Monday, August 8, 2016

இணங்கிப் போதல் ....


அவர்களின்
விருப்பின்படியே
நில்லுங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
உட்காருங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
உண்ணுங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
உடுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
அழுங்கள்,
சிரியுங்கள்,
பேசுங்கள்,
கல்லுங்கள்,
உறங்குங்கள் ,
கனவு காணுங்கள்,
கொட்டாவி விடுங்கள்...

நீங்கள்
அவர்களுக்கானவர்கள்.
அவர்களுக்காகவே
அவர்களின்
விலா எலும்பிலிருந்து
சிருஸ்டிக்கபட்டவர்கள்.
அவர்களின்
கட்டளைகளுக்கு
கட்டுப்பட வேண்டியவர்கள் .....

இயன்ற அளவுக்கு
அவர்களை
இன்பப்படுத்துங்கள்

அவர்கள்
உங்களை
பார்த்த
அடுத்த நொடியே
அவர்கள் மீது
காதல் கொள்ளுங்கள்.
அவர்கள்
தீர்மானிக்கும் காலத்தில்
அவர்களை
திருமணம் செய்யுங்கள்.
அவர்கள்
அழைக்கும் வேளைகளில்
எல்லாம்
அவர்களை
புணர்ந்து கொள்ளுங்கள்.
அவர்கள்
விரும்பும்போது
மட்டுமே
கருத்தரித்து கொள்ளுங்கள்.

இங்கு
உங்களுடைது
என்று
எதுவுமேயில்லை.

நீங்கள்
சும்மா இருப்பதற்கு கூட
அவர்கள்தான்
சுதந்திரம்
அளிக்க வேண்டியிருக்கிறது.

அவர்களின்
அனுமதியின்றி
நீங்கள்
அழக்கூட
முடியாதே

இவற்றையெல்லாம்
மனதார ஏற்று
உத்தமியாக,
ஒழுக்க சீலியாக,
பத்தினியாக,
பதிவிரதையாக,
கற்புடையோளாக
வாழ்வதெனில்
மட்டும்
வாழுங்கள்.
அன்றேல்
செத்துப் போங்கள்....

அரிவாள்கள்
ஆயத்தமாகவே
உள்ளன .....

நவாதரன் கவிதைகள்

No comments:

Post a Comment