Sunday, September 25, 2016

தஸ்லிமா நஸ் ரீன் பெண்ணியக் கவிதைகள்

( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் ) தமிழில் / சிபிச்செல்வன்
அதன் பிறகு (Thereafter)
என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம்
அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம்.
மதிய குளியலை மறந்து அவள் தன்னை மறந்து கார்ல் மார்க்ஸ்,
கார்கி, டால்ஸ்டாய், மற்றும் மாணிக் பந்தோபாத்யாய நாவல்கள் போன்றவற்றில் மூழ்குவாள்.
அவளுடைய பழைய ஞாபகத்தில் மூழ்குவதற்கு லாரா இன்கல்ஸ் வைல்டர்தான் பிடித்தமானவர்
போரைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தால், பாதி ராத்திரிவரை அழுது கொண்டேயிருப்பாள்.
என் சகோதரி அருமையான கவிதைகளை வாசிப்பாள்;
அவளுக்கு விருப்பமான சங்கா கோஷ், நீரேந்திரநாத் சக்கரபாரதி, நெருடா, மற்றும் யெவ்துஜூங்கோ
என் சகோதரி காட்டை நேசித்தாள், தோட்டத்தையல்ல;
அவள் சிலைகளை விரும்புவாள். ஒரு முறை இவற்றிற்காகப் பாரீஸ் போக டிக்கெட் வாங்கினாள்.
இப்போது என் சகோதரியின் கவிதை நோட்டில்
காய்கறி பற்றிய விவரங்களை எழுதி வைத்திருக்கிறாள்,
இப்போது பெருமையோடு சுற்றி வருகிறாள், உடல்நிறைய உலோக ஆபரணங்களை அணிந்து
அவள் பெருமையோடு சொல்கிறாள்
அரசியலைப்பற்றி
எண்ணியதில்லை
கலாச்சாரம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் அதுபற்றி அவள் கவலைப்படுவதில்லை.
அவளின் வீணை மீது தூசி படிந்திருக்கிறது, அவளின் தம்புரா எலி வலையானது
இப்போது அவள் கடை வீதிகளுக்குப் போய் வீட்டிற்கு தேவையான பொருட்களைச் சேகரிப்பதில்
கெட்டிக்காரியாகி விட்டாள்.

No comments:

Post a Comment