Wednesday, May 10, 2017

கவசம்

 (ராணியில் வந்துள்ள அன்னையர் தின சிறப்பு சிறுகதை)
கூடத்தில் பெட்டி தயாராக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவள் கிளம்ப வேண்டும். லட்சுமியம்மாள் கனத்த மனதோடு பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்வதுதான் வாழ்க்கையோ? எல்லாவற்றையும் விழுங்கியாக வேண்டும் என்பதுதான் விதியோ? ஆறு மாதத்திற்கு முன்பு மனசுக்குள் பெருகிய மகிழ்ச்சி இத்தனை சீக்கிரம் வடிந்து விடும் என்று அவள் நினைக்கவில்லை.
அன்றொரு நாள் திருமதி மாதங்கி அழைத்துச் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் லட்சுமியம்மா நம்பமுடியாமல்தான் அவளைப் பார்த்தாள்.
“நிஜமாவா சொல்றீங்க?
“சந்தியம் பண்ணி சொன்னாத்தான் நம்புவீங்களா?
“அய்யோ அப்டி இல்ல”
“நிஜமா உங்க பிள்ளையும் மருமகளும் அமெரிக்காலேர்ந்து வராங்களாம். உங்களை இங்கேர்ந்து கூட்டிட்டு போய் வெச்சுக்கப் போறதா ஈ மெயில் அனுப்பி இருக்கார் உங்க பிள்ளை. பாக்கறீங்களா?”
“”எனக்கு இங்கிலீஷ் எல்லாம் படிக்கத் தெரியாது. நீங்க சொல்றதே போதும்.இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்கப் போகிறது”
“இன்னும் ஒரே வாரம்தான். உங்க பொருட்களை எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டு தயாரா இருங்க. என்னவோ இப்பவாவது உங்க பிள்ளைக்கு இங்க திரும்பி வரணும், உங்களை இங்கேர்ந்து கூட்டிக்கிட்டு போகணும்னு தோணிச்சே.” மிஸஸ் மாதங்கி பிரின்ட் எடுக்கப்பட்ட கடிதத்தை லட்சுமியிடமே கொடுத்தாள். அதையே பிள்ளை மாதிரி நினைத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் லட்சுமியம்மா.
எட்டு வருடமிருக்குமா சந்துரு அமெரிக்கா சென்று! அதற்கு மேலும் கூட இருக்கலாம். மேற் படிப்பிற்காகச் சென்றவனுக்கு அங்கேயே நல்ல வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் பச்சை அட்டையும் கிடைத்துவிட, அங்கேயே ஒரு மலையாளி பெண்ணை காதலித்து மணந்து கொண்டான். திருமணத்திற்கு முன் ஒரு முறை இந்தியா வந்து அம்மாவின் ஆசியைப் பெற்றுக் கொண்டான். தஞ்சாவூரில் இருந்த பரம்பரை வீட்டில் இருந்தாள் லட்சுமியம்மா. புருஷன் என்ன காரணம் என்று சொல்லாமலே ஒரு நாள் வீட்டை விட்டு போய் விட, மாமனார் மாமியார்தான் ஆறுதலாக இருந்தார்கள். அவர்கள் துணையோடு பிள்ளையை வளர்த்தாள். அவனது பத்தாவது வயதில் அவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைய, பின் தனியே பாரம் சுமந்தாள். அவனை நன்கு படிக்க வைத்தாள்.
அவன் படிப்புச் செலவுக்கும், அமெரிக்க பயணத்திற்காகவும் பணம் தேவைப்பட்டதால் வீட்டை விற்று விட்டு அதே வீட்டின் ஒரு அறையில் சொற்ப வாடகைக்கு தனிக் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள். பிள்ளையின் முன்னேற்றமும் நலமும் மட்டுமே அவளது நித்திய பிரார்த்தனையாக இருந்தது. புருஷன் எங்கே இருக்கிறான் என்றே தெரியாது. உயிருடன்தான் இருக்கிறானா இல்லையா என்றும் தெரியாது. ஒரே பிள்ளையும் எங்கோ தூர தேசத்தில் இருந்தது அவள் மனதின் ஓரத்தில் ஏக்கத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அங்கேயே அவன் தங்கி விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
திருமணத்திற்கு ஆசி வாங்க ஊருக்கு வந்தவனை அக்கம் பக்கம் பிலு பிலுவெனப் பிடித்துக் கொண்டது.

“ஏண்டா சந்துரு லட்சுமிக்கு, கருவேப்பிலைக் கொத்தாட்டமா நீ ஒரே பிள்ளை. அவள் கண்குளிரப் பார்த்து ஆசி கூறி அட்சதை போட, இந்த ஊர்ல ஜாம் ஜாம்னு உன் கல்யாணம் நடக்க வேண்டாமா?”
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? நானும் அவளும் நாலஞ்சு வருஷமா பழகறோம். அவங்க அப்பா அம்மா எல்லாரும் அங்க இருக்கறவங்க. அங்க வெச்சு கல்யாணம் பண்றதுதான் அவங்களுக்கு வசதி. அம்மாவுக்காக இங்க வந்தா ஏகப்பட்ட செலவுகள். அம்மாவைக் கூட்டிகிட்டு போகணும்னாலும் பாஸ்போர்ட் கூட இன்னும் எடுக்கலை. அப்டியே கிடைச்சாலும் விசாவுக்காக நாள் முழுக்க தூதரக வாசல்ல நின்னு, கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல அம்மாவால முடியாது. அமெரிக்க குளிரும் அம்மாக்கு தாங்காது. என் கல்யாண வீடியோவை அனுப்பறேன். அதுலயே ஆனந்தமா பார்த்து ஆசீர்வதிப்பா எங்கம்மா. ஏம்மா நீ என்னம்மா சொல்ற?”
பிள்ளை கெஞ்சலாகக் கேட்டு நிறுத்த, லட்சுமியம்மா தன் உரிமையையும், ஏமாற்றத்தையும் உமிழ்நீரோடு சேர்த்து விழுங்கிக் கொண்டாள்.

“நீ எங்க இருந்தாலும் நல்லார்க்கணும்டா சந்துரு. என் ஆசி எப்பவும் உனக்கு உண்டு”
“அப்பறம் நீ இங்க தனியா இருப்பது மனசுக்கு கஷ்டமா இருக்கு. உனக்கு ஒண்ணுன்னா உன்னை யார் பாத்துக்குவாங்க? அதனால நா ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.

“என்ன?”
என் சிநேகிதனுக்கு உறவுக்காரங்க இதே தஞ்சாவூரில் ஒரு முதியோர் இல்லம் நடத்திட்டு இருக்காங்க. மாசா மாசம் நா பணம் அனுப்பிக்கறேன். உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. இங்க இருக்காப்பலயே நீ அங்கயும் இருக்கலாம். காவேரி ஸ்நானம் பண்ணிக்கலாம். கோவில் குளத்துக்கு போய்க்கலாம். நிறைய மனுஷங்களோட அங்க சேர்ந்து இருக்கலாம். உனக்கு ஒண்ணுன்னா கவனிச்சுக்க ஆள் இருக்காங்கன்னு நானும் அங்க நிம்மதியா இருப்பேன். நா எல்லா ஏற்பாடும் பண்ணி முன் பணமும் கட்டியாச்சு. இன்னும் ரெண்டு நாளில் உன்னை அங்க விட்டுட்டு நான் திரும்பிப் போகணும்.”
பிள்ளை உத்தரவு போடுகிறான் என்பது லட்சுமியம்மாவுக்குப் புரிந்து விட்டது. அதை மீறும் சக்தியோ உரிமையோ அவளுக்கு ஏது? கிளம்புவதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொன்றாகச் செய்தாள். பரம்பரையாய் ஆண்டு வந்த பெரிய பெரிய பித்தளை, செப்பு, வெண்கலப் பாத்திரங்கள், தண்டு விளக்குகள், அண்டா குண்டாக்கள் எல்லாவற்றையும் எடைக்குப் போட்டாள். மனசு கனத்தது. வீட்டுப் பெரியவர்களை எல்லாம் எடைக்குப் போட்டாற்போல் இருந்தது. கிடைத்த பணத்தோடு கூடப் பணம் போட்டு, பிள்ளையின் கல்யாணப் பரிசாக அவனுக்கு ஒரு தங்கச் சங்கிலியும், மருமகளுக்கு ஒரு பட்டுப் புடவையும் வாங்கிக் கொடுத்தாள். அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு முதியோர் இல்லத்திற்குக் கிளம்பினாள்.
அப்போது வந்தவள்தான் இங்கு. அவன் சொன்னாற்போல் ஒரு குறையும் இல்லைதான். நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். சுத்தம் சுகாதாரம், காற்றோட்டம் எல்லாம் இருக்கிறது. அடிக்கடி மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. பூஜை புனஸ்காரம் எதற்கும் குறைவில்லை. இருப்பினும் உள்ளூர ஒரு புத்திர பாசம் அலைக்கழித்துக் கொண்டுதான் இருந்தது. அவனைப் பார்க்க முடியாத ஏக்கம் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.
எட்டு வருடப் பிரிவு. கல்யாணமாகி ஐந்து வருடம் குழந்தை வேண்டாம் என்று இருந்தவர்களுக்கு மூன்றாண்டுக்கு முன்புதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை போட்டோவில் பார்த்ததோடு சரி. இதோ பிள்ளை குடும்பத்தோடு வருகிறானாம். அவள் ஏக்கமெல்லாம் தீரப்போகிறது. மனம் குழந்தையாய் மாறி குதூகலித்தது. கடிகார முள்ளின் சுழற்சியில் யுகமே மிக மெதுவாகச் சுழல்வது போலிருந்தது.
சனிக்கிழமை பிள்ளை மட்டும் ஒரு டூரிஸ்ட் காரில் வந்தான். அவனை விழுங்கி விடுவது போல் பார்த்தாள். என்னப்பா இளைச்சா மாதிரி இருக்க. சரியா சாப்பிடறயா இல்லையா? கவலையுடன் கேட்டாள். அவன் பதில் கூறாமல் ஒரு புன்னகையுடன் போலாம்மா வா என்றான். லட்சுமியம்மா பூரிப்புடன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவனோடு கிளம்பினாள். நாம சென்னைக்குப் போறோம்மா என்றவன் நேராக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றான்.
சென்னையில்தான் வீடெடுத்து தங்கியிருந்தான். மருமகள் அழகாக இருந்தாள். தமிழ் பெரிதாகத் தெரியவில்லை. குழந்தை சிநேகமாக சிரிக்க வாரியணைத்துக் கொண்டாள் அதை.
இரவு டின்னர் முடிந்ததும், மருமகளும் குழந்தையும் ஒரு அறைக்குச் செல்ல, பிள்ளை அம்மாவிடம் வந்தான்.

“நா எதுக்கு இந்தியா வந்திருக்கேன் தெரியுமா?
“அமெரிக்கா அலுத்துப் போயிருக்கும். அம்மாவோட இருக்கணும்னு தோணி இருக்கும். அதான் வந்துட்ட. சரியா?
“இல்ல. உன்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்”
“என்..கிட்ட உதவியா....என்ன உதவி? நா என்ன செய்ய முடியும் உனக்கு?
“சொல்றேன். நீ அதிர்ச்சியடையக் கூடாது”
“என்னடா பயமுறுத்தற?”
“என்னோட ஒரு கிட்னி வேலை செய்யலாம்மா. இன்னொன்றிலும் கொஞ்சம் தொற்று இருக்கு. இப்பதான் ஆரம்பம். டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். மாற்று கிட்னி பொருத்தினா பிழைச்சுக்கலாம்னு சொன்னங்க. ஹோம்ல உன்னை சேர்க்கும் போது எடுத்த உன்னோட முழு மெடிகல் டெஸ்ட் ரிசல்ட்டும் என் கிட்ட இருந்துது. உன் இரத்தமும் என் இரத்தமும் ஒரே வகைதான். உன் கிட்னி எனக்கு பொருந்தும்னு சொன்னங்க. நீ ஒரு கிட்னி எனக்கு தானமாக் கொடுத்தா நான் உயிர் பிழைக்க சான்ஸ் இருக்கு. தருவயாம்மா?”
லட்சுமியம்மா அதிர்ச்சியில் உறைந்து போனாள். பதறிப் போயிற்று அவள் மனது. ‘’என்னடா சொல்ற கண்ணா....” என்றவள் குரல் பிசிறியது. கண்கள் அருவியாயிற்று. ஒரு கிட்னி என்னடா? என் உசிரையே தரேன். எடுத்துக்கோ. உனக்கு ஏதானம் ஆய்ட்டா நா உசிரோட இருக்க மாட்டேன். அதனால என்ன வேணும்னாலும் என் உடம்புலேர்ந்து எடுத்துக்கோ. நீ நல்லார்ந்தா போதும் எனக்கு.... அடி...மாரியம்மா...என் குழந்தைக்கு ஒரு கஷ்டமும் வரக் கூடாது. உனக்கு ஒரு உசிர் வேணும்னா என்னை எடுத்துக்க. அவனை விட்டுடு. அவன் நல்லபடியா வாழணும்” கண்ணீருக்கிடையே அரற்ற ஆரம்பித்தாள்.
அனைத்து சம்பிரதாயங்களும் மளமளவென்று நடந்தன. குறித்த நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அம்மாவின் கிட்னி அவன் உடம்பில் வெற்றிகரமாக செயல் படத் துவங்கி விட்டது.
உங்க பிள்ளை நல்லார்க்கார். இனி எந்த ஆபத்தும் இல்ல” டாக்டர் சொன்ன போது அவனை மீண்டும் பெற்று விட்டாற்போல் மனசு புளகாங்கிதம் அடைந்தது. ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

ஒரு மாத மருத்துவ கவனிப்பில் இருவர் உடலும் நன்கு தேறிற்று. மேலும் ஐந்து மாதங்கள் பிள்ளையோடும் பேரக் குழந்தையோடும் மகிழ்ந்திருந்தாள். மருமகள் கூட நன்கு சிரித்துப் பேசினாள். லட்சுமியம்மா தினமும் அவனுக்காக சுந்தரகாண்டம் படித்தாள். ஒரு நாள் பிள்ளை அவளிடம் வந்தான்.
தயங்கியபடி அவளிடம் சொன்னான். “என் லீவு முடியுதும்மா. நாங்க திரும்பிப் போகணும்.”
அவள் இதை எதிர்பார்க்கவில்லை. “நீ இங்கயே இருப்பன்னு இல்ல நினைச்சேன்?”
“அதெப்டிம்மா. இப்போ நா அமெரிக்க பிரஜை.அப்டி எல்லாம் இங்க தங்கிட முடியாது. எனக்கு அங்கே கிட்னி கிடைக்கலை. தவிர அங்கே அறுவை சிகிச்சை செய்ய எக்கச்சக்க செலவாகும். உன்னை இங்கேர்ந்து கூட்டிட்டு போறதை விட நான் இங்க வந்து ஆபரேஷன் செய்துக்கிட்டா செலவும் கம்மி. ஆபரேஷனும் வெற்றியடையும்னு ஒரு செண்டிமெண்ட்டல் நம்பிக்கை. கம்பெனி ஆறு மாசம் லீவும், செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பி வெச்சுது. மெடிகல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் முதலிலேயே இங்க அனுப்பி வெச்சதால உடனடியா ஆபரேஷன் தேதி நிச்சயம் பண்ண முடிஞ்சுது. நீ நிச்சயம் எனக்கொரு கிட்னி தராம இருக்க மாட்டன்னு நம்பித்தான் முன்கூட்டி உன்கிட்ட எதுவும் சொல்லி உன்னை அதிர்ச்சியடைய வைக்க வேணாம்னுதான் வந்த பிறகு சொன்னேன். கடவுள் அருளால, எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. என் விசாவும் முடியுது.. உன்னை ஹோம்ல கொண்டு விடறேன்னு மாதங்கி மேடம்க்கு போன் பண்ணி சொல்லிட்டேன்”
லட்சுமியம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். விழிகள் சுந்தரகாண்டத்தில் நிலைத்திருந்தது. புருஷன் பிரிந்து சென்றாலும், பிள்ளைகள் பிரிந்து சென்றாலும் சீதை அமைதியாக இருந்தாள். தன் அன்பை சுருக்கிக் கொள்ளவில்லை.
வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பிள்ளையும் மருமகளும் அவள் காலில் விழுந்தார்கள்.
“எங்களை ஆசீர்வதி அம்மா”
“நல்லாருங்க. எங்க இருந்தாலும் எல்லாரும் நல்லா இருப்பீங்க. இனி உனக்கு ஒரு கஷ்டமும் வராது. நா சொல்ற மந்திரங்கள் உங்களைச் சுத்தி கவசமா இருந்து காக்கும்.” குரல் நடுங்க ஆசீர்வதித்தாள்.
பிள்ளை பெட்டியை எடுத்து ஆட்டோவில் வைத்து விட்டு தானும் ஏறிக் கொண்டான் அம்மாவைக் கொண்டுவிட. மருமகளும் பேத்தியும் வாசலில் இருந்து கையசைக்க ஆட்டோ புறப்பட்டது. ஆறு மாத சந்தோஷ தருணங்கள் மனசில் உள்ளது,. ஆயுளுக்கும் அவற்றைக் கொண்டு மிச்ச வாழ்வைத் தள்ளிக் விடலாம். லட்சுமியம்மா அன்போடு பிள்ளையின் தலையைத் தடவிக் கொடுத்தபடி புன்னகைத்தாள்

No comments:

Post a Comment