Monday, May 8, 2017

புற்றுநோய் (பீர் குடித்தால்)


கோடைகாலத்தில் மதுப் பிரியர்கள் அதிகமாக பீர் அருந்துகிறார்கள். அது உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகவும், உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெகுகாலம் பீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று டாக்டர் கூறுகிறார்.

பிரபல டாக்டர் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:


“பல வருடங்களுக்கு முன்பு என்னை ஒருவர் சந்திக்க வந்திருந்தார். அவர் தினமும் பீர் பருகுவதாக சொன்னார். நான் அவரிடம், அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் புற்றுநோய் வரக்கூடும் என்றேன். பின்பு அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

வருடங்கள் கழித்து அவர் மீண்டும் வந்தார். என்னிடம், ‘என்னால் கஞ்சிதான் குடிக்க முடிகிறது. சோறு சாப்பிடமுடியவில்லை’ என்றார். என்டோஸ்கோபி பரிசோதனை செய்ய பரிந்துரைத்தேன். பரிசோதனைகளுக்கு பின்பு அவருக்கு குட்டிநாக்கு பகுதியில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு அவர் ‘டாக்டர் நான் தவறு செய்துவிட்டேன்’ என்று சொன்னார்.

பீரில் கலரிங் மெட்டீரியலாக ‘என்நைட்ரோசோ அமென்’ சேர்க்கப்படுகிறது. பீருக்கு நிறம் தரும் ரசாயனப் பொருள் இது. இது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இதை பெரும்பாலானவர்கள் உணருவதில்லை. அதுபோல் பீரில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கிறது. 6 சதவீத ஆல்கஹால் என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிக போதைத்தன்மை அதில் உள்ளது” என்கிறார், டாக்டர்.

பொதுவாக மது அருந்துகிறவர்கள் பலர், தாங்கள் மது அருந்துவதை நியாயப்படுத்த, ‘உடலுக்கு கெடுதல் செய்யும் மதுவை நாங்கள் அருந்துவதில்லை. நல்லது செய்யும் மதுவை தான் அருந்துகிறோம்’ என்று சொல்வார்கள். மதுவை நல்லது, கெட்டது என்று தரம் பிரிக்க முடியாது. எல்லாம் மதுதான். எல்லாவற்றிலும் ஆல்கஹால் இருக்கிறது.

பருகும் மது வாய் வழியாக இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்துவிடும். மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறுகுடலுக்கு ரத்தம், ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஆனால் அங்கே வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறி, காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.

மதுவின் தரம் என்பது அதில் எவ்வளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. விலை உயர்ந்ததெல்லாம் தரமான மது என்று சொல்லிவிட முடியாது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும், மது என்றால் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும்.

ஒரு சில கிராமங்களில் பிரசவமான பெண்களுக்கும், உடல் பலகீனமாக இருப்பவர் களுக்கும் மதுவை மருந்தாக கருதி கொடுக்கிறார்கள். அதில் சில திரவங்களை கலந்தும் தருகிறார்கள். அதன் மூலம் உடல் வலுவடையும் என்று நம்புவது தவறு. மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் அது உடலுக்கு கேடுபயக்கவே செய்யும்.

மூளை, நரம்பு, ஈரல் போன்று உடலின் பல பகுதிகளை மது பாதிக்கும். உணர்வு நரம்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டு அது மரத்துப்போய்விடுவதால்தான், மது அருந்துகிறவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு தன்னிலை இழந்துவிடுகிறார்கள்.

மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாச தடைகொண்ட நோய்களும் அவர்களை பாதிக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றல் குறைந்துகொண்டே போகும்.

தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் அவர்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.

ஆண், பெண் இருபாலரிடமும் ஆண் ஹார்மோனும், பெண் ஹார்மோனும் கலந்து காணப் படும். இந்த ஹார்மோன் கணக்கை சீர்படுத்துவதில் ஈரல் பெரும் பங்கு வகிக்கிறது. ஈரல்தான் ஆண்களிடம், பெண் ஹார்மோனை கட்டுக்குள் வைக்கும். அடிக்கடி மது அருந்துகிறவர் களுக்கு ஈரல் பாதிக்கப்படுவதால், அவர்கள் உடலில் பெண் ஹார்மோன் அதிகரிக்கும். அதனால் அவர்களிடம் பெண்தன்மை மேம்பட்டு, பாலுறவு ஆர்வம் குறைந்துவிடும்.

மது அருந்துகிறவர்களில் பலர் ‘பாற்றி லிவர்’ என்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஈரல் திசுக்களில் கொழுப்பு படிவதால், இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதனால் மஞ்சள்காமாலை, பசியின்மை, வலி போன்றவை தோன்றும். இந்த ஈரல் வீக்கத்தை குணப்படுத்திய பின்பு மீண்டும் மது அருந்தினால் விளைவுகள் மிக மோசமாகிவிடும். மது அருந்துவதை முழுமையாக கைவிட்டால் ஈரல் மீண்டும் இயல்புநிலைக்கு வர வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக மது அருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு ‘லிவர் ஸிரோஸிஸ்’ என்ற கடுமையான ஈரல் பாதிப்பு ஏற்படும். அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும்.  
http://www.dailythanthi.com/News/Districts/2017/05/07124244/Beer-drinking-Cancer.vpf

No comments:

Post a Comment