Saturday, September 16, 2017

அன்னா அக்மதோவா கவிதைகள்

மொழியாக்கம்: வ.கீதா, எஸ்.வி. ராஜதுரை
ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்....
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில்

மொழியாக்கம்: தி.இரா.மீனா

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் –...
நிமிடங்களை நூற்றாண்டுகளாக முடிவற்றவைகளாக உணர்வேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திருந்தால் —
மீண்டும் இரக்கமற்ற வகையில் நெஞ்சுக் காயத்தோடு.
நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் -
இருட்டிலும் உறைபனியிலும் காற்றாய்க் கிடப்பேன்
ஒரு முறை உன்னைப் பார்த்து விட்டால் —
ஏதோ ஒன்றால் கருக்கப்பட்டு சுருங்குவேன்

நான் உன்னைப் பார்க்க விரும்பினால் —
தேவதைகளின் கரங்கள் சொர்க்கத்திற்கு என்னை அனுப்பும்
நான் ஒருமுறை உன்னை பார்த்திருந்தால் -
நரகத்தின் கொடுமைகள் தரப்பட்டிருக்கும்
என் அமைதிக்குத்தான் இழப்பு
உன்னுடனோ அல்லது நீயில்லாமலோ —அது சிதைவுதான்
எனக்கு பூமி கிடைக்கவில்லை

நான் சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவள்.

வெள்ளை இரவு

மொழியாக்கம்: தி.இரா.மீனா
நான் கதவைப் பூட்டவில்லை
...
மெழுவர்த்திகளையும் ஏற்றவில்லை,
நீ அறியவும் மாட்டாய், கவலையுமில்லை
தூங்கப் போகுமளவுக்கு
எனக்கு பலமில்லை
வயல்வெளிகள் நிறமிழந்தன
சூரியாஸ்தமனம் பைன்மரங்களை இருளாக்கியது
எல்லாம் இழந்த நிலைதான்
இந்த வாழ்க்கை சாபமான நரகம்தான்
கதவருகில் உன்குரல் கேட்டு போதையாகிறேன்.
நீ வருவாயென நிச்சயம் தெரியும்

அந்த எதிரொலி

மொழியாக்கம்: தி.இரா.மீனா

கடந்த காலத்திற்கான பாதைகள் என்றோ மூடப்பட்டுவிட்டன...
நான் இறந்த காலத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்யமுடியும்?
அதில் என்ன இருக்கிறது?இரத்தத்தால் உரசப்பட்ட கற்கள்
அல்லது சுவறான கதவுச்சிறை
அல்லது எதிரொலி, அதுதான் என்னை எப்போதும் வருத்துகிறது
அமைதி, உறுதி என்று நான் பிரார்த்தனை செய்தபோதும்
எதிரொலி ஒரு பழங்கதையாகவே இருக்கிறது.

அதையும் என்நெஞ்சில் மட்டுமே சுமக்கிறேன்.

இதுவரை பாடப்பட்டப் பாடல்களிலேயே இனிதானது"

மொழியாக்கம்: ஆழி செந்தில்நாதன்
ஆழமாய்ப் படிந்த பனியின் ...
கடினமான மேற்பரப்பினூடே,
உன் ரகசியமான வெள்ளை இல்லம் நோக்கி,
அமைதியாய், நாசூக்காய்
நாம் இருவரும் நடைபயில்கிறோம்,
பாதி இழந்த நிசப்தத்தில்.
இதுவரை பாடப்பட்ட எல்லாப் பாடல்களினும்
இனியதாக இருக்கிறது
இந்தக் கனவு நனவாகும் நிகழ்வு,
ஆம் என்று சொல்லி அசைகின்றன
பின்னிய கிளைகள்.

  1. Thanks Kutti Revathi


No comments:

Post a Comment