Monday, June 5, 2017

காயா


~~~~~
மலைப்பாதைகளில் தந்திரக்காரனின் விரல்களென
அசைகின்றன பெரணிச்செடிகள்

நீரூற்றின் துளிகள்
கற்களைத் துளையிடும் இடத்தில்
நீராயுதம் என்ற சொல்லையும்
அதன் உக்கிர உருவத்தையும் மறைத்து வைக்கின்றன
எதிர்க்கையில் எனது உக்கிரம்
தீயையும் மறையச் செய்யும்
என்கின்றன துளிகள்

கரையெங்கும் விரிந்து கிடக்கும்
Rhodo dendron குறுமரப் பூக்களை
தேவகி என்றுதான் தொடுவேன்
காட்டுத்தீயை அணுகவிடாமல் தடுக்கும் இம்மரங்களை
பின் எப்படி வணங்குவது முத்தமிடுவது

ஏழிலைப் பாலை மரங்களில் பேய்கள் வசிப்பதாய்
சொல்லப்படுவதை நம்பமுடிந்ததில்லை இதுவரை
எல்லா மரங்களும் தன் அகத்தில் மூதாதையர்களை
ஒளித்து வைத்திருக்கின்றன
அங்கே அவர்கள் உறங்குகிறார்கள்
இம்மரத்தில் பலகைகள் செய்து படித்தார்கள் அமர்ந்தார்கள்
கடுங்காய்சலுக்கு மருந்தை கண்டறிந்தார்கள்
பின் எப்படி இதில் பேய் வசிக்கும்
பேய் எங்கும் இல்லை
மலைகளெங்கிலும் இல்லை

எல்லா பனிப்பொழிவையும் கடந்துவிட்ட
காயா மரத்தின் கருநீலப் பூக்கள்
தீட்டிய வாளெனப் பாயும் சிற்றோடையின் உக்கிரத்தை
நொடியில் மழுங்கச் செய்கின்றன

காயா மலர்கள் முல்லை நிலத் தெய்வத்தின் சொற்கள்
அப்பூக்களின் நிறம் தான் கடவுளின் தேகம்
மாயோன் மறுகும் மணிநீல மகரந்த ஊசிகள்
அகம் மொய்க்கும் திரு எனும் மந்திரம்
பூவெடுக்கும் எல்லாக் கிளைகளும்
இருள் விரட்டும் உடுக்கைகள்
காயா உதிர்வது காட்டில் தேவதைகளின் கும்மி
காயாவிடமிருந்து பெற்ற மொழி கசம்

இருளின் பேரகராதி இவள் தான்
பின் காயா தான் மையானாள்
எனக்குள் காளியானாள்
மனக் கசப்பின் குறியீடானாள்
விதையின்றித் தாயாகி விளைந்துகொண்டே இருக்கிறாள்

- தேன்மொழி தாஸ்
12.10.2016

No comments:

Post a Comment