Friday, December 8, 2017

இசைபுயலும், நடனபுயலும் ...

Vijay Mahindran
ஏ.ஆர்.ரஹ்மான் பல துள்ளல் இசைப் பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், முதன்முதலில் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்ட பாட்டு ஜென்டில்மேன் பட...த்தில் வரும் 'சிக்குபுக்கு ரயிலே'. சுரேஷ் பீட்டர்ஸ் பாடிய முதல் பாட்டு.
அதுவரை கேட்காத இசை. ஆங்கிலப் பாடல்களில் மட்டும் கேட்டுள்ள ஒலிப்பதிவுத் தரம். அருமையான டிஜிட்டல் ரிதம். கவிஞர் வாலியின் இளைஞர்களை கவரும் வரிகள். இப்படிப் பல சிறப்புகளுடன் கேசட்டில் கேட்டவர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. படம் வருவதற்கு முன்னரே பாடலைக் கேட்டு ஆடியவர்கள் ஏராளம். இந்தப் பாடலை எப்படி படமாக்கப் போகிறார்கள்? யார் இந்தப் பாடலுக்கு நடனமாடப் போகிறார்கள்? என்ற பேச்சும் இருந்துகொண்டே இருந்தது. ஜென்டில்மேன் படம் வெளிவந்த அன்று அதற்கான விடை கிடைத்தது. அதற்கு நடனப் புயல் பிரபுதேவா நடனமாடியிருந்தார்.
இயக்குநர் ஷங்கர் அற்புதமாக அந்தப் பாடலை படமாக்கியிருந்தார். ரயிலின் தடதடப்புக்கு நடுவே பிரபுதேவாவின் ஆட்டம் அந்தப் பாடலை எல்லா திரையரங்குகளிலும் ஒன்ஸ்மோர் கேட்கவைத்தது. சிக்குபுக்கு ரயிலே பாடல் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமானது. பிரபுதேவாவின் நடனமும் ரஹ்மானின் இசையும் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என எல்லா இடத்திலும் பட்டையைக் கிளப்பின. பிரபுதேவா அதற்குமுன்னர் தேவாவின் இசையில் சூரியன் படத்தில் 'லாலாக்கு டோல் டப்பிமா', இளையராஜா இசையில் வால்டர் வெற்றிவேல் படத்தில் 'சின்ன ராசாவே' ஆகிய பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்றிருந்தார். 'இதயம்' படத்தில் 'ஏப்ரல் மேயிலே' பாடலுக்கும் அவரது நடனம் தனியாக கவனிக்கப்பட்டது. பிரபுதேவா மேற்கத்திய பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனால் கவரப்பட்டவர். அவரைப்போலவே கண்ணாடிமுன் நின்று ஆடிப் பழகியதாக அவரே பல பேட்டிகளில் சொல்லியுள்ளார். ஆனால் ஜாக்சனின் நடனம் மேற்கத்திய இசையின் பீட்-களுக்கு தகுந்தவாறு துள்ளலாக இருக்கும்.
அப்படி ஆட வேண்டும் என விரும்பிய பிரபுதேவாவுக்கு அத்தகைய பீட்ஸ் ரஹ்மான் இசையில்தான் கிடைத்தது. தனது வகை நடனத்தை சுதந்திரமாக ஆட ரஹ்மானின் இசை அவருக்கு உதவியது. தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை கம்போஸ் செய்வதில் ரஹ்மான் சிறந்த வல்லுநர். ரஹ்மானின் மிகப்பெரிய பலம் அவரது ரிதம்-சென்ஸ் என்பதை மணிரத்னம் ஒருமுறை குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக டிரம்ஸ் சிவமணியும் ஆரம்ப காலத்தில் இருந்தே ரஹ்மானுடன் வாசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், ரிதம் புரோகிராமராக இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட்டும் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
ரஞ்சித் பரோட்தான் பிரபுதேவா நடித்த இன்றும் நினைவில் உள்ள சில பாடல்களைக் கொண்ட விஐபி படத்துக்கு இசையமைத்தவர். இந்தியிலும் பல படங்கள் இசையமைத்துள்ள ரஞ்சித், ரஹ்மானுக்கு இப்போதும் வாசித்து வருகிறார். இந்தப் படத்தின் பாடல்கள் கொஞ்சம் ரஹ்மான் ஸ்டைலில் இருப்பதால் பலரும் விஐபி-க்கு ரஹ்மான் இசை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனது படங்களின் தாளக்கட்டுகள் புதிதாக அமைய வேண்டும் என்பதில் நிறைய மெனக்கெடுவார் ரஹ்மான். அவர் இசையமைக்கும்போது நோட்ஸ் கொடுப்பார். சில இடங்களில் இந்த விதமான இசைதான் வேண்டும் என்பதை வாயிலே பாடிக் காட்டவும் செய்வார். ரஹ்மான் தவில் வித்வான் ஒருவருக்கு ரிதம் சொல்லும் வீடியோ யூடியூபில் இருக்கிறது. இந்த இடத்தில் இப்படி மாற்றிக்கொள்ளுங்கள் என வாயிலேயே தவில் இசையை சொல்லுகிறார். அதன்பிறகு, வித்வான் வேறு மாதிரி வாசிக்க ஆரம்பிக்கிறார். அதை ரிக்கார்ட் செய்து கொள்ளுகிறார். அந்தளவு தாளக்கட்டில் கவனமாக இருப்பதால்தான் அவரது துள்ளல் இசைப் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின்றன.
அடுத்த படமான காதலன் படத்தில் பிரபுதேவாவை ஹீரோவாக ஷங்கர் அறிவித்ததும், இந்தப் படம் பெரிய அளவில் பாடல்களுக்கும் நடனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கம்போல, படத்தின் பாடல்கள் படம் வெளிவரும்முன்பே அதிரிபுதிரி ஹிட் ஆனது. ரஹ்மான் சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது இவர்களுடன் இணைந்து பாடிய 'டேக் இட் ஈஸி ஊர்வசி' பாடலின் தாக்கம் கல்லூரி மாணவர்களிடையில் பெரிய அளவில் இருந்தது. கொண்டாட்டத்தை உருவாக்கிய அந்தப் பாடலின் ரிதமுக்கு பிரபுதேவா ஆடியிருந்த நடனமும் மிக பிரபலம். இசைப்புயலின் பாடலுக்கு நடனப்புயல் ஆடிய ஆட்டம் அருமையாக இருந்தது. காதலன் படத்தில் ’முக்காலா முக்காபுலா' பாடல் எட்டுத் திக்கும் ஹிட்டானது. அதற்கு பிரபுதேவா பாராட்டும்படி நடனம் அமைத்திருந்தார். அதிலும் பாடலின் இறுதியில் வரும் டிரம்ஸ் பீட்டுகளுக்கு தலை இல்லாத முண்டமாக பிரபுதேவா போட்ட ஆட்டம் அந்தப் பாடலை இந்தியா முழுவதும் பேசவைத்தது. பாராட்டப்பட்டது
இந்திப் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றும்படி பெரிய நடிகர்கள் பிரபுதேவாவை கூப்பிட்டது அப்போதுதான். தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டே இந்தியில் பெரிய படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றினார் பிரபுதேவா. அகில இந்திய அளவில் பிரபுதேவாவை கொண்டுபோய் நிறுத்தியதில் ரஹ்மான் இசைக்கு முக்கியப் பங்குண்டு என்றே சொல்லவேண்டும்.
பிரபுதேவாவும் ரஹ்மான் பாடல்களைப் படமாக்க கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அடுத்த படமான லவ் பேர்ட்ஸ் படத்தை பி.வாசு இயக்க, பிரபுதேவா-நக்மா-வடிவேல்-ரஹ்மான் எனக் காதலன் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. இந்தப் படத்திலும் பிரபுதேவாவின் நடனங்களுக்காக சிறப்பான இசையைக் கொடுத்திருப்பார். 'மலர்களே மலர்களே' மெல்லிசை பாடல்களுக்கு நடுவே துள்ளல் இசையை நுழைத்திருப்பார் ரஹ்மான். கமான் கமான் காமாட்சி, சம்பா சம்பா, நோ பிராப்ளம் என அனைத்துப் பாடல்களும் பிரபுதேவாவின் வித்தியாசமான நடனங்களுக்கு வழியமைத்தன. லவ் பேர்ட்ஸ் படம் பெரிய அளவில் ஹிட் ஆகாமல் போனாலும் அதன் பாடல்கள் இன்றளவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு, பெரிய பட்ஜெட்டில் பிரபுதேவாவை இரண்டு வேடங்களில் நடிக்கவைத்து உருவான படம்தான் மிஸ்டர் ரோமியோ. இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டி, மதுபாலா பிரபுதேவாவுடன் போட்டி போட்டு நடனக் காட்சிகளில் நடனமாட முயன்று இருப்பார்கள்.
'ரோமியோ ஆட்டம் போட்டால்' பாடல் இன்றளவும் ரஹ்மானின் துள்ளல் இசைக்கு பாராட்டப்படுகிறது. மெல்லிசை, மோனலிசா, முத்து முத்து மனம் முத்தாடுது என தமிழில் இந்திப் பாடகி இலா அருண் பாடிய பாடல் என கலக்கல் ஆல்பமாகவே மிஸ்டர் ரோமியோ இருந்தாலும் பலவீனமான கதையால் பாக்ஸ் ஆபிசில் ஓடவில்லை. இதற்கு அடுத்த படம்தான் மின்சாரக் கனவு. ரஹ்மானின் நெடுநாள் நண்பரான ராஜீவ்மேனனுக்கு இசையமைத்த படம். பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் நடித்து ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தில் காலத்தால் அழியாத நல்ல பாடல்களை ரஹ்மான் கொடுத்துள்ளார்.
வெண்ணிலவே... வெண்ணிலவே, ஊ... லலா லா, அன்பென்ற மழையிலே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே போன்ற பாடல்கள் இன்றும் கிளாசிக் அந்தஸ்தில் இருக்கின்றன. மின்சாரக் கனவு படத்துக்கு ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனம் அமைந்ததற்கு சிறந்த நடன இயக்குனராக பிரபுதேவாவுக்கு தேசிய விருது கிடைத்தது. ’தங்கத்தாமரை மகளே’ பாடலை இந்தப் படத்தில் பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ’ஊ... லலா லா’ பாடலைப் பாடியதற்காக சித்ராவும் தேசிய விருது பெற்றனர். பாடகர் உன்னி மேனனுக்கு இதே ’ஊ... லலா லா’ பாடலுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருதும் கிடைத்தது. ரஹ்மானும், பிரபுதேவாவும் ஏக் சத்யம் என்ற பாடலை ஜெர்மனியில் மைக்கல் ஜாக்சனுடன் மேடையில் சேர்ந்து பாடி நடனமாடியதும் வரலாறு. இருவரின் கூட்டணியும் சிறப்பான வெற்றிக் கூட்டணியாக இந்திய திரையுலகில் இருந்தது.

No comments:

Post a Comment