Saturday, November 4, 2017

ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு

எம்.ஏ.சுசீலா
விரிவான புனைவுகளுக்கும், பன்முக தரிசனங்களுக்கும் – பிற உரைநடை இலக்கிய வடிவங்களில் சாத்தியமில்லாத அபாரமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நாவல் என்ற மிகச் சவாலான இலக்கிய வடிவம், அதன் விஸ்தாரமான பரிமாணங்களுடனும், லட்சணங்களுடனும் நவீன தமிழ் இலக்கியத்தில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளதா என்ற முக்கியமானதொரு வினாவை முன்வைத்து அதற்கான விடையை விரிவான, தருக்கபூர்வமான வாதங்களுடனும், சுடும் நிஜங்களுடனும் தீவிர இலக்கியத் தளத்தின் முன்பாக எடுத்து வைக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்னும் அவரது முதல் திறனாய்வு நூல்.
ஜெயமோகனின் முதல்நாவல், முதல் சிறுகதை ஆகிய பிறவற்றைப் போலவே பிரமிப்புக் கலந்த வியப்பைத் தோற்றுவிக்கும் இந்நூல் , வித்தியாசமானதொரு விவாதச் சூழலில் முகிழ்த்திருக்கிறது ; இலக்கியப் பூசல்களால் நேரும் கருத்து மோதல்களும் கூடத் தேர்ந்ததொரு இலக்கியவாதிக்குச் சாதகமானதொரு படைப்பூக்க மனநிலையை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதற்கு இந்த நூலையும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் குறிப்பிட முடியும்.
978-81-8493-386-4_b1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் உரைநடை என்ற வடிவம் பரவலாக நடைமுறைக்கு வந்து, அதுவே கதைக்கான கருவியுமான பின்னர், படைப்பு, ஆய்வு ஆகிய தளங்களிலும், கல்விக்கூடங்களிலும் மேற்கத்திய அளவுகோல்களின் அடிப்படையிலேயே அதன் இலக்கணம் தொடக்க நிலையில் வரையறைப்படுத்தப்பட்டது.
’உங்கள் அளவுகோலை வைத்து என் படைப்பை அளக்க முயலாதீர்கள்… என் படைப்பை வைத்து உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளைக் கூற வைத்தது இவ்வாறான போக்குத்தான்.
தமிழின் இலக்கிய ஊடகமாக உரைநடை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் நமக்கு முன்மாதிரியாக இருந்தவை மேற்கத்திய இலக்கியங்கள் மட்டுமே என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை; எனினும் அந்தப் பேரிலக்கியங்களின் பாதையிலும் பயணிக்காமல், தமிழ்ப் பாரம்பரிய மரபு வேர்களையும் அத்துடன் ஒருங்கிணைக்காமல் புனைகதையின் பல வடிவங்களும் தமிழ்ச் சூழலில் பிறழ்ச்சியான புரிதலுடனேயே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதே இந்நூலில் ஜெயமோகன் வைக்கும் அழுத்தமான வாதம்.
சுருக்கமாகச் சொன்னால் சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.
’வாசக இடைவெளி’ என்பதே இந்நூலில் அவர் முன்மொழியும் முதன்மையான கருதுகோள். அதன் அடிப்படையிலேயே புனைகதை வடிவங்கள் மூன்றையும் பின் வருமாறு பாகுபாடு செய்கிறார் அவர்.
வாழ்க்கை அனுபவத்தின் பல கூறுகளில் குறிப்பிட்ட ஒன்றின் முழுமையைக் குறிப்பால் உணர்த்தும் சிறுகதையின் வடிவம் கச்சிதமானது ; ஒருமைப்பாடு கொண்டது. வாசகன் நிரப்பிக் கொண்டாக வேண்டிய இடைவெளி அதன் முடிவில் மட்டுமே பொதிந்திருக்கிறது.
வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவல், வலை போல நாலாபுறமும் கிளை பரப்பிப் பின்னிப் பின்னி விரியும் நாவல், தனது நகர்வை ஒரேதிசை நோக்கியதாக அல்லாமல் , ஒருமைப்பாடு என்னும் மையப்புள்ளியை முற்றிலும் தவிர்த்ததாய் அமைத்துக் கொள்ளும் நாவல், நிறைய இடைவெளிகளுக்கு, வாசகக் குறுக்கீடுகளுக்கு இடம் தருவது.
அந்த மௌன இடைவெளிகளை வாசகன் தன் கற்பனையால் நிரப்பிக் கொள்ளும்போதுதான் அந்த வடிவத்தின் பிரம்மாண்டமான தரிசனம் அவனுக்குச் சித்தியாகிறது.
சிறுகதைக்குரிய ஒருமைப்பாடும், நாவலுக்குரிய விவாதத் தன்மையும் ஒருங்கிணைந்து இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதான குறுநாவல், நாவலளவுக்கு இல்லையென்றாலும் சிறுகதையைப் போலன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வாசக இடைவெளிகளுக்கு இடமளித்துக் கொண்டே மையத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.
சிறுதை காட்டுவது காலத்தின் ஒரு துளி,
குறு நாவல் காட்டுவது காலத்தின் சிறிய நகர்வு,
நாவலில் படமாக விரிவது காலத்தின் பிரவாகம்.
குறிப்பிட்டதொரு காலப் பின்னணியில் அமைந்தாலும் எல்லையற்ற காலத்தின் சாயலைக் காட்டுவதன் மூலமே நாவல் மானுடப் பொதுத் தன்மையைச் சாத்தியப்படுத்துகிறது என்று கூறும் நூலாசிரியர் அதற்கு ஏற்ற உதாரணமாக தால்ஸ்தாயின் ‘போரும் அமைதியும்’ நாவலைக் காட்டுகிறார்.
தமிழின் பண்டைக் கதைக் கூற்று வடிவமாகிய காப்பியத்தின் நவீன உரைநடை மாற்றுவடிவமே நாவல் என்ற தவறான உள்வாங்கலைத் தனது ‘நாவல் இலக்கியம்’ நூல் மூலம் ஓரளவு தகர்த்தவர் இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி கைலாசபதிஅவர்கள்.
அந்தக் கருத்தை இன்னும் வளர்த்தெடுத்துக் கொண்டுபோய் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்க்கிறது ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’. காவிய மரபிலிருந்தே நாவல் கிளைத்தபோதும், காவியம், நாவல் ஆகிய இரண்டுமே தத்துவங்களின் கலை வடிவங்களானபோதும்… தான் முன் வைக்கும் தரிசனத்தை வலியுறுத்துவது காவியத்தின் தத்துவம் என்றும், மாறாகத் தன் காலச் சமூகத்தையும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் காவியம் நிறுவிவிட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்வதே நாவல் என்றும், அதுவே நாவல் வடிவம் விரிவும், வீச்சும் பெறுவதற்கான முதற்படி என்றும் குறிப்பிடும் ஜெயமோகன், “காவியத்தை முழுமையாகக் கழித்துவிடும் எதிர்காவிய வடிவமே நாவல்’’ என்கிறார்.
தமிழ்மொழியின் படைப்புச் சூழலில் நிலவிய பிரசுர வசதிக் குறைபாடுகள், தொடர்கதை ஆதிக்கம் ஆகியவவை நாவலின் வடிவக் கற்பனைக்குத் தடையாக அமைந்து விட்டதை வேதனையோடு நினைவு கூரும் ஜெயமோகன், அந்தக் காரணத்தாலேயே நல்ல நாவல்களாக மலர்ச்சி பெற்றிருக்க வேண்டிய பல ஆக்கங்கள், வெறும் உணர்ச்சிக் கதைகளாகவும், நீள் கதைகளாகவும் மட்டுமே மாறிப் போய்விட்ட அவலத்தையும் எடுத்துக் காட்டி, ’’தமிழில் தொடர்கதை வடிவம் கொண்ட மிகப் பெரிய பலி தி.ஜானகிராமன்’’என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
புனைவின் தருக்க ரீதியான பின்னலுக்கிடையில் குறுக்கீட்டையோ , இடைவெளிகளையோ அனுமதிக்காத படைப்புக்களை – சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் ஒருமைப்பாடு குன்றாமல் கதையைச் சொல்லிக் கொண்டு போகும் உணர்ச்சிக் கதைகளாகக் கொள்ளலாம்;
கதைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் புனைவில் வித்தை காட்டி ஒவ்வொரு அத்தியாயத்திலும் உச்சம் வைக்கும் வணிக ரீதி கொண்ட பரபரப்பான நீள் கதைகளாகக் கொள்ளலாம்;
வெகுஜனப் பார்வை தவிர்த்துக் கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நெடுங்கதைகள் சிலவற்றையும் நீள் கதைகளாகக் கொள்ளலாம். ஆனால் அவற்றை நாவல் என்ற பிரிவில் ஒருக்காலும் உள்ளடக்க முடியாது என்ற வாதத்தை முன் வைத்து இது நாள்வரை அவற்றை நாவல்களாகப் பூப்போட்டு வந்த பிரமைகளைக் கறாராக நொறுக்கி விடுகிறது ஜெயமோகனின் தருக்கம்.
அவரது கணிப்பில் கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாளும்’ சாண்டில்யனின் ‘யவன ராணி’யும், நா.பா வின் ‘குறிஞ்சி மலரும்’ சற்றுத் தரமான உணர்ச்சிக் கதைகளாகின்றன. தி.ஜா வின் ‘மோகமுள்’ளும், ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும்’, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லு’மும், சின்னப்ப பாரதியின் ‘தாகமும்’ குறிப்பிடத்தக்க நீள்கதைகளாகின்றன. ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்களும்’, தி.ஜாவின் ‘அம்மா வந்தாளும்’, எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’யும்  சா.கந்தசாமியின் ‘சாயா வனமும்’ குறுநாவல்கள் என்று மட்டுமே ஜெயமோகனால் வகைப்படுத்தப்படுகின்றன.
எண்ணற்ற வாசகக் குறுக்கீடுகள், முடிவற்ற காலம் இவற்றின் பின்னணியின்றிப் பக்க நீட்சி ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவற்றை நாவல் என்ற வகைப்பாட்டில் இணைப்பது பொருத்தமற்றது என்பதையே ‘ குறுநாவல்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக முன் வைக்கிறார் ஜெயமோகன். தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.
ஆனால் இந்த முடிவையும், வகைப்படுத்தலையும் எட்டுவதற்கு ஜெயமோகன் முன்வைக்கும் அடுக்கடுக்கான விவாதங்களையும் மேற்கத்திய, மற்றும் பிற மொழி இந்திய நாவல்களிலிருந்து காட்டும் மேற்கோள்களையும் அவரது நூல்வழி விரிவாகப் படிக்கும்போதுதான் அவரது கருதுகோள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும், அதற்கான நேர்மையான முயற்சியை எந்த அளவுக்கு அவர் மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
தான் அமைத்துக் கொண்ட கருதுகோளை ஒட்டி மேற்குறித்த பகுப்புக்களைச் செய்தபோதும் முன்னர் குறிப்பிட்ட உணர்ச்சிக்கதை மற்றும் நீள் கதைகளை ஜெயமோகன் ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளி நிராகரித்து விடுவதுமில்லை. காவியத்தின் நிழலாக , வாசகர்களைக் கனவுலக சஞ்சாரத்தில் ஆழ்த்தி உணர்வுகளை மிகைப்படுத்திக் காட்டுவதாக விமரிசித்தாலும் பொன்னியின் செல்வனின் நிலக்காட்சிகளையும்,சிவகாமியின் சபதத்தில் வெளிப்படும் சிற்ப,சித்திரக் கலைத் தகவல்களையும் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது என்று கூறும் ஆசிரியர் , அவற்றை நாவல் என்ற பெயரால் அழைக்க முடியாதே தவிர இலக்கியமல்ல என்று ஒதுக்க முடியாது என்கிறார்.
அவற்றைப் பேரிலக்கியங்கள் எனக் கருதுவதும் பிழை, வெறும் வெகுஜன எழுத்துத்தான் என்று நிராகரிப்பதும் சரியல்ல என்பதே அவரது முடிவு. அது போலவே கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நீள்கதைகளிலும் கூட அவற்றின் சமூகப் பங்களிப்பும், படைப்பாளியின் சித்திரிப்பு, மொழிநடை ஆகிய இலக்கிய ஆளுமைகளும் போற்றுதலுக்கு உரியன என்பதே அவரது நடுநிலைப் பார்வை. பின்னாளில் வெளிவந்த ‘நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’, ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ ஆகிய விமரிசன நூல்களிலும் கூட இதே போக்கிலான சமநிலத் தன்மையை ஜெயமோகனிடம் காண முடிந்திருக்கிறது.
இறுக்கமான, செறிவான நாவல்கள் நாவலின் சவாலைத் தவற விட்டு விடுவதாகவும், முழுமையாக விரிந்து வாழ்வை அள்ள முயல்பவையே நாவல்கள் என்றும் கூறும் ஜெயமோகன் அத்தகைய நாவல் வடிவத்துக்கான தமிழ்ச்சூழல் முயற்சிகளாக – (இத் திறனாய்வு நூல் வெளி வந்த காலகட்டத்திற்குள்) நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ , க.நா.சுவின் ‘பொய்த்தேவு’, சுந்தரராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புக்கள்’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ ஆகிய சில படைப்புக்களைச் சுட்டுகிறார். அவற்றையும் கூட இவரது கணிப்பில் முழுமை பெற்றவை என்று சொல்லி விட முடியாது; இவர் வகுத்துக் கொண்ட கருதுகோளை ஓரளவு நெருங்கி வருபவை என்று மட்டுமே அவற்றைக் கூற முடியும்.
இலக்கிய வடிவங்கள் கால மாற்றத்தாலும்,சமூக அரசியல் சித்தாந்த மாற்றங்களாலும் நாளும் மாறிக் கொண்டே வருபவை. ’’நவீனத்துவம் வழியே தமிழில் உருவாகி இருந்த குறுகிய நாவல் வடிவத்தை உடைத்துத் திறந்து ஒரு பெரிய பரப்பை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சி’’யாகவே தன் திறனாய்வு நூலை இன்று தான் காண்பதாக இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடும் ஜெயமோகன், விஷ்ணுபுரம், உபபாண்டவம், காவல் கோட்டம், ஆழி சூழ் உலகு, நெடுங்குருதி, மணற்கடிகை எனப் பின்நவீன காலகட்டத்தில் வெளிவந்த நாவல்களுக்காக அன்றே தான் முன்வைத்த வாதங்களாகவே இந்நூலின் கருத்துக்கள் தமக்கு இப்போது படுவதாகவும் கூறுகிறார். ’நாவல் கோட்பாடு’ என்னும் இந்த நூலுக்குள் ஆழ்ந்து பயணிக்கும்போது நமக்கும் அது பொருத்தமானதென்றே தோன்றுகிறது.
வெற்றிச் சூத்திரத்துக்கான சூட்சுமம் சொல்லத் தெரிந்தவன் பெரும்பாலும் நல்ல வித்தைக்காரனாக இல்லாமல் போய்விடுவதே பொதுவான உலக நியதி. இதிலும் கூட விதி விலக்காக இருப்பதே ஜெயமோகனைத் தனித்துவமாகக் காட்டும் சிறப்பு.
Thanks

http://solvanam.com/

No comments:

Post a Comment