Sunday, August 7, 2016

இராமாயணத்தில் குகன் ஓர் அற்புதமானப் பாத்திரம்.

 இராமன் வன வாசத்துக்குச் செல்லும் போது அவருக்குப் பலரும் உதவுகிறார்கள். அதில் முதலில் உதவி செய்வது குகன் தான். கங்கைக் கரைக்கு வந்தவுடன் கங்கையைக் கடக்கப் படகோட்டி குகன் உதவிப் புரிகிறான்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.
அந்த இறைவனையே கடலைப் போன்ற கங்கையைக் கடக்க உதவி செய்து, அன்பினாலும், மரியாதையினாலும், பக்தியினாலும், இராமனுக்குச் சகோதரன் ஆகும் பேற்றைப் பெறுகிறான் குகன்.
இராமனுக்குக் கூடப் பெருமாள் என்ற பட்டம் கிடையாது. இரண்டு பேர்களுக்கு தான் அது உண்டு. ஒருவர் இளையப் பெருமாள் இலக்குவன், மற்றொருவர் குகப் பெருமாள், குகன். ஆன்மா என்னும் குகையில் வாழ்பவன் குகன் என்று குகனுக்கு ஒரு பொருளுண்டு.
இராமபிரானைப் பார்க்காமலே அவர் கல்யாண குணங்களைக் கேட்டறிந்து அவர் மீது மிகுந்த அன்பு கொண்டு வாழ்ந்து வந்தவன் குகன். அவன் வேட்டுவர் குலத் தலைவன்; அரையில் ஆடையும் காலில் தோல் செருப்பும் அணிந்தவன்; இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்; வீரக் கழலுடன் அணிகலன்கள் பல அணிந்தவன்; இருளைத் தொடுத்தது போன்ற கருத்த தலைமயிர் கொண்டவன். பாறை போன்ற பரந்த மார்பும், இந்திரனது வச்சிராயுதத்தைப் போன்ற இடையும், நீண்ட கைகளும், கொடிய பார்வையும், பித்தன் போலத் தொடர்பில்லாத பேச்சும், கருமையான நிறத்தைப் பெற்ற உடலும் கொண்டவன். குகனின் இத்தகையத் தோற்றத்தைக் கம்பரின் பாடலில் இருந்து தெரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட ஒருவனை இராமன் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்றால் குகன் எப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்தவனாக இருந்திருக்க வேண்டும்!
கங்கையாற்றின் பக்கத்திலே அமைந்த சிருங்கி பேரம் என்னும் நகரத்தில் வாழும் வாழ்க்கையைப் பெற்றவன். பொய் இல்லா மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன்; யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன்; அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்; தூய கங்கையாற்றின் ஆழம் அளவு உயர்ந்தவன்; வேட்டைக்குத் துணையாக நாயினை உடையவன்; துடி, ஊது கொம்பு, துந்துபி முதலான இசைக்கருவிகள் நிறைந்த படையை உடையவன். (கம்ப இராமாயணப் பாடல்-குகப்படலம் 9)
இராமன் வந்திருக்கிறான் என்ற சேதியை அறிந்து அவருக்குக் கொடுக்கத் தேனும் மீனும் எடுத்துச் செல்கிறான் குகன். அழகு திகழும் இராமனைத் தன் கண்களினால் கண்டு களிப்படைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தண்டனிட்டு விழுந்து வணங்கினான். உடலினை வளைத்து வாயினைப் பொத்திக் கொண்டு பணிவுடன் நின்றான்.
கூவா முன்னம், இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என, அன்பின் இறைஞ்சினான்;
‘தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்;
நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்‘ என்றான்.
(கங்கைப் படலம் 38:3-4)

(நாவாய் = ஓடம்)
நாய் அடியேன்‘ என்றான் = நாய் போல அடிமையானவன் என்கிறான்.
இதிலிருந்து வள்ளுவர் கூறும் பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கு ஏற்பக் குகனின் பணிவு உணர்த்தப்படுகின்றது. குகன் இலக்குவனனையே இராமன் என்று நினைத்து உன் கழல் சேவிக்க வந்தேன் என்கிறான்.
உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன் என்றான். (க.இரா குகப் படலம் -12)
இராமனைப் பார்க்க வருகையில் தேனும் மீனும் கொண்டு வருகிறான் குகன். உண்ணுதற்குரிய பொருள்களை என்றும் எடுத்து வருதல் தாயின் தன்மை. அது போல இராமனுக்குக் கொடுக்கத் தேனும் மீனும் கொண்டு வந்த குகனிடம் தாயன்பைக் காண்கிறோம். அதைத் தான் கம்பர் “தாயின் நல்லான்” என்கிறார்.
இராமன் வனவாசம் செல்லவே அங்கு வந்திருக்கிறார் என்ற அவரின் நோக்கம் அறிந்த பின், குகனுக்கு இராமனைக் காட்டுக்குள் அனுப்பவே விருப்பமில்லை. அங்கேயே இருந்து விடும்படி மிகவும் கெஞ்சிப் பார்க்கிறான். தன் நாட்டின் வளத்தையும் தன் மக்களின் விருந்தோம்பல் குணத்தையும் எடுத்துச் சொல்கிறான்.
அதற்கு இராமன் அவன் மனம் நோகாதபடி, நியதிப்படி தான் வனவாசத்தை சமுதாயத்தில் கழிக்கக் கூடாது என்பதை அவனுக்கு உணர்த்தி, நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள புனிதமான முனிவரை வழிபாடு செய்து, வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று கூறுகிறார். பதினாலு வருடங்களையும் அவன் மனம் நோகக் கூடாது என்பதற்காக சில நாட்கள் என்று சொல்கிறார் இராமன்.
இராமன் சீதா இலக்குவன் ஆகிய மூவரையும் குகன் தன் படகில் ஏற்றி கங்கையின் மறு கரைக்கு அழைத்துச் செல்கிறான். அவர்கள் அங்கிருந்து சித்திரக்கூடத்திற்குச் செல்வதாகத் திட்டம். அக்கரைக்குக் கொண்டு விட்டதும் இராமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் குகன், தீய விலங்குகள் தங்களை நெருங்க விடாமல் அவற்றை அழித்து, நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். விரும்பிய பொருளைத் தேடிக் கொடுப்பேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன், அதனால் உங்களுடன் வருகிறேன் என்று இறைஞ்சுகிறான். அந்தக் குறுகிய காலத்திலேயே இராமன் மேல் நீங்காப் பற்று வைத்து இராமனின் திருவடி மலரைப் பிரிய முடியாத நிலைக்குப் போகிறான்.
உடனே இராமன், குகனே நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, அழகிய சீதை உனக்கு உறவினள், குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது என்கிறார். மேலும், உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன் உடன் பிறந்தவர்களாக நால்வர் இருந்தோம். இப்போது உன்னோடு சேர்த்து ஐவராகி விட்டோம். அதனால் இனி நீ உன் இருப்பிடம் சென்று உன் மக்களைக் காக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை இடுகிறார். எப்படி என் தம்பி பரதன் அயோத்தியை ஆள்கிறானோ அது மாதிரி நீயும் உன் நாட்டை ஆள வேண்டும், உன் தம்பி இலக்குவன் என்னை பத்திரமாகக் காட்டில் பாதுகாப்பான் என்று சொல்கிறார்.
‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43
அன்பால் உடன்பிறப்பு விரியும் தன்மை இதனால் புலப்படுகிறது.
குகனைத் தனது சகோதரன் என்ற இராமன் அவ்வுறவை மேலும் இக் கூற்றால் பலப்படுத்தினான் எனலாம்.
“ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து,
மாழைமான் மடநோக்குஇன்தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து,
தோழன் நீ எனக்கு இங்கொழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்தி “
என்று இந்நிகழ்ச்சியைத் திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தில் கூறுகிறார். (திவ்ய. 1418)
இராமன் சொல்லைத் தட்ட முடியாமல் குகன் தன் இருப்பிடம் திரும்புகிறான். அப்பொழுது அயோத்தியில் இருந்து ஒரு பெரும் சேனைக் கும்பல் வருவதைக் காண்கிறான். அதைத் தலைமை வகித்து அழைத்து வருவது பரதன் என்று தெரிந்து கொள்கிறான். அருகில் வந்தவுடன் குகனிடம் இராமன் சென்ற திசையைப் பற்றிக் கேட்கிறான். உடனே குகனுக்கு சந்தேகம் வருகிறது. கைகேயி நாட்டைப் பிடுங்கி பரதனிடம் கொடுத்துள்ளாள். அவள் மகனாகிய பரதன் ஏன் இராமனைத் தேடி வரவேண்டும்? ஒருவேளை இராமனை ஒழித்துக் கட்டி முழு இராஜ்ஜியத்தையும் தானே எடுத்துக் கொள்ள நினைக்கிறானோ என்று எண்ணுகிறான். தனக்கு என்ன இன்னல் வந்தாலும் இராமனைக் காக்க முடிவு செய்து பரதனிடம் எதற்காக இராமனைத் தேடுகிறாய் என்று கேட்கிறான். பரதன் வந்தது இராமனிடம் திரும்ப இராஜ்ஜியத்தை அளிக்கவே என்று உறுதி செய்து கொண்ட பிறகு தான் அவரையும் அவருடன் வந்த தாய்மார்களையும் அக்கரைக்கு அழைத்துச் செல்கிறான்.
பரதனின் குணத்தைக் கண்டு வியந்து குகன் இவ்வாறு சொல்வதாகக் கம்பர் கூறுகிறார். ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா.” அதாவது ஆயிரம் இராமன் ஒரு பரதனுக்கு ஈடாக மாட்டார் என்று. அத்தகைய நுண்ணறிவை பெற்றிருந்தான் குகன். இலக்குவன் மாதிரி முன் கோபியோ சந்தேகப் பேர்வழியோ அல்லன் அவன். அவனால் பரதன் வந்தக் காரணத்தை உடனே புரிந்து கொள்ள முடிந்தது.
அனைவர் பாலும் கள்ளம் கபடமற்ற அன்பும், இறைவன் பால் தூய பக்தியும் இருக்குமானால், அவன் இறைவன் திருவடியை எளிதாக அடைந்து, அவன் அருளுக்குப் பாத்திரம் ஆகி பேரின்பப் பெரு நிலையைப் பெற முடியும் என்பதை தான் நாம் குகனின் வாழ்வில் இருந்து தெரிந்து கொள்கிறோம்.
குகனைப் பற்றி வால்மீகி இராமயணத்தில் விரிவாகவோ அற்புதமாகவோ காட்டப்படவில்லை. ஏற்கனெவே இராமனுக்கு தெரிந்தவன் குகன். அவன் கங்கை கரையை வரும் போது குகன் விசாரித்து அவர்கள் கங்கை கரை கடக்க உதவியவன் என்ற வகையில் தான் அவன் பாத்திரப்படைப்புக் காட்டப்படுகின்றது. அதுமட்டுமின்றி அவன் வரும் போது இலக்குவனும் அவனை எழுந்து நின்று வரவேற்பதாக வால்மீகிக் காட்டவில்லை.
ஆனால் கம்ப இராமயணத்தில் அவன் இராமனைப் பார்த்தது கூட கிடையாது. அவனுக்கு இராமன் யார் என்றே தெரியாது. ஆயினும் அவன் இராமனுக்கு தன் உடல் பொருள் ஆவி அனைத்தயும் அர்பணித்தவனாகக் காட்டப் படுகிறது. மனிதன் என்பவன் தெய்வமாகி, மூலப் பரம் பொருளுக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லாமல் இருக்கமுடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவன் குகன். அதனால் அவனை இன்னொரு வேடனான கண்ணப்ப நாயனாரை நினைக்கும் வகையிலாகவே கம்பன் படைக்கின்றான்.
‘இப் பார் குலாம் செல்வ! நின்னை,
இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வனேன் யான்,

உன்னை இந்த மரவுரி கோலத்தில் பார்த்த நான் என் கண்களை இன்னும் பிடுங்கி எறியாமல் இருக்கின்ற திருடன் நான் என்று குகன் கூறுவதாகப் படைக்கின்றான் கம்பன்.
கம்பன் இக் காவியம் இயற்றுவதற்கு அதிலும் இராமகதை இயற்றுவதற்குப் பல காரணங்களும் குறிக்கோளும் இருந்தாலும் அதில் ரொம்ப முக்கியமானதான ஒன்று சகோதரத்துவம். இராமன் மானிடப் பிறவி, வேடனான குகன், வானரமாகிய சுக்ரீவன், ராக்க்ஷசனான வீடணன் என்று ஜாதி, இனம் பார்க்காமல் அனைவரையும் சகோதரனாகவும், பறவையான ஜடாயுவை தன் பெரியதகப்பன் உறவு முறையிலே வைத்து அவருக்கு ஈமச்சடங்கையும் தன் கையாலோயே செய்தவன் இராமன்.
“மானிடம் வென்றதம்மா” என்று கூறவே இராமனுடைய பாத்திரப்படைப்பிலே உலகளாவிய அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையிலிருந்து இறங்கி வந்த மானிடனாக அவனைப் படைத்துள்ளான் கம்பன். அதற்கு குகனின் நட்பும் அவனை சகோதரனாக ஏற்றுக் கொள்ளும் இராமனின் பண்பும் நமக்கு நல்ல எடுத்துக்காட்டாகிறது.
( இணையத்தில் படித்தது )

1 comment: