Sunday, March 5, 2017

மறைப்பும் திறப்புமான தாவரமென

நுனி கூர்ந்து
அடியகன்ற அரசிலையினை
இடுப்பில் அணிவித்த அந்நாளிலிருந்து
உடலோடு சேர்ந்து
சிலதாவரங்களும் வளர்ந்தன

தோழிகளோடு
கள்ளிச்செடியின் பழம்பறிக்கத்
தெருவெங்கும் அலைந்த நாட்களில்
தன்னுள் முளைக்கத் தொடங்கிய
முட்தாவரமொன்றினை உணர்ந்தாள்

செழித்திருக்கும் உன்னிச் செடி வளைத்து
இலைபறித்து.
கனிகொய்து
தாம்பூலமென ஒருவன் நீட்டியபொழுது
அவளுள் ஒரு பூ மலர்ந்தது

தென்னையின்
பச்சையோலை மறைப்பில்
அவளை உள்ளமர்த்தியபொழுது
உளத் துணையாக
தாவரங்களே எப்பொழுதும்
உடனிருப்பதாக நம்பத்தொடங்கினாள்

வேம்பின் கிளையொடித்து
தழையாடை உடுத்திய ஒருநாளில்
அம்மா சொன்னாள்
அப்படியே அம்மனென இருப்பதாக
அப்போது இறைவியானாள்

மாவிலைகளைத் தோரணங்களாக்கி
வீடு, வீதியெங்கும் தொங்கவிட்ட
மங்கல நிகழ்வினை தொடர்ந்து
மறைப்பும் திறப்புமான தாவரமென
தன்னையுணர்ந்தவள்
பறித்து பதியமிட்ட
இன்னுமொரு பச்சை உயிரென
தனக்குள் வளரத் தொடங்கியிருந்தாள்.

நன்றி : நான்காவது கோணம்
கரிகாலன்
ஓவியம்: Jeeva Nanthan

No comments:

Post a Comment