Tuesday, February 2, 2016

குழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது

உலகத்தின் மாபெரும் ஸ்மார்ட் போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸிடம் ஒரு பத்திரிக்கையாளர் ஒரு முறை கேட்டார், "உங்கள் குழந்தைகள் ஐபேடை மிகவும் விரும்புகிறார்களா?"
அதற்கு ஜாப்ஸ் கூறினார், "அவர்கள் இது வரை அதை உபயோகித்ததில்லை. அவர்கள் எவ்வளவு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்."
அமெரிக்காவின் சிலிகான் வேலியில், பல என்ஜினீர்களும் சாஃப்ட்வெர் நிபுணர்களும், தங்கள் குழந்தைகளை ஐ பேட், ஐ போன், ஆண்ட்ராய்டு போன், டேப்லெட், லேப்டாப் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்த விடுவதில்லை. தங்கள் குழந்தைகளை கம்ப்யூட்டர்கள் இல்லாத பழைய கை முறைக் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.
அவர்கள் கூறுவது யாதெனில், "நாங்கள் தகவல் தொழில் நுட்பத்தின் பாதிப்பினை மிக அருகில் இருந்து கவனித்திருக்கிறோம். அது எங்கள் குழந்தைகளை பாதிக்க விடமாட்டோம்."
குழந்தைகள் மிகச்சிறிய வயதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கும் இந்தப் பிரச்னை தொடருமானால், எதிர்காலத்தில் குழந்தைகள் கற்பனைத்திறன், சுய சிந்தனை இல்லாத மனம் ஊனமுற்ற அரைகுறை வாழ்க்கையோடு வாழும் நிலை ஏற்படும்.
வெளியில் விளையாடித் திரிந்த கடைசி தலைமுறை நமதாகும். ஏனெனில் நம்மிடம் அப்போது லேப்டாப்கள் ஸ்மார்ட் போன்கள் இல்லை. கை வினை மூலம் அனைத்தையும் கற்றுக் கொண்டோம். தகவல்களை புத்தகங்கள் மூலமும் மற்றவரிடம் உரையாடுவது மூலமும் அறிந்து கொண்டோம். கூகிளில் அல்ல.
பக்கத்துக்கு வீட்டுக்காரரை தெரிந்து கொள்ளாமல் பேஸ் புக்கில் எங்கோ உள்ள நபரிடம் பேசும் இந்த தலைமுறை அல்ல நமது. பல விதங்களில் விஷயங்களைக் கற்றுக்கொண்டது நம்மை முழு மனிதர்களாக மாற்றியது. குழந்தைகள் கைகளில் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது ஒரு ஆரோக்கியமான சுய சிந்தனை உள்ள எதிர்கால சூழலை அவர்களிடமிருந்து பறித்து விடும்.
எனவே அடுத்த முறை குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று யோசிக்கும்போது, அதி நவீன சாதனங்களை அவர்களிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யுங்கள். அவர்களை வெளியில் விளையாடவும் இயற்கையோடு ஒன்றி வாழவும் வாய்ப்பு கொடுங்கள். உங்களை அவர்கள் இப்போது வெறுப்பார்கள். ஆனால் கட்டாயம் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

No comments:

Post a Comment