Monday, January 16, 2017

ஆக, நீங்கள் ஒரு எழுத்தாளனாகப் போகிறீர்கள்? (சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி)


எல்லாவற்றையும் மிஞ்சி
உங்களிடமிருந்து பீறிட்டு அது
வெளிவரவில்லையெனின்
அதைச் செய்யாதீர்கள்.

கேளாமலே உங்கள் இதயத்திலிருந்தோ,
உங்கள் மனதிலிருந்தோ
அல்லது வாயிலிருந்தோ
அல்லது உங்கள் வயிற்றிலிருந்தோ
அது வரவில்லையெனின்
அதைச் செய்யாதீர்கள்.

வார்த்தைகளைத் தேடிக்கொண்டு
உங்கள் கம்ப்யூட்டர் திரையை வெறித்தபடி
உங்கள் டைப்ரைட்டரில்
குறுக்கி அமர்ந்தபடியிருந்தால்
அதைச் செய்யாதீர்கள்

உங்கள் படுக்கையில் பெண்கள் வேண்டுமென்பதற்காய்
நீங்கள் செய்வதாயிருந்தால்
செய்யவேண்டாம்.

அதைச் செய்வது பற்றி சிந்தித்திருப்பதென்பதே
கடும் உழைப்பாகுமானால்
அதைச் செய்யாதீர்கள்.

யாரோ ஒருவரைப் போல நீங்கள் எழுத
முயல்வதாயிருந்தால்
அதை மறந்துவிடுங்கள்.

உங்களுள்ளிருந்து அது கர்ஜித்துவெளிப்பட
நீங்கள் காத்திருக்க வேண்டியிருந்தால்
பொறுமையாயிருங்கள்.

முதலில் உங்கள் மனைவியிடம்
படித்துக்காட்டவேண்டியிருந்தால்
அல்லது உங்கள் பெண் நண்பியிடமோ,
அல்லது உங்கள் ஆண் நண்பரிடமோ
அல்லது உங்கள்பெற்றோரிடமோ அல்லது
வேறுயாரோவிடம்-
நீங்கள் தயாராக இல்லை

அத்தனை பல எழுத்தாளர்கள் போலிருக்காதீர்கள்
தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
பலவாயிரம் மனிதர்களைப் போல் இருக்காதீர்கள்

உப்புச்சப்பற்று, சலிப்பாக,
பாசாங்கு மிகுந்து
சுயகாதலால் கபளீகரம் செய்யப்பட வேண்டாம்.

உலகின் நூலகங்கள் உங்களைப் போன்ற தரப்பினரால்
கொட்டாவி விட்டுதூங்கிவிட்டன.
அதில் நீங்கள் சேர்க்காதீர்கள்

உங்களின் ஆன்மாவிலிருந்து ஒரு ராக்கெட்டினைப் போல
அது வந்தாலொழிய
சும்மாயிருப்பது உங்களைப் பைத்தியத்தில் ஆழ்த்திவிடும்,

அல்லது தற்கொலையில்
அல்லது கொலையில் என்றால் ஒழிய
அதைச்செய்யவேண்டாம்.

உங்களுள் இருக்கும் சூரியன்
உங்கள் குடலை எரித்துக்கொண்டிருந்தால் ஒழிய
அதைச் செய்ய வேண்டாம்.

நிஜமாகவே அதற்கான நேரம் வந்து விட்டால்
நீங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்
அது தானாகவே செய்துகொள்ளும்
அது தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கும்
நீங்கள் சாகும்வரை அல்லது
அது உங்களுக்குள் சாகும்வரை

வேறெந்த வழியுமில்லை
என்றுமே இருந்ததுமில்லை.

............................................
மொழிபெயர்ப்பு :பிரம்மராஜன் சார்.

No comments:

Post a Comment