Thursday, September 15, 2016

கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்? இது லேட்டஸ்ட்!


‘வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிமை யானவையே. உங்களால்தான் அவை சிக்கலாகிவிடுகின்றன’ என்கிறார் ஓஷோ. இந்த பொன்மொழியை வழிமொழிவதுபோல, கொலஸ்ட்ராலுக்கு ஆதரவாக வெளிவந்திருக்கும் சமீபத்திய அமெரிக்க ஆய்வு பலத்த விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் என்பதைக் கேட்டாலே அலறுகிற அளவுக்குத்தான் நம்மிடம் புரிதல் இருக்கிறது. ஆனால், US Dietary guidelines advisory committee 2015 வெளியிட்டிருக்கும் ஆய்வில், `இதய நோய்கள், பருமன், நீரிழிவு பிரச்னைகளுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் சரி செய்ய வேண்டும்’ என்று லாஜிக்கலாக பல காரணங்களை பட்டியல் இட்டிருக்கிறது. இதற்கு மருத்துவ வட்டாரத்தில் ஆதரவும் பெருகி வருகிறது.
‘உணவின் மூலம் கிடைக்கும் டயட்டரி கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. கொலஸ்ட்ராலைவிட அதிகப்படியான சர்க்கரை மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானிய உணவுகளே இதய நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய இடம்பிடிக்கின்றன’ என்கிறது அந்த ஆய்வு. ‘40 வயசாயிருச்சா? எல்லாவற்றையும் தியாகம் செய்து, பத்திய சாப்பாடு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதையும் தவறு என்கிறது இந்த ஆய்வு.
காரணம், உணவின் மூலம் கிடைக்கும் கொலஸ்ட்ரால் 15% மட்டுமே. மீதி 85% கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரலே உற்பத்தி செய்கிறது என்பதும் இதில் கவனிக்க வேண்டிய தகவல். 10 கிராம் கொலஸ்ட்ரால் உணவுகளினால் ரத்தத்தில் 10 கிராம் கொலஸ்ட்ரால் உண்டாகும் என்று நினைப்பதும் தவறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதய நோய் சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்…‘‘இந்த ஆய்வை நான் வரவேற்கிறேன். நம் உடலுக்கு அத்தியாவசியமான ஒரு சத்து கொழுப்பு. தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துகள் எப்படி நம் உடலுக்குத் தேவையோ, அதேபோல கொழுப்புச் சத்தும் நமக்குத் தேவை. 30 வயது வரை நம் உடலின் உருவாக்கத்துக்கும், அதன் பிறகு சேதமடையும் செல்களை சரி செய்யவும் ஹார்மோன்களின் இயல்பான செயல்பாட்டுக்கும் கொழுப்பு தேவை. ஆனால், கொலஸ்ட்ரால் பற்றி மக்களிடம் தேவையற்ற பயம் இருக்கிறது.
பருமன், இதய நோய்கள், நீரிழிவு என்று பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குபவை கொலஸ்ட்ரால் என்பதெல்லாம் உண்மை தான். அவையெல்லாம் LDL, VLDL, ட்ரைகிளிசராய்ட்ஸ் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் இந்த கெட்ட கொழுப்புகளாலேயே வருகின்றன.
நாம் பயம் கொள்ள வேண்டியது கொலஸ்ட்ராலைவிட அதைச் சார்ந்த மற்ற விஷயங்களில்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த ஆய்வு. அளவு கடந்த சர்க்கரை பயன்பாடு, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகைப்பழக்கம், மன அழுத்தம், மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவைதான் பருமனையும் நீரிழிவையும் உண்டாக்குகின்றன. இதயத்துக்கு எதிரிகள் இந்தப் பிரச்னைகள்தான் என்று சர்வதேச அளவிலான பொது காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அது இப்போது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறது.
கார்போஹைட்ரேட் உணவும் தேவைக்கேற்ப செலவழிந்ததுபோக, மீதமுள்ளது கொழுப்பாக மாறிவிடும். அதனால் கார்போஹைட்ரேட் உணவுகளையும் அளவு தாண்டாமலேயே பயன்படுத்த வேண்டும். ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கி விடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது கற்றுக் கொள்வதுதான் அவசியமானது. ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் நமக்கு உதவும் ஹீரோ. தவறாகப் பயன்படுத்தினால் நம்மைக் காலி செய்யும் வில்லன்’’ என்கிறார்.
கொலஸ்ட்ரால் கொலைகாரனா?
Chol என்ற வார்த்தை பித்தம் என்பதையும், Sterols என்ற வார்த்தை ஸ்டீராய்டு ஹார்மோனையும் குறிக்கிறது. அதாவது, கொலஸ்ட்ராலே உடலில் அதிகம் சுரக்கிற ஒரு வகை ஸ்டீராய்டு ஹார்மோன்தான். அதனால்தான் இது அசைவ உணவுகளில் அதிகம் இருப்பதாகக் கூறுகிறார்கள். பித்தநீர்தான் வைட்டமின்களைப் பிரித்து ரத்தத்தில் கலக்க உதவி செய்கிறது.
கொழுப்பின் அளவு 10க்கும் குறைவாக இருப்பதை சைஸ் ஸீரோ என்கிறார்கள். கரீனா கபூர், கேத்ரினா கைஃப் போன்ற மும்பை நடிகைகளும், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களும் எடையை குறைப்பதற்காக இந்த அபாயகரமான வேலையைச் செய்கிறார்கள். சராசரி கொழுப்பின் அளவை பராமரிப்பதே அனைவருக்கும் அவசியம். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் செக்ஸ் ஹார்மோன்கள் சீராக செயல்பட கொலஸ்ட்ரால் அவசியம். கொலஸ்ட்ரால் குறைந்தாலோ, அதிகமானாலோ செக்ஸ் ஹார்மோன்களில் குளறுபடி ஏற்பட்டு ஆண்களிடம் ஆண் தன்மையையும், பெண்களிடம் பெண் தன்மையையும் குறைப்பதோடு தாம்பத்திய வாழ்வையும் பல வழிகளில் சிக்கலாக்கும்.
உடலில் கால்சியம் அளவை பராமரிப்பதிலும், உணவில் இருக்கிற சத்துகளை உடலின் செல்களுக்குக் கொண்டு செல்வதிலும், சூரிய ஒளியிலிருந்து சருமம்
சேதமாகாமல் தடுப்பதிலும் கொலஸ்ட்ராலுக்குப் பெரும் பங்கு உண்டு. முட்டை கொலஸ்ட்ராலைக் கொண்டு வருகிறது என்ற கருத்து இருக்கிறது. அதனாலேயே மஞ்சள் கருவை விட்டுவிட்டு பலரும் சாப்பிடுகிறார்கள். அது அவசியம் இல்லை.
விளையாட்டு வீரர்கள், பாடி பில்டர்கள் போன்றோர் மிக அதிக அளவில் முட்டையை சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். சாப்பிடுவதற்கேற்ற உடல் உழைப்பு கட்டாயம் என்பது மட்டுமே நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். முன்பு கொலஸ்ட்ரால் பிரச்னை என்றால் மாத்திரைகள் மட்டுமே தருவார்கள்.
இப்போது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், உணவுப் பழக்கத்தை ஒழுங்குக்கு கொண்டு வர வேண்டும், தியானம் செய்ய வேண்டும் என்று கொலஸ்ட்ராலைச் சார்ந்த மற்ற பிரச்னைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே நல்ல மாற்றம்தானே! ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்வதுதான் இப்போது அவசியமானது.
ஞானதேசிகன்

No comments:

Post a Comment