தொடர்பில் விமர்சனங்கள் , பாராட்டுக்கள் என பல கடிதங்கள் எனக்கு வந்தன. அவை எனக்கு மட்டும் அல்ல அந்த நூலினை தமிழ் எழுதிய கவிஞர் கருணாகரனுக்கும் பல கடிதங்கள் சென்றன. பல பிரபலமான சிங்கள எழுத்தாளர்கள் அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர். நூல் வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த வாரம் கூட ஒரு கடிதம் வந்தது. அதனை அது ஒரு சிரேஸ்ட சட்டத்தரணி எழுதி இருந்தார். அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் , அந்த நூலில் யாழில்.இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமரசாமியின் வழக்கு தொடர்பில் தான் தேடி வருவதாகவும் எழுதி இருந்தார். அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமை ஊடாக சில சிங்கள மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தமையை நினைத்து நான் பெருமை கொண்டேன்.“
(இதைச் சிங்கள மொழிக்கு எடுத்துச் செல்வதற்கு முதன்மைப் பங்களிப்பைச் செய்தவர் விமல் சாமிநாதன். விமலின் நல் நோக்கமும் ஆர்வமும் அதற்கான உழைப்பும் எப்போதும் மதிப்புக்குரியன.
விமலின் வழிகாட்டலில் இப்படி ஒரு காலத்தை மதக வன்னிய என சிங்களத்துக்கு எடுத்துச் சென்றவர் அனுஷா. ஆச்சரியமூட்டும் வகையில் மிகச் சிறிய வயதிலேயே இந்தப் பணியை அவர் செய்திருக்கிறார்.
இருவருக்கும் எப்போதும் என்னுடைய அன்பும் நன்றிகளும்)
No comments:
Post a Comment