Sunday, March 13, 2016

வேலூர் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் மறைவு!


வேலூரில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் 13.03.2016 அதிகாலை 2.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். பேராசிரியர் அவர்களுக்கு அகவை 77. இன்று மாலை வேலூரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் (1982),மொழிபெயர்ப்பு நுட்பங்கள் (1994), ஒற்றுமிகல் மிகாமை விதிகளும் விளக்கமும், தமிழ்வழியில் ஆங்கிலம் கற்பீர்(Learn English Through Tamil) 2008, மொழிபெயர்ப்புக்கலை, மொழிப்பயன்பாடு, மயங்கொலி அகராதி, தமிழ் மொழிப் பயிற்சி ஏடு எனத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பல நூல்களை எழுதி வெளியிட்டவர். தமிழ் ஆங்கிலம் அறிந்த இருமொழி வல்லுநர்.
தமிழின் ஒலிப்புமுறைகள், சொல்புணர்ச்சி முறைகள், ஒற்றுப்பிழையால் விளையும் ஊறுகள், மொழிபெயர்ப்பில் நேரும் பொருள் குழப்பங்கள் பற்றி நுட்பமாகக் கவனித்து அவற்றை எடுத்துரைத்து எழுதிய அறிஞர்களுள் பேராசிரியர் கா.பட்டாபிராமன் அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். இவர்களைப் போலும் செம்மல்கள் தமிழர்களாலும், தமிழக அரசாலும் கவனிக்கப்படாமல் போனமை தமிழுக்கு நேர்ந்த போகூழாகவே யான் உணர்கின்றேன்.
. “அருட்பெருஞ்சோதி” என்று எழுதாமல் “அருட்பெருஞ்ஜோதி” என்று தமிழர்கள் சொற்புணர்ச்சி குறித்த அறிவின்றி எழுதுகின்றனரே என்று வருந்துவார். ஆங்கிலத் தாக்கம் தமிழில் பொருள்மாற்றத்தை எவ்வாறு உருவாக்கிவிட்டது என்று கூறி ஒரு நிமையத்தில் பத்து எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசுவார். மொழியின் இயக்கத்தை இந்த அளவு நுட்பமாகக் கவனித்து வருகின்றாரே என்று வியப்பேன்.
பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்கள் வேலூர் வள்ளலார் நகர் பகுதியில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். பலவாண்டுகளாக மூச்சுநோயிலும், இருமல் நோயிலுமாகத் துன்பப்பட்டபவர். ஆயினும் தமிழாய்விலோ, மொழியாய்விலோ தொய்வில்லாமல் பணியாற்றியவர்.
பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் தமிழ் வாழ்க்கை
கா. பட்டாபிராமன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் ஒன்னுபுரம் என்னும் ஊரில் 01.02.1939 இல் பிறந்தவர். பெற்றோர் திரு. காளிங்கராயன் - சுப்புலட்சுமி ஆவர். தமிழில் முதுகலை(1959), பி.டி(1960), எம்.பில்(1980) பட்டங்களைப் பெற்றவர்.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற பெருமைக்குரியவர். அப்பொழுதே பல ஏடுகளில் எழுதத் தொடங்கினார்.
1960-65 இல் சென்னை எழும்பூர் அரசு பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார்.
1965-71 இல் சேலம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். 1971-80 இல் கிருட்டிணகிரி கல்லூரியில் பணிபுரிந்தவர். 1981-82 இல் ஆத்தூர் கல்லூரியில் பணிபுரிந்தவர். 1982-1997 இல் திருவண்ணாமலையில் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். 2000-2001 இல் செங்கம் அருண் கிருஷ்ணா கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரிந்தவர்.
கால்டுவெல் ஒப்பிலக்கணச் சுருக்கம் இவரின் முதல் படைப்பாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து மொழித்திறன், அலுவலக மொழிபெயர்ப்பு ஏடுகள், மொழிபெயர்ப்பு நுட்பங்கள் முதலியன வெளிவந்தன. மாணவர்களின் விருப்பதிற்கு ஏற்ப மொழிபெயர்ப்புக்கலை, மொழிப்பயன்பாடு ஆகிய நூல்களையும் வரைந்துள்ளார்.
2002 இல் வெளிவந்த ஒற்று மிகல்-மிகாமை விதிகளும் விளக்கமும் என்ற நூல் பத்தாண்டுகள் முயன்று உழைத்துப் பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
மெய்ப்புத் திருத்தக்கலை, திருக்குறள் மனப்பாடப் பதிப்பு, தமிழ்நடை உள்ளிட்ட நூல்களையும் உருவாக்கியுள்ளார்.
பலவாண்டுகளுக்கு முன்பே கணினியை இயக்கப் பழகித் தம் நூல்களைப் பிழையின்றித் தட்டச்சிட்டு வெளியிடுவதுடன் பிறர் நூல்கள் வெளியிடவும் துணைநின்றவர். மற்ற நண்பர்களுக்காக அவ்வப்பொழுது மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுப் பல நூல்களை மொழிபெயர்த்துத் தந்தவர்.
தமிழன்னையின் திருவடிகளில் புகழ்வடிவில் அடைக்கலம் புகுந்த பேராசிரியர் கா. பட்டாபிராமன் அவர்களின் புகழ் தமிழ் உள்ள அளவும் நின்று நிலவும்.
Mu Elangovan

No comments:

Post a Comment