Sunday, December 4, 2016

இரவின் நியமங்கள்



நாட்குறிப்புகள்
தண்ணீரின் நிறத்தில் இருக்கின்றன
அதிலிருந்து எழும் சத்தங்கள்
சங்குக்குள் அடைபட்ட அரூப அலைகள்

கொடிமாசிகளில் இருந்து
ஒரு குடம் தண்ணீர் எடுக்க நினைப்பது
எத்தகைய மூடத்தனமோ
அத்தகையதே
இவ்வாழ்வில் சேர்க்க நினைக்கும் எல்லாம்

உயிரைத் தவிட்டின் கதகதப்பில்
இவ்விரவு கிடத்திய போது
உடலைத் தொப்புள் கொடியெனப் பற்றியது

பின் என்ன செய்ய முடியும்
உடலை விட்டத்தில் இரண்டு முடிச்சிட்டு அத்தொட்டிலில் உயிரை வைத்தால்
அது காகத்தின் குஞ்சென அயராமல்

வெளிச்சத்தை வாசம் என்றும்
வாசத்தைச் சிங்கக்குட்டி
என்றும் பிதற்றியது
உடலைச் செட்டைவிரித்து எழும் கழுகு
எனப் பகடி செய்தது

உயிரின் கண்கள் மலைவாசஸ்தலம்
அதற்குத் தாலாட்டு எளிதல்ல
உறங்குவதுமில்லை

இரவின் நியமங்களை அறிந்தபின் சொல்கிறேன்
பிரிவின் முகம் விடியற்காலை

- தேன்மொழி தாஸ்
4.12.2016
3.34 am

No comments:

Post a Comment