Wednesday, November 8, 2017

நீலக் குறிஞ்சி



மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள்
பூத்த வருடம் நான் பிறந்ததாக
பாட்டி சொன்னாள்
...
இளமை தளிர் கொண்ட காலத்தில்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்தபோது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்
குறிச்சிப் பூக்களின் நீலவெளிச்சம்
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது
கித்தார் மரத்துப் பூக்களின் வாசனை
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்
நீர்க் கடம்ப மரத்தின் தாகத்தை
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்கப்படுவதை அறிவேன்
பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை
தாங்கயியலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்
காத்திருப்பு தனிமையில் இடறுவது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது
நீலத்தின் நிவறுதல் நிலைமொழியாய்
வானத்திற்கு ஏகியதும் இங்ஙனமே
காட்டில்தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்
Composed By - Thenmozhi Das

No comments:

Post a Comment