Saturday, April 23, 2016

ஒளியறியாக் காட்டுக்குள்

ஒலியின் உதடுகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°
கூழாங்கல்ப் பதிவு வெயிலெனத் தெரிகின்ற
நீரோடையெனக் கிடக்கிறேன்
காட்டு இஞ்சிப் பூவின் மகரந்த வெளிச்சமாய்
உயர்ந்து விழுகிறது
எப்போதாவது உனது வருகை
கண்களுக்குள் தலைகீழாய் விரியும் காளானாய் கருவிழி அசைய
கதவு திறப்பேன்
ஒலிவ மரத்தின் கனிந்த கனியென
இருளை கொண்டுவந்திருப்பாய்
அதுவரை சுவர்களிலிருந்து பேசிக்கொண்டிருந்த
ஒலியின் உதடுகள்
மூச்சொடுங்கி சட்டங்களாய் உறைகையில்
எரியும் மெழுகின் புகையில் வரையப்பட்ட
ஓவியமென
நம் நிழல்களதில் பதியும்
நாளெல்லாம் தளிரிலையென அசைந்த நாவுகள் மோதி
கணுவென முத்தங்கள் முளைக்கையில்
கண்டுணரயியலாத காட்டுப்பூவின் வாசத்தில்
உனது மார்பின் மகிழம்பூக்கள் உதிரும்
ஆண்டாண்டு காலமாய் நிலைத்த மரத்தின்
செழித்த வேர்களென பாய்ந்து கிடக்கும்
உனது நரம்புகள் தாகிக்கையில்
தேகங்கள் ஊதுபத்தியின் மெல்லிய புகையென இழைந்து
இருளின் தாழ்வாரம் எட்டும்
எனது தளிர்க்குடத்தின் வெண்பூக்கள் உருக
யாதொரு நிறப்பூச்சுமற்ற
பாதத்து நகங்களில் துவங்குவாய்
விரல்களால் தொட்டுணரமுடியாத
முத்தங்களை
- தேன்மொழி தாஸ்
2006

No comments:

Post a Comment