Thursday, December 22, 2016

தமிழினத்தின் சாபக்கேடாக யாழ் வைத்தியசாலை அபிவிருத்தி!

 2009 இல் போரில் தமிழினத்தின் தோல்வி ஒற்றுமை இன்மையே காரணம் என்று எடுத்துக் காட்டியது. இது போல் யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தியில் ஏற்படும் முட்டுக்கட்டைகள் தமிழர்களின் ஒற்றுமை இன்மைக்கு இன்னொரு ஆதாரமாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானிய அரசாங்கம் ஒரு முழுமையான 1000 படுக்கைகள் கொண்ட வைத்தியசாலையை திருநெல்வேலியில் மருத்துவ பீடத்துக்கு அருகாமையில் கட்டித்தர முன்வந்த போது தமிழர்கள் ஒற்றுமை இன்றி இழுபறிப்பட்டுக் கொண்டிருக்க அது கைநழுவி தென்பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையுடன் நின்று போனது. அதற்குப் பிறகு பண்ணை கடற்கரைக்கு அருகில் தற்போது உள்ளதை விட ஒரு பெரிய வைத்தியசாலை அமைக்கும் திட்டம் அறுவைசிகிச்சை உபகரணங்கள் துரு பிடித்துவிடும் என்று உலகில் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள பல பெரிய வைத்தியசாலைகளைப் பற்றி அறியாத கிணற்று தவளைகளின் எதிர்ப்பால் கைவிடப் பட்டது. போதனா வைத்தியசாலைகளில் மருத்துவ மாணவர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பங்கு பற்றுவதால் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள போதனா வைத்தியசாலைகளில் சுகாதார அமைச்சை தவிர பல்கலைக்கழகங்களும் கட்டிடங்களை நிறுவுவதற்கும் சேவைகளை வைத்தியசாலை பணிப்பாளர் அனுமதியுடன் விஸ்தரிப்பதற்கும் உரித்துடையவை. தற்போதைய எதிர்ப்பு கடந்த காலங்களில் ஒற்றுமை இன்மை காரணமாக யாழ் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யக் கிடைத்த சந்தர்ப்பங்களை நழுவவிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறது. போதனா வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் பதவியை ஏற்றுக் கொள்ளும் போது மருத்துவ மாணவர்களுக்கு கற்பிப்பதையும் ஒரு கடமையாக ஏற்றுக் கொள்ளுகிறார். அதன் பின்பு தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில் மாணவர்கள் தவறு எதுவும் செய்யாத ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கற்பிக்க மறுப்பது கடமை தவறுவதும் மருத்துவ ஒழுக்கநெறிக்கு முரணானதும் ஆகும். யாழ் வைத்தியசாலையை பற்றி நான் அதிகம் விமர்சித்தால் யாழ் வைத்தியசாலை உட்பட்ட வடமாகாணத்தில் உள்ள பல சுகாதாரத் திட்டங்களை விரைவு படுத்தும் பதவியில் நான் கொழும்பில் இருக்கிறேன் என்பதை மறந்து இவர் யாழ்ப்பாணத்தில் வேலை செய்யவில்லை என்று கூறுவார்கள். இவ்வாறு யாழ்ப்பாணத்தில் என்னை நாக்கூசாமல் விமர்சிப்போர் மீண்டும் கொழும்பு வந்ததும் அமைச்சில் உதவிகள் பெறுவதற்கு என்னிடம் வந்து நிற்பார்கள். அண்மையில் எனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி யாழ் மருத்துவச் சங்கத்துக்கு ஜனாதிபதியுடன் சந்திப்பை ஏற்படுத்தி வைத்தியசாலைக்கு அருகாமையில் பொலிசினால் கைப்பற்றப் படவிருந்த ஒரு காணியை வைத்தியசாலைக்கு பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினோம். ஆனால் இது நடந்து 2ம் நாள் வைத்தியசாலைக்கு தரவிருந்த இன்னொரு காணியில் வடமாகாண முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் உள்ளுராட்சி திணைக்களத்தின் கீழ் வரும் யாழ் மாநகரசபை கடைகளை கட்டி வியாபாரம் செய்ய நினைக்கிறது. சுருக்கமாக சொன்னால் சிங்கள அரசியல்வாதி போலீசை விட வைத்தியசாலை அபிவிருத்தியை உயர்வாக நினைக்கிறார். ஆனால் தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஏழை மக்களுக்கு உதவும் வைத்தியசாலை அபிவிருத்தியை விட வியாபாரத்தை உயர்வாக நினைக்கிறார்கள்.
இதுதான் எமது இனத்தின் சாபக்கேடு!
Murali Vallipuranathan

No comments:

Post a Comment