Sunday, February 7, 2016

மர்மமான சில்பரி பிரமிடு:-



இங்கிலாந்தின் ’சில்பரி’ என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள். ஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலையில் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், ‘இது இயற்கையாய் அமைந்தது இல்லை’ என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த ’சில்பரி பிரமிட்’ கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை.
முழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மணிநேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் தேதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு.  இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் (Crop circles) வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் அருகில் சில மைல் தூரங்களில் இன்னும் சில மர்மமான பிரமிட் அமைப்புகளும் உள்ளன.
கா.அருண் பாண்டியன்.

No comments:

Post a Comment