Saturday, May 27, 2017

பொன்னுருக்கல்


திருமண நாளுக்கு முன்பு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது ஆசாரி வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இதில் மணப்பெண்ணைத் தவிர பெண்ணின் உறவினர்கள்... மற்றும் நண்பர்கள் கலந்துகொள்வர். பெண்வீட்டார் ஓர் இனிப்புப் பண்டம் (கொழுக்கட்டை) கொண்டு செல்லுதல் சம்பிரதாயம்.
மணமகன் வீட்டு வாசலில் முறைப்படி நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு, குங்குமம், சந்தனம் வைத்து பொன்னுருக்கும் இடத்தில் ஒரு நிறைகுடம் குத்துவிளக்குகள் தேங்காய், மாவிலைகள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்கட்டை (துண்டு), தேசிக்காய், அறுகம்புல், பூக்கள், ஒரு சட்டியில் தண்ணீர், தேங்காய் உடைக்கக் கத்தி, விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சளில் பிள்ளையார், சாம்பிராணியும் தட்டும், கற்பூரம் முதலிய முக்கியமாகத் தேவைப்படும் பொருட்களாகும்.
திருமாங்கல்யத்திற்குரிய தங்கநாணயத்தை (பவுணை) ஆலயத்தில் (இறைவனிடத்தில்) வைத்து பூசை செய்து ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, பழத்துடன் நாணயத்தையும் வைத்துக்கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன்னுருக்கும் நாளன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை ஆச்சாரியாரிடம் கொடுத்து உருக்கவேண்டும். ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் முதலியவை வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலைமேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் ஆசாரியாரிற்கு அரிசி காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.
பின்னர் விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்து கொள்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். இதே நாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்யவேண்டும் என்பதால் சீனி அரியதரம் செய்யலாம். அதற்குரிய மாவைக் குழைத்து வைத்தால் கன்னிக்கால் ஊற்றியபின் பலகாரம் சுடலாம். (இந்த நாளில் இருந்து திருமண நாள்வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாதென்பது பழையகால சம்பிரதாயம்.)

No comments:

Post a Comment