Tuesday, October 4, 2016

எழுத்தாளர் (சிறுகதை)


எழுத்தாளர் பக்கி (அதுதான் அவர் புனைப்பெயர்) அன்று கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தார். அவருக்கு நாற்பது வயது. வயதைக் குறிப்பிடுவது எதற்கென்றால் அவரைப் பற்றிய சரியான பிம்பத்தை உங்களுக்கு அளிக்க!

பக்கி இதுவரை ஏழோ எட்டோ புத்தகங்கள் போட்டிருக்கிறார். வித்தியாசமாகத் தலைப்பு வைத்தால் தான் மக்கள் வாங்குவார்கள் என்று 'சூனியத்தில் முளைத்தெழும் வெளி' , 'விட்டில் பூச்சியின் கனவுகள்' 'ஒளியற்றதன்   நிழல்கள்' 'கடலில் பிறக்கும் நதி' என்றெல்லாம் தலைப்பு வைத்து கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி இருக்கிறார். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஹேமாவின் பூனை என்ற வரலாற்று சிறப்பு மிக்கதொரு  புதினத்தை (?) எழுதி வெளியிட்டு இருக்கிறார். புதினம் என்றால் புதினா சட்னியின் சுருக்கப்பட்ட பெயர் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ரசனையற்ற மக்களுக்கு மத்தியில் அவர் புத்தகம் வெளியிடப்பட்டதே பெரிய விஷயம் என்று தன் குல தெய்வம் குருத்தாம் பாளையம்  வேலி காத்த அய்யனாருக்கு தினமும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நிற்க. அவர் உற்சாகமாக இருக்கிறார் என்று நாம் சொல்லியதற்குக் காரணம் மறுதினம் புத்தகக் கண்காட்சியில் அவரது வாசக வட்ட (?) நண்பர்கள் ஒரு சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது தான். வா.வ என்றதும் ஏதோ சாரு போல 15000 வாசகப் பெருமக்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். UKG குழந்தை போல டூ, த்ரீ , பைவ், எய்ட் என்று எடக்கு மடக்காக எண்ணினாலும் அவரது வாசக வட்டம் 100 ஐத் தாண்டாது.

அவரது மிகத் தீவிர வாசகர் குளுவான் குஞ்சு என்பவர் . அவர் ப்ளாக்கில் போஸ்ட் போடும் போதெல்லாம் அவருக்கு இமெயில் அனுப்பி கன்னா பின்னா என்று புகழ்பவர். அவர் இருக்க வேண்டியது சென்னை மண்ணடி குறுக்கு சந்தே அல்ல. ஜெர்மனியின் முனீச் சந்து தான் என்று தவறாமல் சொல்பவர். பக்கி தன் ப்ளாக்கில் கமெண்டுகளை disable செய்து விட்டார். இல்லை என்றால் இந்த அறிவு ஜீவிகளின் தொல்லை தாங்க முடியாது. ஒருவாரம் கங்குல் பகலாக யோசித்து ஒரு கருத்தாழமிக்க (?) பதிவு போட்டால் உடனே சண்டை போட ரெடியாக பின்னூட்டத்தில் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா என்று பக்கி நினைப்பார். இது தப்பு அது தப்பு என்று நொட்டை சொல் சொல்கிறார்களே தவிர உருப்படியாக எதுவும் எழுத மாட்டார்கள். இவர்களுக்கு இருக்கும் இந்த அறிவுக்கு ஏன் இன்னும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரவில்லை என்று யோசிப்பார்.

பக்கிக்கு அறிவியல் என்றால் அலர்ஜி. இன்னும் கூட இவ்வளவு பெரிய பூமி அந்தரத்தில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் என்பதை அவர் நம்பவில்லை. ஒரு நாள் தெரியாத் தனமாக ஏதோ ஒரு நல்ல மூடில் 'பொருள் என்பது சூனியம் தான்' என்ற நவீன இயற்பியல் தத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதம் சொல்லி விட்டது என்று தன் ப்ளாக்கில் ஒரு பிட்டைப் போட்டு வைத்தார். அதற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்து விட்டுத் தான் தமிழ் நாட்டில் இத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்பதை பக்கி உணர்ந்தார். ஒரு விமர்சகர் இப்படிக் கமெண்ட் போட்டிருந்தார். அதைப் பார்த்த நிமிடத்திலேயே அவசர அவசரமாக கமெண்ட்ஸ் ஐ disable செய்து விட்டார்.

ஞானதேசிகன் commented on 'பொருள்-சூனியம்-பொருள்'..

view 59 more comments

"அன்பின் பக்கி, இது எந்த உபநிடதத்தில் எந்த சர்கத்தில் வருகிறது என்று reference சொல்ல முடியுமா? சூனியம் என்ற ஒன்றை குவாண்டம் தத்துவம் நம்புவதில்லை. காசிமிர் வாக்யூம் என்று எண்ணிலடங்கா ஆற்றல் துகள் எதிர்த்துகள் பேரணிகள் சூனியத்தில் நிலை கொண்டுள்ளன.உதாரணமாக மேல் குவார்க் மற்றும் வேறுபடு (strange )குவார்க்குகள் கொண்ட கேயான் ஒன்று பையான் -ஆக சிதைந்து இடைநிலையில் W போசானும் குளுவான்களும் வருகின்றன"

Comments disabled ..


பக்கி ரொம்ப பில்ட் அப் கொடுக்காமல் ஒரு எல்லைக்குள்ளாகவே இருப்பது என்று தீர்மானித்தார்.கொஞ்சம் intellectual ஆன விஷயங்களை இப்போது அவர் தொடுவதே இல்லை.கவிதை எழுதினால் பிரச்சினை இல்லை பாருங்கள். தன் சமீபத்திய ஹேமாவின் பூனை புத்தகத்தில் அவர் அகநானூறு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் , பிஸி பேளா பாத் செய்வது எப்படி , The count of Monte kristo , குற்றியலிகரம், சிவ வாக்கிய விளக்கம், பார்முலா ஒன் ரேஸ், ஓரினச் சேர்க்கை, 12 years a slave ,இலங்கைத் தமிழர்கள், பரிணாமம், சுவாதிஸ்டானம் , நரேந்திர மோடி, எமிலி டிக்கின்சன் ,வர லக்ஷ்மி விரதம்,ice age ,gravity 3டி ,சிந்து பைரவி, ஜக்கி வாசுதேவ், குட்டி ரேவதி, இளையராஜா ,முடி உதிர்வதைத் தடுப்பது எப்படி என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்.

நிலவின்
மங்கிய வெள்ளொளியில்
எனக்குள் பீறிட்டுக் கிளம்பிய
தனிமையின் ஏகாந்தத்தை
நிரப்ப வரும்
சம்பூரணத்தின்
சிறகுகளின் நறுமணத்தில்
பூத்துப் படரும்
உன் நினைவு!

என்றெல்லாம் கவிதை எழுதினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் பாருங்கள்.

குளுவான் குஞ்சு அலை பேசியில் அழைத்து , 'சார் நாளைக்கு ஒரு சின்ன கூட்டம் போடலாம். இருபது முப்பது வாசகர்களை அழைத்து வருகிறேன்' அடையாளம் பதிப்பகத்தின் அருகில் கூட்டம் என்றார்.எழுத்தாளர் பக்கிக்கு உற்சாகம் பொங்க ஆரம்பித்து விட்டது. சந்திப்பில் என்ன பேசுவது , 'இலக்கியம் என்பது என்ன, பெர்னாட்ஷா என்ன சொல்கிறார் என்றால் ..' என்று பேசுவது என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டார். ஆட்டோக்ராப் கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட வரிகளை எழுதித் தரலாம் என்றெல்லாம் கற்பித்துக் கொண்டார்.

"உங்கள் தலையெழுத்தை  மாற்ற முடியும் ஒரு எழுத்தாளனின் கையெழுத்து!! "

-உங்கள் அபிமான பக்கி


அன்று இரவு 1 மணி வரை என்னென்னோவோ புத்தகங்களை வைத்து குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டார். " எழுத்தாளர் பக்கியை சந்திக்க வரும் வாசகர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் வாசகர்கள் தங்கள் உடைமை, செல் போன் , புத்தகங்கள் , பிஸ்கட், குழந்தை முதலியவைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்' என்று மைக்கில் அறிவிப்பதாகக் கனவு கண்டார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து கொண்டு ஷேவ் செய்து கொண்டு பேன்டீன் சாம்பூ போட்டுக் குளித்து விட்டு சிறப்பான உடைகளை அணிந்து கொண்டார் பக்கி.புதிய பெல்ட் அணிந்து கொண்டு டக் இன் செய்து கொண்டார். வாட்ச் கட்டிக் கொண்டார். 8 மணிக்கு குஞ்சுக்கு போன் செய்த போது 'The number you are trying to call is not reachable' , என்று வந்தது , அந்த அழகான பெண் குரல் அதைத் தமிழில் பெயர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பாதியிலேயே 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்...' கட் செய்தார். 9 மணிக்கு மீண்டும் போன் செய்த போது அதே பெண் குரல், வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றது.சரி தொந்தரவு செய்ய வேண்டாம். வாசக வட்ட நண்பர்களை சேர்த்துக் கொண்டு கண்காட்சிக்கு வந்து விடுவார் என்று பக்கி சுய சமாதானம் சொல்லிக் கொண்டார்.கண்காட்சிக்குத் தனியாகவே போவது என்று முடிவு செய்து டாக்ஸி ஒன்றைப் பிடித்து 11 மணியளவில் அங்கே ஆஜரானார்.அலீப் டிபன் சென்டரில் மூன்று இட்லி ஒரு பரோட்டா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டார்.

அன்று கண்காட்சிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து பக்கிக்குத்  தன் கண்களையே நம்ப முடியவில்லை.தமிழ்நாடு கேரளாவை முந்திக் கொண்டு எங்கோ இலக்கிய ராஜ பாட்டையில் 5th கியரில் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றியது.வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு நடக்கும் 90 வயது முதியவரில்  இருந்து சாக்கோ பார் கடித்துக் கொண்டு நடக்கும் 10 வயது சிறுவன் வரை எல்லாரையும் காண முடிந்தது அவ்விடத்தில் .எது எடுத்தாலும் இருபது ரூபாய் என்று கூவி அழைக்கும் பொருட்காட்சிக்குக் கூட இவ்வளவு கூட்டம் வராது போலிருந்தது. இன்னொரு ஆச்சரியம் 'Im a machine; but I used to be a person long long ago' என்பன போன்ற பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட தேநீர் சொக்காய்களை அணிந்த யுவன்களும் யுவதிகளும் வந்திருந்தது. கத்திரிக்காயில் 90 வகை சமையல், லக்ஷ்மி சஹஸ்ரநாமம்  போன்ற புத்தகங்களை வாங்க வந்திருந்த மாமிகளை பக்கி கண்டு கொள்ளவேயில்லை.

பக்கி நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஸ்டால்களுக்குள் நுழைந்து நிதானமாக நடந்து பார்வையிட்டார். முதல் முறையாக 'யாருமே தன்னைக் கண்டு கொள்ளவில்லை' என்ற உண்மை அவருக்கு மெதுவாய் உறைக்க ஆரம்பித்தது. குஞ்சுக்கு போன் செய்தார். மூன்று முறையும் ரிங் போயிற்றே தவிர அவர் attend செய்யவில்லை.நான்காவது முறை குஞ்சு எடுத்து பதட்டத்துடன் , 'சார்,,ரொம்ப சாரி,,,,நண்பர் ஒருவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி எமெர்ஜென்சியில் இருக்கிறார். ஆஸ்பிடலில் இருக்கிறேன், ஈவினிங் கூப்பிடுகிறேன் சாரி ' என்று சொல்லி போனை வைத்து விட்டார். இன்னொரு வாசகருக்கு போன் செய்ததில் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பக்கி தனியாளாக கண்காட்சியை நோட்டம் விடுவது என்று தீர்மானித்தார்.

தன் வ .சி.மிக்க புத்தகமான 'ஹேமாவின் பூனை' யை யாராவது வாங்குகிறார்களா என்று ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். எல்லாரும் கொற்கை, பொன்னியின் செல்வன்,ஓநாய் குலச் சின்னம் உப பாண்டவம்  என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்கள் பொன்னியின் செல்வன் ,  படிக்கிறார்களா அதில் என்ன தான் இருக்கிறதோ என்று பக்கி வியந்தார்.அவர் புத்தகத்தை வெளியிட்டிருந்த தமிழன்னை பதிப்பகத்தில் ஈயாடியது. அதற்கு நித்தியானந்தா பதிப்பகத்தில் கூட ரெண்டு பேர் நின்று கொண்டு டி.வி.டி இருக்கா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அந்த அம்மணி அவர்களிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு டி .வி.டி. அனுப்புவதாகவும் எக்ஸ்ட்ராவாக குண்டலினியை எழுப்பித் தரலாமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். குறும்பு மிக்க இளைஞர் ஒருவர் ரஞ்சிதா மேடத்தைக் காணலியே என்று கமெண்ட் செய்து கொண்டே கடந்து சென்றார்.

பக்கி ஒரு லிட்சி ஜூஸ் குடித்து விட்டு கண்காட்சியை மீண்டும் வலம் வந்தார்.தன்னை யாரேனும் அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று நோட்டம் விட்டார். அழகான இளம் யுவதி ஒருவள் வந்து 'சார், நான் உங்க தீவிர ரசிகை , உங்கள் 'விட்டில் பூச்சியின் கனவுகள்', சான்சே இல்லை சார், வாட் எ லிடரசர் ஆட்டோ கிராப் ப்ளீஸ் என்று சொல்வாள் என்று கண்டிப்பாக எதிர்பார்த்தார்.ஆனால் சற்றேறக்குறைய அப்படிப்பட்ட யுவதி ஒருத்தி இவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல்  தன் ஆண் நண்பரிடம் தன் whatsapp இல் அனுப்பிய குறுந்தகவல் வரவில்லையா என்ற தத்துவ வேந்தாந்த விசாரத்தைப் பேசிக் கொண்டிருந்தாள் .மக்கள் தொடர்ந்து நடுப்பகல் மரணம் கம்ப்யூட்டர் கிராமம் அனிதாவின் காதல்கள்  போன்ற அலுத்துப் போன சுஜாதா புத்தகங்களை வாங்கிய வண்ணம் இருந்தனர். பக்கிக்கு அந்த ஆள் மேல் எரிச்சலாக வந்தது. நல்ல வேளை  அந்த ஆள் இப்போது உயிருடன் இல்லை இருந்திருந்தால் யாரையும் எழுத விட்டிருக்க மாட்டார் என்று ஆறுதலும் வந்தது.உயிர்மை ஸ்டாலின் வெளியே அமர்ந்திருந்த மனுஷ்ய புத்திரனை கண்டும் காணாமல் வந்து விட்டார். ஏனென்றால் மூன்று நான்கு பேர் அவரை சுற்றி நின்று கொண்டு கையெழுத்து வாங்க முயன்று கொண்டிருந்தனர். அப்படியென்ன பிரமாதமாக எழுதறார் என்று தனக்குள் சலித்துக் கொண்டார். தானும் உட்காரலாம் என்று ஏதேனும் நாற்காலியைத் தேடினார். மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே நாற்காலி தருவார்கள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்.கண்காட்சியின் உள்ளே நிலவிய வெக்கை மின் விசிறிகளையும் மீறி உறுத்தியது.

பக்கி வாரியார் பதிப்பகம் சென்று 'வாரியார் சொன்ன குட்டிக் கதைகள்' புத்தகத்தை வாங்கினார்.தன் அடுத்த புத்தகத்துக்கு உதவும் என்று தமிழ் மொழி வரலாறு என்று 600 ரூபாய்  குண்டு புக்கையும் வாங்கினார்.மக்கள் 'அரசு பதில்கள்' 'பக்தி யோக விளக்கம்' 'யானைகள் காணாமலாகின்றன ,சில்க் சுமிதாவின் கதை , கொக்கோக சாஸ்திரம் ,பீக்கதைகள் போன்ற புத்தகம் எல்லாம் வாங்குகிறார்கள், நம் புத்தகத்தை வாங்குவார் இல்லை என்று தனக்குள் அலுத்துக் கொண்டார்.இதற்கும் தன் புத்தகத்தின் பின் அட்டையில் தான் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மைசூர் ஜூவில் நின்றிருக்கும் போட்டோவை கலரில் போட்டிருக்கிறார்.

மதியம் இரண்டு மணியளவில் பக்கி புத்தகக் கண்காட்சி கேண்டீனுக்குள் நுழைந்தார். முக்கால் வாசிக் கூட்டம் அங்கே தான் இருப்பது போல் இருந்தது.
பக்கி ஒரு ரவா தோசை டோக்கன் வாங்கி தோசை வேகும் வரை அசுவாரஸ்யமாய் காத்திருந்து வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொள்ள நாற்காலிகளைத் தேடினார். காலி நாற்காலி ஒன்று கூட இல்லை. யாரேனும் எதிர் வந்து , சார், உட்காருங்க ப்ளீஸ், உங்க 'ஹேமாவின் பூனை'....என்று சொல்வார் என்று எதிர் பார்த்தார்.ஆனால் மக்கள் நூடூல்ஸ் ஐயும் சூடான மசால் தோசையையும் டெல்லி அப்பளத்தையும்  உள்ளே தள்ளுவதிலேயே குறியாக இருந்தனர். கொடுமை என்ன என்றால்  தோசையை தின்று முடிந்ததும் எழும்பிப் போகாமல் மக்கள் அங்கேயே அமர்ந்து தாங்கள் உள்ளே வாங்கிய புத்தகங்களை , ப்ரீயாக வந்த காலண்டர்களை , துண்டுப் பிரசுரங்கள் இத்யாதிகளை  பிரித்துப் படிக்கவும் செய்தார்கள். உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று பக்கி நினைத்துக் கொண்டார். ஒரு நாற்காலி காலியாய் இருக்கவே பக்கி உடனே போய் அங்கு ஏறக்குறைய அமர்ந்தே விட்டார்.அருகில் அமர்ந்திருந்த பெண் விரோதமாக 'ஆள் வருது' என்றாள் . பக்கி பேரவமானமாக உணர்ந்து நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு அவ்விடத்தினின்றும் வெளியேறினார்.

கண்காட்சிக்கு வெளியே ஒரு இலக்கியக் கூட்டம் (?)நடந்து கொண்டிருந்தது.
தெலுங்கு, கன்னட கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். ஸ்லீவ்லெஸ் அணிந்த கன்னடப் பெண் கவிஞர் தன் கவிதையை வாசிக்கும் போது கிட்டத்தட்ட நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அதில் பக்கிக்கு 'கொத்தில்லா கொத்தில்லா' என்பது மட்டும் புரிந்தது. அதை மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்த பெண் 

என்னை 
துலைத்த உன் விழிகல் 
குலத்தின் கரையில் 

என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ல ள வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இலக்கியக் கூட்டத்துக்கு வந்து விடுகிறார்கள் என்று சலித்துக் கொண்டு பக்கி அவ்விடம் விட்டு கோபத்துடன் சாரி அறச் சீற்றத்துடன் வெளியே வந்தார்.

என்னமோ போடா மாதவா என்று விரக்தியுடன் சலித்துக் கொண்டார்.

கண்காட்சியை விட்டு வெளியே போகுமுன் சுண்டல் வாங்கிச் சாப்பிடலாம் என்ற ஆசை அவருக்குள் துளிர் விட்டது. சுண்டல் விற்பவன் டாய்லெட் போய் விட்டு சானிடைசரில் கை கழுவுவானா என்பன போன்ற  மனச்சாட்சியின்  கேள்விகளைப் புறம் தள்ளி விட்டு  சுண்டல் விற்ற பையனை அழைத்தார். ஒரு சுண்டல் குடு என்று பத்து ரூபாயை நீட்டினார்.

அவரை நிமிர்ந்து பார்த்த சுண்டல் பையன் 'சார் , நீங்க எழுத்தாளர் பக்கி தானே'? என்றான்.



சமுத்ரா

No comments:

Post a Comment