Sunday, May 7, 2017

பலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு!!!


வடக்கு கிழக்கு பொருண்மியத்தை கட்டி எழுப்பி தன்னிறைவு பெற முயல்வோம்.
வடக்கு கிழக்கில் தமிழர் தவிர்ந்த வல்லாதிக்கம் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது அங்கு வடக்கு கிழக்கு கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சர்வதேச வங்கிகளில் வைப்புக்களை வைக்க சர்வதேச வங்கிக் கிளைகளை வடக்குக் கிழக்கிற்கு எடுத்து வர வேண்டும்.
புலம்பெயர் மக்கள் மேற்குலக பல்கலைக்கழகங்களோடு ஒன்றிணைந்து தனியார் உயர்கல்வி நிறுவனங்களை வடக்கு கிழக்கு எங்கும் நிறுவி தமிழ் மக்களின் கல்வி அறிவூட்டலையும் அடுத்த நூற்றாண்டிற்கு அவசியமான தொழில்நுட்பக் கல்வியையும் வழங்க வேண்டும்.
பெருகி வரும் ஆசியப் பொருளாதார போட்டி தொழில்நுட்பக் கல்வி கற்ற உயர் கல்வியாளர்களின் தேவைகளை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்வதோடு மேற்குலகில் இருந்து வரும் விஞ்ஞானக் கல்வியில் அக்கறையின்மை அதற்கான தேவையை இன்னும் அதிகரிக்கும். இதன் அடிப்படையில் தான் நான் ஜேர்மன் அரசினது ஆலோசனை, ஆதரவுடன் கிளிநொச்சி அறிவு நகரில் ஜேர்மன் தொழில்நுட்பக்கல்லூரியை நிறுவினேன்.
இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இருந்தாலும் ஜேர்மனியரின் நிர்வாகத்தின் கீழ் தற்போது 1200 மாணவர்கள் கல்வி கற்பது எனக்கு மிகுந்த சந்தோசம். தனி ஒருவனாக எந்தவொரு அரசியல் கலப்பும் இன்றி இலங்கையில் இதை நடத்தி முடித்ததன் வலி எனக்கொருவனுக்குத்தான் தெரியும்.
நாம், வடக்கு கிழக்கின் பிரதான முதலீட்டாளர்களாக இருப்பதோடு பெறப்படும் பொருளியல் வளத்தைக் கொண்டு வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்களை வளப்படுத்த வேண்டும்.
நாமும் துரிதமாக வளரும் சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்தின் பார்வையை செல்வாக்கை எம்மை நோக்கி திருப்பி ஆதிக்கத்திற்கும் எதிரான எமது குரலை உலகு செவிமடுக்கச் செய்ய முடியும்.
தமிழர்கள் இயன்றவரை சேமிப்புக்களை குறைத்துக் கொண்டு உட்கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் வர்த்தகம் கல்வி சுகாதாரம் சேவைகள் சுற்றுலாத்துறை என்று முதலீடுகளில் அவற்றை இட்டு தமிழர் தேசங்களை வளமிக்கதாக்குவதோடு எமது வளங்களை நாமே பயன்படுத்தும் நிலைக்கு வரவேண்டும். அந்நியருக்கு எமது வளங்கள் ஆதிக்க சக்திகளால் விற்கப்படுவதும் எமது வளங்களைச் சுரண்டி எடுக்க வரும் அந்நியமுதலீட்டாளர்களை முறியடிக்கவும் நாம் விரைந்து செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் வன்னி மற்றும் திருமலை மட்டக்களப்பை மையமாக வைத்து அந்நிய முதலீட்டாளர்களும் கல்வி நிறுவனங்களும் படையெடுக்கும் இன்றைய காலத்தில் நாம் எமது உட்கட்டுமானங்கள் கல்வி மற்றும் இதர தேவைகளை, சவால்களை சந்திக்கும் வகையில் கட்டி எழுப்ப வேண்டும்.
ஆதிக்க சக்திகள் எமது வளங்களைச் சுரண்டி இலாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது. அந்த நிலையை தவிர்த்து நாம் சர்வதேச அளவில் பேசக் கூடிய அளவிற்கு எமது பொருளியலை கட்டி எழுப்பி செல்வாக்குள்ளவர்களாகும் நிலை வரின் நிச்சயம் நாமும் ஒருநாள் உலகால் வியந்து பார்க்கப்பட்டு எமது உரிமைகள் தொடர்பில் உலகை நோக்கி காத்திரமான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தைப் பெறலாம்.
ஆயுதப்போராட்டம் ஊடான விடுதலை என்பது சாத்தியப்படாத நிலையில் எமது போராட்ட வடிவங்களை எமது வளர்ச்சியோடு ஒருமித்துக் கொண்டு இட்டுச்செல்ல வேண்டும். ஏற்கனவே சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள எமது தேசத்தைக் கட்டி எழுப்பி எமக்கு தேவையான அத்துணை வளங்களையும் சேவைகளையும் நாமே எமது தேசத்தில் நிறைவு செய்யும் போது நாம் முழுமையாக விடுதலை பெற முடியும்.
எமக்கான நவீன துறைமுகங்கள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்று சர்வதேசத்தோடு இணைந்து நாம் பணிகளை முன்னிட்டுச் செல்லும் போது ஆளும் வர்க்கம் அதற்கு தடைபோட முடியாது. எமது நவீன கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். நெடிய அதிவேக வீதிகள் மேம்பாலங்கள் நவீன அதிவேக தொடரூந்து நிலையங்கள் நடுத்தர சர்வதேச விமான நிலையங்கள் என்று எமது தேசத்தை எமது மனித மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி கட்டி எழுப்ப வேண்டும்.
வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 4 துறைமுகங்களாவது அமைக்க வேண்டும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான வழியை எம்மை நோக்கி இழுக்க வேண்டும்.
பொருளியல் பலத்தைக் காட்டி எமது அரசியல் பலத்தை வெல்ல நாம் இனிப்போராட வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஜப்பான் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியா மிக விரைந்து வளரும் பொருளியல் சக்தியாக உள்ளது.
இந்த நிலையில் மேற்குலகம் பொருளியலில் பிந்தங்கிச் செல்லும் சூழல் இருப்பதால் அவர்களுக்கு தெற்காசியாவில் தமது நட்புப் பொருளியல் தளம் ஒன்று உருவாவது எதிர்க்கப்படக் கூடியதல்ல. அதேவேளை ஆசிய பொருளியல் சக்திகளோடு நேரடிப்பகை பாராட்டாது அதேவேளை அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லாது சிங்கள தேசம் எமக்கு அளிக்கும் அல்லது கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்திய அரசியல் உரிமையை எமக்கு சாதமாக்கிக் கொண்டு நாம் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே தமிழர் தேசத்தை அடுத்த நூற்றாண்டில் உலகம் வியக்க முன்னேற்றிச் செல்ல முடியும்.
தமிழனா இப்படி எழுந்து நிற்கிறான் என்று இந்த உலகம் எம்மை உற்றுநோக்க வேண்டும். ஒரு பொருளியல் பலம் மிக்க இனமாக நாம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் இந்த உலகம் எம்மைப் போட்டு மிதித்திருக்குமா..??! சிங்கப்பூரை எந்த நாடாவது போருக்கு இழுக்குமா..??! இல்லை. Singapore, Hong Kong, Taiwan, Luxemburg, Lichtenstein, Switzerland இராணுவ பலத்தால் அல்ல பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பொருளியல்பலத்தால் அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
நாம் சிந்திக்க வேண்டும். எமது பொருளாதாரத்தை வளங்களைக் கொண்டு நாமே கட்டி எழுப்ப வேண்டும். இதர சக்திகளின் ஆதிக்கத்துக்குள் எமது பொருண்மியம் வளம் செல்ல அனுமதிக்கக் கூடாது.
தொடர்ந்து தாயகம் புலம்பெயர் மக்கள் என்று பிரித்துப் பேசிக் கொண்டிராமல் இரண்டு மையங்களும் இணைந்து செயற்படும் நிலை உருவாக வேண்டும். எம்மிடம் உழைக்கும் சக்தி இருக்கிறது. பொருண்மிய திறன் இருக்கிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு இருக்கிறது. சிறந்த உல்லாசப் பிரயாணத்துறைக்கான வழிமுறைகள் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது உலகில் வளர்ந்து வரும் இரண்டு பெரிய பொருளியல் சக்திகள் இருக்கும் கேந்திர ஸ்தானத்தில் இருந்து கொண்டும் எமது நிலத்தை வளத்தை சுடுகாடாக விட்டுவிட்டு குளிர்நாடுகளில் கூலிக்கு மாரடிப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதிலும் அந்தக் கூலியில் இருந்து முதலாளி ஆகும் நிலைக்கு நாம் வளர முயற்சிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை.
இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள், நிலைப்பாடுகள், இந்த முன்மொழிவுகளில் இருக்கக் கூடிய குறைகள், நிறைகள், அவற்றை எவ்வாறு சீர்செய்வது, எந்த இடத்தில் என்ன திட்டத்தை செய்யலாம், எப்படி அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எமது பொருண்மியத்தை மீட்டு எமதாக்குவது என்பவற்றை இட்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
2018ல் சிறந்த 50 திட்டங்களை வடக்குக் கிழக்கில் தெரிவு செய்து ஆரம்பிப்பதற்கான அடிதளம் போடப்பட இருக்கிறது. அத்திட்டங்களை உள்வாங்கும் கிராம நகரமக்களும் அதில் பங்காளராக இருப்பார்கள்.
அது தவிர்ந்து குதர்க்கங்கள் இங்கு வேண்டாமே
Puloliyuran Yogeesen

No comments:

Post a Comment