Saturday, July 23, 2016

எலும்புகளோடு பேசும் காலம்


எங்கோ தொலைத்திருக்கிறேன் தனிமையை
யானை பள்ளம் நோக்கி ஓடுவது போன்ற பயம்
எனக்குள் ஏற்பட்டிருக்கிறது

நீர்வீழ்ச்சி முட்டித் தெரிக்கிற இடத்தில்
ஆழம் பொய்யெனக் கிடப்பது போல்
தொலைந்து கிடக்கிறேன்

ஒரு சொல்லில் ஒரு சொல்த்தொடரில்
இழைக்கப்படும் என் இதயம்
உன் பற்களுக்கிடையில் தின்னப்படும்போது
எனது மெளத்தை கண்களின் வழியாகப்
பறக்க விடுகிறேன்

முதுகில் விழும் கீறல்களை விடவும்
கண்களின் மேல் விழும் முத்தம் வலிக்கிறது

அருகாமை பள்ளத்தாக்கென விரிவதையும்
பிரிவு சலனமற்ற நீரோடையென ஓடுவதையும் பார்க்கிறேன்

என் வீட்டுப் பலிபீடத்தில் ஏற்றிவைக்கும்
மெழுகுவர்த்திக்கான சமயம்
எந்த அறையில் தொலைந்து போனது

இறுக்கி இறுக்கி இதயத்தை
எத்தனை முறை தான் துவளவிடுவது

சாம்பலான பிறகும்
எங்கே வெப்பம் இருக்கிறதா
எனத் தொட்டுப் பார்த்து சிரிக்கும் நொடி
எத்தனை நரம்புகள் அறுந்து விழுகின்றன

மதிலுகளோடு பேசிய காலம் போய்
எலும்புகளோடு பேசும் காலம் எப்படி வந்தது

தாகமாய் இருக்கிறது
பிரிவை அருந்த வேண்டுமென

- தேன்மொழி தாஸ்

No comments:

Post a Comment