Thursday, February 23, 2017

முருகப்பெருமானை வணங்கிட :


இக வாழ்க்கையில் இருந்து கொண்டே இகவாழ்வின் கடமைகளை செய்து கொண்டு இகவாழ்வின் துணை கொண்டு ஆனால் இகவாழ்வினில் ஆழ்ந்து போகாமல் தண்ணீர் இலை தாமரை போல வாழ்ந்து பரவாழ்க்கைக்கான முயற்சிகளை தவறாது செய்து செய்து வெற்றி கண்டவன் தான் முருகப்பெருமான் என்பதையும், எந்த தேகம் காமத்திற்கு காரணமாக அமைகிறதோ இகவாழ்விற்கு துணையாய் அமைகிறதோ அந்த காமதேகமே பரவாழ்வாகிய ஞானத்தை அடையவும் காரணமாக அமைவதை அறிந்து காமக்கசடுடைய தேகமதை வெறுக்காமல் அந்த காமதேகத்தினை காமத்திற்கு பயன்படுத்தாமல் யோகத்திற்கு பயன்படுத்தியதோடு தேகத்தினுள் காமத்தீயை ஏற்படுத்தி தேகத்தை அழித்து பிறவி எடுக்காமல் யோகத்தீயை உண்டாக்கி தேகத்தை சுட்டு கசடு நீக்கி தூய்மையாக்கி ஞானதேகமாக மாற்றி, வெற்றி கண்டவன்தான் முருகப்பெருமான். அத்தகை வாய்ப்பினை மனித வர்க்கம் அறியாமல் மும்மலக் குற்றத்தின் வயப்பட்டு முன் வினை பாவங்கள் உந்தித் தள்ள காமமெனும் நரகக்குழியில் வீழ்ந்து பெற வேண்டிய பெரும் பேற்றை பெறாமல் வீணில் வாழ்வை வீணாக்குகின்றோம் என்பதையும் உணரலாம்.
எல்லாம் வல்ல தெய்வம் எம்பெருமான் முருகன் அருளினால் அவனது திருவடியைப் பற்றி மனமுருகி பூசித்தும் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் சைவ உணவை மேற்கொண்டும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றிவித்தும் தினம் தினம் மறவாமல் காலையில் ஒரு பத்து நிமிடமும் மாலையில் ஒரு பத்து நிமிடமும் முடிந்தால் இரவு பத்து நிமிடமும், முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி,
“ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி!” என்றோ
“ஓம் சரவண பவ” என்றோ
“ஓம் சரவண ஜோதியே நமோ நம!” என்றோ

முருகனது திருமந்திரங்களை நாமஜெபமாக சொல்லி சொல்லி அவனது அருளைப் பெற வேண்டும்.
அப்படி எல்லாம் வல்ல முருகனது அருளைப் பெறாமல் எந்த விதத்திலும் நாம் ஞானத்துறையில் அணுவளவும் முன்னேற முடியாது என்பதையும் உணரலாம், உணர்ந்ததும் முருகனது திருவடிகளிலே “என் உள்ளம், உடல், பொருள், ஆவி அனைத்தும் முருகா உனது திருவடிகளே அர்ப்பணிக்கிறேன். பாவியாகிய எனது அர்ப்பணிப்பையும் ஏற்று உமது தொண்டருள் ஒருவராய் எம்மையும் ஏற்று அருள் செய்வாய் ஐயனே” என்றும், எல்லாம் வல்ல முருகா எம்பெருமானே! தாயினும் தயவுடை தனிப்பெருங்கருணையே! தயாநிதியே! தேவாதிதேவா! தேனே! தெள்ளமுதே! தெவிட்டா பேரின்பமே! என்றெல்லாம் அவனது பெருமைகளை கூறி கூறி அவனது அன்பை பெற்று அவனது பொன்னார் திருவடிகளே சரணாகதி என்றடைந்து சரணாகதி பெறுதல் வேண்டும்.
தாயினும் மேலான தயவுடை தெய்வமே முருகா! உனது அருளையெல்லாம் நான் கொள்ளையடிக்க வேண்டும். அதற்கு நீரே அருள் செய்திட வேண்டுமென்றே சகமார்க்க உரிமையினால் முருகனிடத்து வேண்டுகோள் வைப்பதுடன் நீ நானாக வேண்டும், நான் நீயாக வேண்டும் என்று, எல்லாம் அவனாக ஆக வேண்டுமென்றும் உயர்நிலை வேண்டுகோளை தவறாது மனமுருகி முருகனது திருவடிகளே சமர்ப்பித்து தவறாது நாத்தழும்பேற பூசித்து பூசித்து தொடர்ந்து வரவர முருகன் அருள் கூடி பலகாலம் படிப்படியாய் ஞானம் நம்முள் தோன்றி ஒரு கால பரியந்தத்தில் நாமும் நம் நாயகன் முருகனும் ஒன்றாகுதல் கூடும் என்பதையும் உணரலாம்.
களைய முடியா கலியுக களையை
களைவான் கந்தன் கருணை கொண்டே.

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

No comments:

Post a Comment