Saturday, July 30, 2016

சிவாயநம*சம்பந்தர் திருக்கடைக்காப்பு*


*திருஆவடுதுறை பதிகம்*
குறிப்பு: சம்பந்தப் பெருமான் ஆவடுதுறையில் தங்கியிருந்த போது சீர்காழியில் இருந்து வந்திருந்த தம் தந்தையார் சிவபாத இருதையர் *பெரும் சிவவேள்வி* செய்ய வேண்டும் பொருள் இல்லையே என்று வருந்தினர்
தந்தையார் வருந்தும் போது அவர் தேவையை நிறைவேற்ற முடியாத செல்வம் இல்லாதவனாக இருக்கின்றேனே!! என்று ஆவடு துறை உறை இறையை போற்றி *இடரினும் தளரினும்* என்ற இப்பதிகம் பாடினர் பெருமான்
உன்னையே செல்வம் என்று எண்ணிய எனக்கு வேறு செல்வம் இல்லையே நான் வேறு எதைக்கொடுப்பேன் என்று இறைஞ்சிய சம்பந்தப் பெருமான் பொருட்டு *ஆயிரம் பொன் முடிப்பு ஒன்றை பூதம் ஒன்று பலிபீடம் மீது இறைவன் கருணையால் வைத்து சென்றது*
*கழுமல ஊரர்க்கு ஆயிரம் பொன் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே* என்று அப்பரடிகள் இச்சம்பவத்தை உறுதி செய்வதும் இறைக்கருணைக்கு சான்று
*பாடல்*
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
பொருள்
திருப்பாற்கடலில் , தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர்களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும் , இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும் , தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும் , உன் திருவடிகளைத் தொழுது வணங்குவேன் .
அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே வேள்விக்கு பொருள் கொடுக்க முடியாதவனாய் இருக்கிறேன் தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?
ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும் , பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும் , தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும் , நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும் , வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும் , உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன் . இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! வேள்விக்கு பொருள் கொடுக்க முடியாதவனாய் இருக்கிறேன் எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?
பொன் பொருள் சேர்க்க வேண்டிய விருப்பம் உடையவர்கள் நாளும் ஓத வேண்டிய பதிகம்.

No comments:

Post a Comment