Friday, November 25, 2016

நீங்காத இரகசியங்கள் நிரம்பியதாக


Sakthi Jothi
1.
காரணமேதுமின்றியே 
இன்று காலையில்
நினைவுக்கு வந்தது
தாழம் பூக்களின் வாசனை

பூக்கள் என்றாலே
வண்ணத்திற்கும் முந்தி நிற்பது
வாசனைதான்
அதிலும்
தாழம்பூ தனிவகை

இரவு மின்னலின் போது
இரகசியமாக இதழ் அவிழும்
இந்தப் பூவிற்கு
மயக்கும் மணம் உண்டு

இயலும் மட்டும்
எல்லோருக்கும்
பார்த்துப் பார்த்துச்
செய்யப் பழகியதாலோ என்னவோ
எனக்கென
எதையும் செய்து கொள்ளத்
தோன்றாதவளாகவே இருக்கிறேன்

சிறுபிராயத்தில்
ஒற்றைப் பின்னலிட்டு
தாழம்பூச் சூட்டி விடும் போது
அம்மா சொல்வாள்
“தனக்கென்று
தனிநிறம் இல்லாமல் போனாலும்
ஊருக்கென்று மணக்குமாம் தாழம்பூ”



2.
உலர்ந்த திராட்சைகளை
அறிவாய்தானே தோழி
அனலோடிய எனதுடல்
இப்போது
அப்படித்தான் வாடியிருக்கிறது

மாநகர அடுக்ககத்தின்
சின்னஞ்சிறு இடுக்குகளிலிருந்து
புறாக்களின் குரல் கேட்டுத்தானே
இன்று கண் விழித்தேன்

தோழி
நீ அறியக்கூடாத இரகசியம்
ஒன்றுமில்லை என்னிடம்
தலைவன்
என்னைவிட்டு நீங்கிய நாள்
ஓர் அமாவாசை இரவு

நிலவோடு சேர்ந்து நாட்கள்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
தேய்ந்து மறைகின்றன
அவன் நினைவில்
ஊர்முழுக்க
அலைந்து திரிந்த பிறகு
அன்றாடம் வீடடைகிறேன்

முன்பு
அவன் நிகழ்த்திய
எந்த ஆட்டத்திலும்
பங்கு கொள்ளாமலேயே
பரிசு பெற்றாற் போல
மகிழ்வுற்ற மனம்தான்
இப்போது
எனதிந்த துன்பத்திற்கு காரணம்

உடுத்திய ஆடைகளை
அவிழ்ப்பது போல
அவ்வளவு எளிதல்ல
உறுத்திடும் நினைவுகளை களைவது
அது என்னை
மேலும்
தளர்வடையச் செய்துகொண்டிருக்கிறது தோழி.



3.
அதற்காக நடந்த யுத்தங்களை
அதற்காக சரிந்த ராஜ்யங்களை
அதன்பொருட்டு உருண்ட மகுடங்களை
அதை வேண்டி
மரித்த உயிர்களைப் பற்றி
பலவாகப் படித்த போதெல்லாம்
அவள் நம்பவேயில்லை

பேதையாக இருந்து
பேரிளம் பெண்ணென
அவள் வளர வளர
அதிலிருந்து மீள முயன்று
மீண்டும்
அதற்குள்ளாகவே வீழ்கிறவர்களாக
அநேகமானவர்களை சந்தித்து விட்டாள்

உயிர்ப்புடையதாக
நீங்காத இரகசியங்கள் நிரம்பியதாக
குறையாத அதிசயங்கள் கொண்டதாக
மென்மேலும் கொண்டாடப் படவேண்டியதாக
தன்னுடலை உணர்ந்துகொண்டிருக்கும் அவள்
இப்போது அறிந்திருக்கிறாள்
ஒரு ஆணுடைய வாழ்வின்
அதிஅவசியமான தேவை அதுவென.

No comments:

Post a Comment