Tuesday, October 4, 2016

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் அக்னி.


இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.
அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.
எதையும் வீணடிக்காதே
சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவில் நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.
இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.
நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!
நம் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆக நாம் மற்றவர்களைக் காப்பார்ரினால், அனத தர்மமே நம்மைக் காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.
ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது.
அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது. இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதை காணலாம். ஆயினும் 40,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
நன்றி-Tamil and Vedas

No comments:

Post a Comment