Friday, April 22, 2016

நிராசைகளின் ஆதித்தாய்

மகா மகத்திற்குப் பின்னும் மேகம் மலைகளைத் தழுவவே
மென்மேலும் தன்னைப் புனிதப்படுத்திக் கொண்டே அலைகிறது
என் மரணத்திற்குப் பின்னும்
உன்னைத் தழுவும் ஆவலை மேகத்தில் தங்கவைக்கிறேன்
நீயற்ற தினங்களில்
தகைவிலான் குருவிகள்
மூளையின் மடிப்புகளைக் கொத்தித் தின்பதையும்
எனது மனம் உனது வருகைக்காய்
தேவதாரு மரத்தில் வாயில்கதவுகளை செய்துகொண்டேயிருப்பதையும்
அறியமாட்டாய்
நீ என்னைத் தோளில் சுமந்த நாளில் கூவிய பறவையின் குரலையும்
அந்த ஆண்டில் உதிர்ந்த சருகுகளையும் இன்னும் அள்ளிச் சேர்க்கிறேன்
புளியமரத்து நிழல்
பகலுக்குள் இரவைப் பொழியும் நிலத்தில் கால்கள் நடந்தாலும்
குங்கிலியப் பிசின்களிலிருந்து புகையும் வாசனையாய் மனம்
சாம்பிராணி மலையில் அலைகிறது
இவ்வளவே நான்
எனக்குள் பதிந்த எதுவும்
என்னிலிருந்து விலகுவதில்லை
உனது உதாசீனங்களால் கழுவிக் கரைக்கப்பட்ட இளமையைத்
தூவானச் சிகரத்தில்
கொய்னா மரத்தில் பூத்துக்கிடக்கும் படி சொல்லியிருக்கிறேன்
யாருக்குத் தெரியும்
மகர யாளியோ யானை யாளியோ கூட அக்காடுகளில் வாழ்ந்திருக்கலாம்
அதோடு வாழாப் பெண்ணின் தீராத் துயரமும் வாழட்டும்
6.2.2014
தேன்மொழி தாஸ்

No comments:

Post a Comment