Wednesday, February 3, 2016

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ஒரு வீட்டில் வீட்டுக்காரர் தீவிர ராமபக்தர். குளிர்காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ராமபஜனை. குளிர்காலமாக இருப்பதால் கண்ணாடி ஜன்னல்களெல்லாம் மூடியிருக்கும். வீட்டுக்காரர் தொண்டையைக் கிழித்துக் கொண்டுp5கத்தும் ‘ஓம் ஜெய ஜெகதீச ஹரி! ஸ்வாமி ஜெய ஜெகதீச ஹரி!’ என்ற சத்தம் வெளியே போக வழியின்றி, வீட்டின் சுவர்களிலும் கண்ணாடி ஜன்னல்களிலும் மோதி மோதி எதிரொலிக்கும். அது போதாதென்று ஜால்ரா சத்தமும் சேர்ந்துகொள்ளும். வீட்டுக்காரரின் மனைவி டோலக்கை திரும்பப் பாடுவாள். நடுக்கும் குளிரில் எழுந்து உட்கார்ந்துகொண்டு ரஜாயை விட்டு வெளியே வர மனசில்லாமல் பஜனை சத்தத்தில் செவிப்பறைகள் கிழிய கண்கள் திகுதிகுவென்று எரிய என்ன செய்வதென்று புரியாமல் உட்கார்ந்திருக்கிறோம். மற்றொரு வீட்டில் கக்கூஸ் பிரச்சினை. அந்த வீட்டில் வீட்டுக்காரரும், அவர் மனைவியும் கக்கூஸ் போய்விட்டு கைகளை நன்றாக சோப்புப் போட்டு கழுவுவார்களே ஒழிய, கக்கூஸில் போதிய அளவு தண்ணீர் விட வேண்டும் என்று தெரியாது. தில்லியிலிருந்து சென்னை போகும் போது காலையில் எழுந்து ஜன்னல் வழியே பார்த்தால், மக்கள் ஒரு சோடா புட்டியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒதுக்குப்புறமாக போவது தெரியும். அங்கேயாவது தண்ணீர்ப் பிரச்சினை என்று சொல்லலாம். இங்கு அந்தப் பிரச்சினையும் இல்லை. “நாற்றம் தாங்க முடியவில்லை. நிறைய தண்ணீர் விடுங்கள்” என்று வீட்டுக்காரரிடம் சொன்னேன். “கக்கூஸ் நாறத்தானே செய்யும்; இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?” என்று கேட்டுவிட்டு கிராமங்களில் மக்கள் தண்ணீர் இல்லாமல் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பது பற்றியும், அப்படி இருக்கும்போது இங்கு நகரங்களில் நாம் கக்கூஸுக்கென்றே எத்தனை கேலன் தண்ணீரைக் கொட்டி வீணடிக்கிறோம் என்பது பற்றியும் விரிவாக ஒரு லெக்சர் கொடுத்தார். ஆக, அவரும் அவர் மனைவியும் போய்விட்டு வந்தால், நானேதான் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இப்படி ஒவ்வொரு வீடாக மாற்றிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு நாள் என் நண்பர் ஒருவர், தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், தன் வீட்டில் இரண்டு மூன்று வருடங்கள் வந்து இருந்து கொள்ளலாம் என்றும் சொன்னார். ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. நண்பரின் வீடு ‘ஜமுனா பாக்’ என்று சொல்லப் படுகிற கிழக்கு தில்லியில் இருந்தது. கிட்டத்தட்ட தில்லி ஜனத்தொகையில் பாதி அளவு மக்கள் கிழக்கு தில்லியில் இருந்தாலும், இந்த ‘ஜமுனா பாக்’ பகுதி என்பது, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சராசரி நபருக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு இடமாகத்தான் இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நபர்கள் கடத்தப்படுதல், தில்லியின் மிகப்பெரிய மலிவுவிலை சாராயக்கடை போன்ற விஷயங்களே இதற்குக் காரணமாகக் கருதப்பட்டாலும், எனக்கு என்னவோ தில்லியை கிழக்கு தில்லியுடன் இணைக்கும் இரண்டு பாலங்கள்தான் மிகப்பெரிய பிரச்சினை என்று தோன்றியது.
இருக்கின்ற மக்கள் தொகைக்கும், வாகனங்களுக்கும் இதுபோல் ஒரு பத்து பாலமாவது தேவைப்படலாம் என்கிற நிலையில் இந்த இரண்டு பாலங்கள். பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் ஆயுதமேந்திய போலீசார். வாகனங்களை நிறுத்திச் சோதித்துப் பார்ப்பதற்காக தடைகள். ஒவ்வொரு வாகனமும் இந்தத் தடையைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதால், எப்போதுமே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் டிராஃபிக் ஜாம். ஒரு ஆள் நடந்து செல்லும் வேகத்தைவிட குறைவான வேகத்தில்தான் வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இதற்கிடையில் ஏதாவது ஒரு வாகனம் முந்திச் செல்ல முயன்று, ஏடாகூடமாக மாட்டிக் கொண்டுவிட்டால், ஒரு வாகனம் கூட நகர முடியாமல் போய், நிலைமை சீராக பல மணி நேரம் ஆகும். பஸ்ஸை விட்டு இறங்கி ஓடச் செய்யும் அளவுக்கு எல்லா வாகனங்களிலிருந்தும் கேட்கும் ஹாரன் சப்தங்கள். பாலத்தை ஒவ்வொரு முறை தாண்டும்போதும் ஜமுனா பாகிற்கு வந்திருக்க வேண்டாம் என்று தோன்றும்.
மீனாவுக்கோ வேறுவிதமான கவலைகள். மயூர் விஹாரின் மூன்றாவது செக்டாரின் பிரதான சாலையில் ஒரு தென்னிந்தியத் தம்பதி நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவர்களின் அருகே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, அந்தப் பெண்ணை ஆட்டோவில் இழுத்துப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டது. பட்டப்பகலில் நடந்த நிகழ்சி. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டதால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. மறுநாள் தினசரிகளில் வந்திருந்தது. இன்னொரு சம்பவம். இதுவும் எங்கள் மூன்றாவது செக்டாரிலேயே நடந்த நிகழ்ச்சிதான். காலை பதினோரு மணி அளவில் ஒரு கதவைத் திறந்து பார்ப்பது வழக்கமில்லை என்பதால், கதவின் ‘பீப் ஹோல்’ வழியே எட்டிப் பார்த்திருக்கிறார் வீட்டிலிருந்த பெண்மணி. மூன்று வாட்டசாட்டமான ஆட்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சற்றுத் தயங்கி, “நீங்கள் யார்? என்ன வேண்டும்?” என்று கேட்க, ”நாங்கள் ‘தேஸு’ (1)விலிருந்து வந்திருக்கிறோம்; இந்த வீட்டின் மீட்டர் ரொம்ப வேகமாக ஓடுவதாக புகார் வந்திருக்கிறது; பார்க்க வேண்டும்” என்று சொல்ல, மறுபேச்சு பேசாமல் கதவைத் திறந்துவிட்டிருக்கிறாள் அந்தப் பெண். அவளைக் கற்பழித்து கொலை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் அந்த நபர்கள்.மறுநாள் தினசரிகளில் வந்திருந்தது.
இந்த இரண்டு சம்பவங்களும் மீனாவை ரொம்பவும் கலவரப் படுத்தியிருந்தது.
“நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்?” என்று ஏகப்பட்ட தைரிய வார்த்தைகள் கூறி, இந்த வீட்டினால் கிடைத்திருக்கும் அனுகூலங்களையும் விலாவாரியாக எடுத்து விளக்கினேன்.
கிரௌண்ட் ஃப்ளோர் வீடு. ஒண்டுகுடித்தனப் பிரச்சினை இல்லாதது. விசாலமான ஹால். தனி கிச்சன், படுக்கை அறை, இரண்டு வாசல், ஒரு சின்ன தோட்டம் போடும் அளவுக்கு நிலம், ஏதோ பெயருக்கு ஒரு வாடகை.
”இத்தனை வசதிகளுக்காக இந்தக் கிழக்கு தில்லியைப் பொறுத்துக் கொள்” என்றேன்.
இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே ரேக்கி எனக்குப் பழக்கமானான். சாமான்கள் டெம்போவில் வந்து இறங்கியபோது ஒரு பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சர்தார் பையன், “இஸ் கர் மே ஆப் ஹீ நயா ஆரஹே ஹே(ங்) அங்கிள்? ஆப் கா நாம் க்யா ஹை?” என்று என்னைக் கேட்டான். “பெஹலே ஆப்கா நாம் பதாவோ?” என்றேன். “மேரா நாம் ரேக்கி ஹை... உதர் தேக்கியே.. இஸ் சடக் கே உஸ்தரா.. ஏக் குருத்வாரா திகாயி படுதீ ஹை நா. உஸ் கே நஸ்தீக் கர்” என்றான் சிறுவன்.
மீனாவைப் பார்த்து, “பயல் படுசுட்டியாகத் தெரிகிறார்னே” என்றேன். சொன்னதும் ரேக்கி என்னைப் பார்த்து, “சுட்டின்னா என்ன அங்கிள்?” என்று தெளிவான தமிழில் கேட்டான்.
ஆச்சரியத்துடன், “உனக்கு எப்படித் தமிழ் தெரியும்?” என்று கேட்டேன்.
”நான் தமிழ் ஸ்கூலில்தான் படிக்கிறேன் அங்கிள். என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் கூட தமில்தான். அதனால் தமில் தெரியும் எனக்கு. ஆனால் சுட்டின்னா என்ன அங்கிள்?”
“சுட்டின்னா ‘நாட்டி’. இந்தியில் ‘நட்கட்’. அது சரி, உன் அப்பா எங்கே வேலை பார்க்கிறார்?”
அப்பாவைப் பற்றிக் கேட்டதும் அவன் முகம் மாறுதல் அடைந்தது. இவ்வளவு நேரம் அவன் கண்களில் தெரிந்த ஆர்வமும் ஒளியும் மங்கிப் போனது.
“க்யா ஹுவா ரேக்கி?”
“குச் நஹி அங்கிள். அப்னி கஹானி ஔர் ஏக் தின் போலுங்கா.”
கஹானியா? பன்னிரெண்டு வயதுப் பையனுக்கு ஒரு கஹானி இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அது மிகவும் சோகமானதாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றியது.
பிறகு ரேக்கி படிக்கும் பள்ளியைப் பற்றி விசாரித்துக்கொண்டேன். லோதி ரோட்டிலுள்ள தமிழ்ப் பள்ளி. இங்கிருந்து தொலைவுதான் என்றாலும், ஸ்கூல் பஸ்ஸே இருப்பதாகச் சொன்னான் ரேக்கி. என் மகள் ரேஷ்மாவையும் அந்தப் பள்ளியில்தான் சேர்ப்பதாக இருந்ததால், இந்த விபரங்கள் சற்று நிம்மதி அளித்தன.
ரேஷ்மா ரேக்கியோடு ரொம்பவும் ஒட்டிக்கொண்டாள். எப்போதும் எங்கள் வீட்டிலேயே இருந்துவிட்டு, இருட்டிய பிறகுதான் வீட்டுக்குப் போவான் ரேக்கி. சில சமயங்களில் அவனுடைய அம்மா வந்து அழைத்துப் போவாள்.
அவன் குறிப்பிட்ட கஹானி பற்றி அவனிடம் கேட்டு அவனை வருத்தமடையச் செய்ய வேண்டாம் என்று நினைத்து, அவனிடம் அதைப் பற்றிபிறகு நான் கேட்கவில்லை. ஆனால் அடிக்கடி அவனுடைய அம்மாவைத்தான் பார்த்திருக்கிறேனே ஒழிய, அவனுடைய அப்பாவைப் பார்த்ததில்லை என்ற விஷயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் ரேஷ்மா, “வெளியே டாட்டா போய் ரொம்ப நாளாகிறது. எங்கேயாவது அழைத்துப் போ” என்றாள். “வருகிறாயா ரேக்கி? உன் அப்பா ஒத்துக் கொள்வாரா?” என்று கேட்டேன். கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, “ஓகே அங்கிள், அப்னி கஹானி பதாவுங்கா அபி” என்று சொல்ல ஆரம்பித்தான்.
ரேக்கியின் அப்பா - சர்தார் சுச்சா சிங் - ராணுவத்தில் பணியாற்றியவர். சிறந்த ராணுவ வீரருக்கான விருதுகளும் பெற்றவர். மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் பஞ்சாப் தீவிரவாதிகளை அடக்குவதற்கான சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு பஞ்சாபுக்கு அனுப்பப்பட்டார். லால் கிலாவில் கலிஸ்தான் கொடியை ஏற்றியே தீருவேன் என்று சபதமிட்ட கொடிய தீவிரவாதியான சந்த் பிந்த்ரான்வாலேயை ஒழித்துக் கட்டுவதற்காகச் சென்ற மாதம் நடந்த பயங்கர சண்டையின் போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுள் சர்தார் சுச்சா சிங்கும் ஒருவர். அவரது வீரச் செயலை மெச்சி நன்றிக்கடனாக அவரது மனைவியான ஜஸ்பீர் கௌருக்கு ஒரு அரசு அலுவலகத்தில் வேலையும் தரப்பட்டது. ஜஸ்பீர் கௌருக்கு படிப்பு கிடையாது என்பதால், சப்ராஸி வேலை தான் கிடைத்தது.
ரேக்கியிடமிருந்து இந்தக் கஹானியைக் கேட்டதும், போன மாதத்து பேப்பர் கட்டை எடுத்துவந்து, ஜூன் 5க்கு மேற்பட்ட பேப்பர்களைப் புரட்டினேன். நீல நட்சத்திர நடவடிக்கை என்பது எங்கோ நடந்த விஷயம் என்பதாக இருந்தது மாறி, இப்போது என்னருகே நெருங்கி வந்து என் வீட்டுக்குள்ளேயே நுழைந்து விட்டதாகத் தோன்றியது. உயிர் நீத்த மொத்த ராணுவ வீரர்கள் 83 பேர் என்றும், காயமுற்ற ராணுவ வீரர்கள் 248 பேர் என்றும், பொது மக்களும் தீவிரவாதிகளும் சேர்ந்து முப்பது பெண்களும் ஐந்து குழந்தைகளும் அடக்கம் என்றும் செய்தித்தாளில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஹர்மந்திர் சாஹிபைத் தவிர, தர்பார் சாஹிபின் பல பகுதிகலும் டாங்கிகளால் சின்னாபின்னமாக்கப் பட்டிருந்த புகைப்படங்களும் இப்போது வேறுவித அர்த்தத்தைத் தருவனவாகத் தோன்றின.
ஒரு மாதத்திற்கு முன்பு வெறும் எண்களாகத் தெரிந்த விபரங்கள், இப்போது ரத்தமும் சதையுமாக - எத்தனையோ பேரை அனாதைகளாக விட்டுப் போய்விட்ட மனித உயிர்களாகத் தெரிய ஆரம்பித்தன. சர்தார் சுச்சா சிங்கின் தியாகத்திற்காக ஜஸ்பீர் கௌருக்கு மெடல் தரும்போது, இந்த ரேக்கி என்கிற, அப்பாவை இழந்த சிறுவனைப் பற்றி அரசு யோசிக்குமா? வேதனையோ, கவலையோ அடையுமா? எந்த காரணத்திற்காக இவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள்? எடுத்துவிட்டெறிந்து செலவு செய்வதற்கு, இந்த ராணுவ வீரர்களெல்லாம், அரசாங்கத்தின் பாக்கெட்டிலிருக்கும் நயாபைசாக்களா?
மீண்டும் மீண்டும் அந்தச் செய்தித்தாள்களையே புரட்டிக் கொண்டிருந்தேன். தீவிரவாதிகளைப் பற்றியும், அவர்களிடமிருந்த வெடி மருந்து மற்றும் நவீன ரக ஆயுதங்கள் பற்றியும், சுரங்கப் பாதைகள் பற்றியும், நிலவறைகள் பற்றியும், அகால் தக்தை நோக்கி முன்னேறிய ராணுவ வீரர்கள் குருவிகள் சுட்டுக் கொல்லப்படுவது போல் ஒவ்வொருவராக சுடப்பட்டு வீழ்ந்தது பற்றியும், வேறு வழியில்லாமல் டாங்கிகள் அனுப்பப்பட்டு அகால் தக்தின் பெரும் பகுதி அழிந்து விட்டது பற்றியும், நிச்சயமாக ஒரு கார்சேவா மூலம் அழிந்துவிட்ட அகால் தக்தை மீண்டும் நிர்மாணிப்போம் என்று அறிவித்த அரசாங்கத்தின் உறுதிமொழி பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசியது செய்தித்தாள்...
அகால்தக்த் - காலமற்றவனின் அரியணை - அகாலத்தை காலத்திற்குள் அடக்கும் முயற்சியில் ஒரு அகால் தக்த் - காலத்தை அகாலமாக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள்! கார் சேவா அகாலத்திற்கு ஒரு அரியணை அமைத்துவிடலாம். ஆனால் தங்கள் காலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு அகாலமான அவைகளுக்கான காலத்தை அளிக்க ஏதாவது ஒரு கார் சேவா இருக்கிறதா?
ரேக்கியும் அந்த செய்தித்தாள்களைப் பார்த்தபடியே என்னருகில் உட்கார்ந்திருந்தான்.
ரேக்கியின் கதையைக் கேட்ட பிறகு அவன் மீது எனக்கிருந்த ஈடுபாடு அதிகமாயிற்று.
”எங்கே போகலாம் ரேக்கி? உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வா. வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியே போகலாம். எங்கே போகலாம் என்று நீயும் ரேஷ்மாவும் முடிவுசெய்து கொள்ளுங்கள்” என்றேன்.
ரேஷ்மாவும் ரேக்கியும் கூடிக் கூடிப் பேசினார்கள். பஞ்சாபியிலேயே பெசிக்கொண்டார்கள். ரேக்கியுடன் பேசிப் பேசி பஞ்சாபியை சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டு விட்டாள் ரேஷ்மா.
இருவருமாக பேசி முடித்துக் கடைசியில், “லால் கிலா போகலாம் அங்கிள்” என்றான் ரேக்கி.
”லால் கிலாவா? அங்கே உங்களுக்கு ‘போர்’ அடிக்குமே? அதோடு உள்ளே போய் ரொம்ப அலையவும் வேண்டியிருக்கும். வேறு எங்காவது கனாட் பிளேஸ், பாலிகா பஸார் என்று போனால் ஜாலியாக இருக்கும். ஷாப்பிங்கும் செய்யலாம்” என்றேன்.
“அதற்கில்லை அங்கிள். அந்த பிந்த்ரான்வாலே லால்கிலாவில் கலிஸ்தான் கொடியைப் பறக்க விடுவேன் என்று சொன்னதால்தானே சண்டை வந்து, என் அப்பா செத்துப் போனார். அதனால்தான் அந்த லால் கிலாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது” என்றான்.
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபொழுது ரேக்கி இதுவரை ஒரு சினிமாகூட சினிமா தியேட்டருக்குச் சென்று பார்த்ததில்லை என்றும் தெரிந்தது. எல்லாம் டி.வி.யில்தான் பார்த்திருக்கிறான்.
மாதம் ஒரு இடம் என்று ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம்: லால் கிலா, கனாட் பிளேஸ், பாலிகா பஸார், ஒரு நல்ல இந்தி சினிமா, ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்ட். முதலில் லால் கிலா. மீனா எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் நானும், ரேஷ்மாவும், ரேக்கியும் கிளம்பினோம். ரேஷ்மாவுக்கும், ரேக்கிக்கும் லால் கிலா மிகவும் பிடித்துப் போயிற்று. குதித்துக் குதித்து ஓடினார்கள். திவானி ஆம், திவானி காஸ் என்ற இரண்டு மண்டபங்களிலும் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். சேஷ் மஹாலின் கண்ணாடி வேலைப்பாடுகளைப் பார்த்து பிரமித்து நின்றார்கள். ‘தங்கத்தால் செய்து வைரத்தால் இழைத்த மயிலாசனம் இங்கேதான் இருந்தது’ என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டு, அந்த மயிலாசனத்தை யார் எடுத்துப் போனது என்று கவலைப்பட்டார்கள். ஔரங்கசீப் கட்டிய ‘பேர்ள் மாஸ்க்’ பூட்டியிருந்ததால், அதன் கதவிலிருந்த துளைகளின் வழியே எட்டிப் பார்த்தார்கள்.
ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வரும்போது அங்கேயிருந்த ராணுவ முகாம்களைப் பார்த்தோம். ரேக்கி ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தேன். அவன் ஒன்றும் கேட்கவில்லை. உற்சாகமாக ரேஷ்மாவுடன் பஞ்சாபியில் பேசிக்கொண்டு வந்தான். ரேஷ்மாவின் பஞ்சாபியையும் அவளுடைய உச்சிக் கொண்டையையும் பார்த்தால் அவளை ஒரு தமிழ்க் குழந்தை என்றே சொல்ல முடியாது போல் தோன்றியது. குழந்தைகள் இருவரும் பஞ்சாபியில் பேசிக் கொண்டு என்னுடன் தமிழில் பேசுவதையும், அவர்களுடன் வந்திருக்கும் ஒரு தென்னிந்தியனான என்னையும் மற்றவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.
வெளியே வந்தபோது மணி ஏழு ஆகியிருந்தது. கோடைக்காலமாதலால் இன்னும் சூரியன் மறையவில்லை. குழந்தைகள் களைத்துப் போயிருந்ததால், இப்படியே பஸ் பிடித்து வீட்டுக்குப் போவதை விட, கனாட் பிளேஸ் போய் சைனீஸ் ரெஸ்டாரெண்டில் சாவகாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. ரேக்கியும், ரேஷ்மாவும் என் யோசனையைக் கேட்டு மீண்டும் உற்சாகமானார்கள்.
ரெஸ்டாரண்டின் உள்ளே நுழைந்ததும் - அதன் அரையிருட்டு - மேலே தொங்கிக் கொண்டிருந்த அலங்கார வண்ண விளக்குகள் - சர்வர்களின் நீண்ட தொப்பி - மேஜையின் மேல் ஒரு அலங்காரமான கிளாஸில் வைக்கப்பட்டிருந்த கை துடைக்கும் பேப்பர் - மிக மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாப் இசை - எல்லாமாகச் சேர்ந்து அந்த சூழலை ஏதோ ஒரு கனவுலகத்தைப் போல் ஆக்கியிருந்தது. ஆச்சரியத்துடன் சுற்றுமுற்றும் பார்த்த ரேஷ்மா, “சினிமாவில் பார்ப்பது போல் இருக்கிறதே!” என்றாள்.
“ஆனால் நான் என் அப்பாவுடன் ஒரு தடவை கூட இது மாதிரி இடங்களுக்குப் போனதில்லை” என்றான் ரேக்கி. கொஞ்சம்கூட தன் வருத்தத்தை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல், வெகு சாதாரணமான தொனியில் சொன்னான். மெனுவைக் கொண்டு வந்து கொடுத்தார் சர்வர். இருட்டில் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் படிக்க வேண்டியிருந்தது. “முதலில் மூன்று சிக்கன் சூப் கொண்டு வாருங்கள். மற்றதை அப்புறம் சொல்கிறேன்” என்றேன்.
சோலே பட்டூரா, பாலக் பனீர், கோஃப்தா, நான், பிரெட் பீஸ் மசாலா, ஆலு ஃப்ரை என்று அயிட்டங்களின் சாதக பாதகங்களையும் பற்றி விவாதித்துவிட்டு, கடைசியில் இரண்டு சிக்கன் நூடுல்ஸ் வாங்கி மூன்றாகப் பங்கிட்டுச் சாப்பிடலாம் என்று முடிவாயிற்று. “இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து வெறும் நூடுல்ஸ்தானா?” என்று கேட்டேன்.
“அதையே சாப்பிடலாம் அங்கிள். மற்ற அயிட்டமெல்லாம் தான் வீட்டிலேயே கிடைக்கிறதே? அதோடு, சாப்பாடா முக்கியம்? இந்த இடமே போதுமே அங்கிள்?” என்றான் ரேக்கி. சொல்லிவிட்டு உடனே, “இந்த மாதிரி ஒரு இடத்திற்குக் கூட என் டாடியுடன் போனதில்லை அங்கிள்” என்றான். “அவர் இங்கே வேலையில் இருந்தபோது எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்றுதான் கிடந்தாரே ஒழிய, ஒரு இடத்திற்குக் கூட என்னை அழைத்துப் போனதில்லை. ‘இப்படியே வேலை வேலை என்று இரவு பகலாக அலைந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்’ என்று சொல்லுவாள் மம்மி. ஆனாலும் அவர் அதை கண்டுகொண்டதே இல்லை. எது கேட்டாலும் அதை வாங்கிக் கொண்டு வந்து தருவார். அல்லது மம்மியிடம் பணம் கொடுத்து வாங்கித் தரச் சொல்லுவார். ஆனால் ஒரு தடவை கூட.. சூப் தோ பஹூத் படியா ஹை அங்கிள்... ஒரு தடவை தாஜ்மஹால் போயிருக்கிறோம். அப்போது கூட டாடி எங்களுடன் வரவில்லை. வீட்டுக்கு வந்திருந்த சாச்சி(2) கூடத்தான் நாங்கள் போனோம். ரொம்ப அன்பாகவும், செல்லமாகவும் பேசித் தட்டிக்கழித்து விடுவார். நானும் விடாப் பிடியாக அவருடன் பேசிப் பேசி ஒரு முறையாவது எங்களுடன் வரவேண்டும் என்று சொல்லி, கடைசியில் தர்பார் சாஹிப் போவது என்று முடிவாயிற்று.
ஆனால், அதே சமயத்தில்தான் தர்பார் சாஹிபில் ஏதோ பிரச்சினை என்று சொல்லி, அவருக்கு அங்கே ஸ்பெஷல் டியூட்டி போட்டார்கள். மம்மியுடனும், என்னுடனும் சேர்ந்து மூவருமாக தர்பார் சாஹிப் போக இருந்த சமயத்தில்தான் அவர் மட்டும் ஸ்பெஷல் டியூட்டியில் போனார். ‘திரும்பி வந்து அழைத்துச் செல்கிறேன்; நிச்சயம் நாம் ஒன்றாகச் சேர்ந்து போகலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் டாடி திரும்பவே இல்லை அங்கிள். இன்னும் கொஞ்சநாள் கழித்து மம்மியை அழைத்து மெடல் கொடுப்பார்கள். ராணுவ உடுப்பில் கம்பீரமாக இருந்த டாடி, ஒரு சின்ன உலோகமாக மாறிவிடுவார்! உலோகத்துடன் பேச முடியுமா, அங்கிள்....?”
“ஆவியிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா அங்கிள்? ஆவியுடன் நாம் பேச முடியும் என்கிறார்களே, அது உண்மையா? அது உண்மையானால் என் டாடியின் ஆவியுடன் நான் பேச வேண்டும். பேசி என்னை ஏன் ஒருமுறை கூட உங்களுடன் வெளியே அழைத்துப் போனதில்லை என்று கேட்க வேண்டும். அவர் ஒருவேளை ஒரு முரட்டு அப்பாவாக, எதற்கெடுத்தாலும் அடித்துக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை அங்கிள். அவர் என்னை ஒரு வார்த்தை கூடத் திட்டியதில்லை. டாடி வீட்டில் இருந்த நேரம் குறைவு. அநேகமாக எல்லா நாட்களிலும் நைட் டியூட்டி. பகலில் நான் ஸ்கூலுக்குக் கிளம்புகிற நேரத்தில்தான் வருவார். வந்தவுடன் என்னை அணைத்து முத்தமிடுவார். கொஞ்சுவார். ஸ்கூலுக்குப் போகாமலேயே இருந்து விடலாம் என்று இருக்கும். ஆனால் மம்மி திட்டுவாள்.போய் விடுவேன். மதியம் மூன்று மணிக்கு ஸ்கூல் முடிந்து வந்து பார்த்தால் அவருடைய பைக் இருக்காது. ‘நைட் டியூட்டிக்கு இப்போதே ஏன் போக வேண்டும் மம்மி?’ என்று கேட்டால், ‘இப்போது சொன்னால் உனக்குப் புரியாது; நீ வளர்ந்து பெரியவனான பிறகு சொல்கிறேன்’ என்பாள் மம்மி. பகல் டியூட்டியாக இருந்தால் தான் டாடியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க முடியும். இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வருகிறவர் நான் தூங்கும் வரை பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார். டாடியின் ஆவியுடன் பேச முடிந்தால், ‘ஏன் என்னையும், மம்மியையும் ஒரு முறை கூட வெளியே அழைத்துப் போனதில்லை? வேலை வேலை என்று வேலையே கதியாக இருந்து, வேலையிலேயே உயிர் விடவா திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று கேட்க வேண்டும். ஆவியுடன் பேச முடியுமா அங்கிள்?” உணர்ச்சியை குரலிலோ, முகத்திலோ வெளிக்காட்டிக் கொள்ளாமல், அழாமல் வேறு யாருக்கோ நடந்த ஒன்றைப் பற்றி விவரிப்பது போல் சொன்னான் ரேக்கி.
லால் கிலாவுக்குப் போய்வந்த பிறகு ஒருமுறை கனாட் பிளேஸும், பாலிகா பஸாரும், மற்றொரு முறை பிரகதி மைதானமும் போய் வந்தோம். ஆனால் சினிமாவுக்கு மட்டும் போக முடியாமலேயே இருந்தது. ரேஷ்மாவுக்குப் பிடித்த படம் ரேக்கிக்குப் பிடிக்கவில்லை. ரேக்கிக்குப் பிடித்த படம் ரேஷ்மாவுக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த படமோ குழந்தைகளை அழைத்துக்கொண்டு போக முடியாத படமாக இருந்தது. கடைசியில் ஒரு வழியாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை கனாட் பிளேஸ் போய் எந்தத் தியேட்டரில் டிக்கெட் கிடைக்கிறதோ அந்தப் படத்திற்குப் போய் விடுவது என்று முடிவு செய்தோம். ஞாயிற்றுக் கிழமைக்காக ரேக்கியும், ரேஷ்மாவும் ஆசையுடன் காத்துக் கொண்டிருந்தபோது, அதற்கு முன்னதாக புதன் கிழமை காலை பத்து மணி அளவில் அந்தச் செய்தி காட்டுத்தீயைப் போல் பரவி, எங்கள் மயூர் விஹாரை வந்து அடைந்தது. அன்று எனக்கு லேசான ஜுரமாக இருந்ததால் நான் ஆஃபிஸ் போகவில்லை. நான் போகாததால் மீனாவும் போகவில்லை. அப்போது பூஜா விடுமுறையாக இருந்ததால், ரேஷ்மாவை கிரஷ்ஷில் விட்டு விட்டு வரவேண்டும். ஆனால் நாங்கள் இருவருமே வீட்டில் இருந்ததால், ரேஷ்மாவும் கிரஷ்ஷுக்குப் போகவில்லை. அப்போதுதான் பிரதம மந்திரி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது. முதலில் புரளி என்று நினைத்தோம். பிறகு கொஞ்ச நேரத்திலேயே அந்தச் செய்தி உண்மைதான் என்று தெரிந்துவிட்டது. வெளியே வந்து பார்த்தேன். கூட்டம் கூட்டமாக மக்கள் லாரிகளிலும், வேன்களிலும் கோஷம் எழுப்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் ஏ.ஐ.எம்.எஸ். போவதாகச் சொன்னார்கள். பிரதம மந்திரியின் உடல் அங்கேதான் இருப்பதாகத் தெரிந்தது. செய்தி கிடைத்ததும் உடனடியாக டெப்போவுக்குப் போய்ச் சேர முடியாமல், வழியிலேயே மாட்டிக்கொண்ட DTC பஸ்களை கொளுத்திவிட்டுக் கொண்டிருந்தார்கள் சிலர்.
எரியும் பஸ்களைப் பார்த்ததும் என்னை பயம் தொற்றிக்கொள்ள, நான் நேராக வீட்டுக்குத் திரும்பினேன். அன்று பூராவும் ரேக்கி எங்கள் வீட்டுக்கு வரவில்லை. அவன் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா என்று நினைத்தேன். ஆனால் மிகவும் களைப்பாக இருந்ததால், நாளைக்குப் போகலாம் என்று விட்டுவிட்டேன்.
நிலைமை சகஜமாவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியவில்லை. பால் கிடைக்காது. காப்பி குடிக்க முடியாது. அரிசி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கோதுமை மாவு இருந்தாலும் போதும். எத்தனை நாட்களுக்குப் பால் இல்லாமல் ரேஷ்மாவைச் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை. எது எப்படியானாலும் தண்ணீரும், மின்சாரமும், கொஞ்சம் அரிசியும் இருந்தால் சில நாட்களை சமாளித்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் சுட்டது சீக்கியர்கள். அதிலும் பிரதமரின் மெய்க்காப்பாளர்கள். துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு உத்தரவு என்றெல்லாம் வருமா? யாருக்குத் தெரியும். இதுவரை அப்படி எதையும் நேரில் கண்டதில்லை. அனுபவித்ததும் இல்லை.1947 பிரிவினையின்போது நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதோடு சரி. ஊரடங்கு உத்தரவு என்றால், வெளியில் யாரைக் கண்டாலும் சுடலாம் என்றுதானே அர்த்தம் என்று பலவாறாக யோசித்துக்கொண்டே தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தபோது வெளியே வெகு தூரத்தில் பெரும் கூச்சல் கேட்டு எழுந்தேன். வெளியே வந்து பார்த்தபோது, ரோட்டின் மறுபக்கத்தில் திர்லோக்புரி குருத்வாராவின் வெளியே தீப்புகையும், நெருப்புமாகத் தெரிந்தது. சுற்றிலும் நிழலுருவங்களாக ஒரு கூட்டம். என்ன நடக்கிறதென்று சரியாக அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை குருத்வாராவைத்தான் எரிக்க முயற்சிக்கிறார்களோ என்று தோன்றியது. மீனாவிடம் கதவைத் தாளிட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு குருத்வாராவின் அருகே போனேன்.
நான்கு பேர் உயிரோடு கொளுத்தப்பட்டு எரிந்து கொண்டிருந்தார்கள். தீப்பிடித்த நிலையில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த அவர்களை, சுற்றி நின்றிருந்த கும்பல் கற்களால் அடித்துக் கொண்டிருந்தது. வேறு சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த கம்புகளால் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். உடனேயே எனக்கு ரேக்கியின் ஞாபகம் வர அவனுடைய வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன். வீடு பூட்டியிருந்தது. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
பொழுது விடியும் வரை தூங்காமலேயே காத்திருந்தேன். நடு இரவில், புதிய பிரதமர் தூர்தர்ஷனில் பேசினார். “மறைந்த பிரதமர் என்னுடைய அன்னை மட்டுமல்ல; இந்தப் பாரதம் முழுமைக்கும் அன்னையாக விளங்கினார்; ‘ அடுத்த மனிதரைக் கொல்லாதீர்கள். அடுத்த மனிதர் மீதான வெறுப்பைக் கொல்லுங்கள்’ என்று சொன்ன அந்த அன்னையின் வாசகங்களை நாம் இந்த சோதனையான தருணத்தில் நினைவுபடுத்திக் கொண்டு அமைதியையும், பொறுமையும் கடைப்பிடித்து உலகிற்கு பாரதத்தின் பண்பை எடுத்துக் காட்டுவோம்” என்று தெளிவான, அமைதியான குரலில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
விடிந்ததும் எழுந்து 27 பிளாக்கை நோக்கிச் சென்றேன். குருத்வாராவைச் சுற்றிலும், எரிந்து கருகிய பிணங்கள் கிடந்தன. உள்ளே நூற்றுக்கணக்கான பேர் அகதிகளைப் போல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே நீண்ட வாளோ, அல்லது கம்போ வைத்திருந்தார்கள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் போய், “நீங்கள் திர்லோக்புரியா? இது பாதுகாப்பான இடம் அல்லவே? நேற்று இரவு இங்கு நடந்த விஷயங்களைப் பற்றித் தெரியாதா?” என்று கேட்டேன். தாங்கள் கல்யாண்புரியைச் சேர்ந்தவர்கள் என்றும், திர்லோக்புரியில் சீக்கியர்கள் அதிக அளவில் இருப்பதால், இங்கே வந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என்று எண்ணி இங்கே வந்து விட்டதாகவும், இங்கே வந்தபிறகுதான் இங்கேதான் எல்லா இடங்களையும் விட அதிக அளவில் கலவர நடந்திருப்பது தெரியவந்தது என்றும் சொன்னார்.
27வது பிளாக்குக்குப் போய்ப் பார்த்தேன். ஒரு வீட்டில் கூட ஆள் நடமாட்டம் இல்லை.கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே பூட்டிக்கிடந்தது. திரும்பி குருத்வாராவுக்கே வந்தேன். என்னிடம் சற்று முன்பு பேசிக்கொண்டிருந்தவரிடம் வந்து, “27வது பிளாக்கில் இருந்தவர்களெல்லாம் எங்கே? எல்லா வீடும் பூட்டிக் கிடக்கிறதே?” என்று கேட்டேன். பாதி பேர் வீட்டை வெளியே பூட்டி விட்டு பின்பக்கம் வழியாக உள்ளே போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பெரும் பகுதி மக்கள் 28வது பிளாக்குக்குப் போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எனக்குக் குழப்பமாக இருந்தது. “28வது பிளாக் முழுக்கவும் இந்துக்கள். அங்கே எப்படி அவர்கள் போனார்கள். அது எப்படி முடியும்?” என்று கேட்டேன். “உங்களுக்கு விஷயமே தெரியவில்லை தம்பி... எங்கள் மக்களுக்கு இந்துக்கள்தான் பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கிறார்கள். 27வது பிளாக்கிலுள்ள ரொம்பப் பேர் 28வது பிளாக்கிலுள்ள இந்துக்களின் வீடுகளில்தான் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். எங்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொலைகாரக் கும்பலெல்லாம் இந்துக்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. இவர்களுக்கெல்லாம் மதம், கடவுள் என்றெல்லாம் எதுவும் கிடையாது. இவர்கள் குண்டர்கள். அவ்வளவுதான். எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியவில்லை. திடீர் திடீரென்று பத்துப் பதினைந்து ஜீப்புகளில் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து சீக்கியனாக இருந்தால் வெளியே இழுத்துக்கொண்டு போய் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்துகிறார்கள். இவர்களில் பலர் எங்களிடம் முன்னால் ஓட்டுக் கேட்க வந்தவர்கள். அவர்களின் முகம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எப்போது அவர்களைப் பார்த்தாலும் என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்றார்.
ரேடியோ செய்தியில் இன்று கலவரம் நடக்கும் இடங்களுக்கு ராணுவம் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது என்றும், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செய்தி கேட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ராணுவமோ போலீஸோ எங்கள் பகுதிக்கு வரவில்லை. இரவுச் செய்தியில் கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைக் கண்டதும் சுட உத்தரவு இடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் யார் அமல்படுத்துவார்கள் என்றுதான் தெரியாமல் இருந்தது. எல்லா அரசியல் தலைவர்களும் தீன்மூர்த்தி ஹவுஸில் முடங்கிக் கிடந்தார்கள்.
நேற்று பிரதம மந்திரி சுடப்பட்டபோது, ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்ததால், செய்தி கிடைத்து அன்று மாலை தில்லி திரும்பி விமான நிலையத்திலிருந்து ஏ.ஐ.எம்.எஸ்.ஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரில் கற்கள் வீசப்பட்டன என்றும், அவரது காரைத் தொடர்ந்து மற்ற கார்களும் கூட கல்வீச்சால் பாதிக்கப்பட்டன என்றும் பி.பி.ஸி. வானொலி தெரிவித்திருந்தது. ஜனாதிபதிக்கே இந்த கதி என்கிறபோது, இந்த சாதாரண மக்களைக் காப்பாற்றுவதற்கு யாரு வரப் போகிறார்கள் என்று தோன்றியது.
தீன் மூர்த்தி ஹவுஸிலிருந்த பிரதமரின் உடலையும், அந்த உடலை தரிசிக்க வந்த மக்களையும் காட்டியபோது, ரொம்பவும் அசாதாரணமான கோஷங்களெல்லாம் எழுப்பப்பட்டன. எந்தவிதத் தணிக்கையும் செய்யப்படாமல் தூர்தர்ஷனில் அப்படியே காட்டப்பட்டது. (உதாரணமாக, ‘பாரத் கீ படி பேட்டீ கோ ஜிஸ் நே கூன்கியா, உஸ் வம்ச கோ மிடாயேங்கே!(3))
முந்தின இரவு முழுக்கவும் தூங்காத காரணத்தால் மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால் தூங்கவும் முடியவில்லை. அரைத் தூக்கமும், அரை விழிப்புமாக டி.வி.க்கு முன்னே உட்கார்ந்திருந்தேன். திடீரென்று எரிந்து கருகிய, இன்னமும் எரிந்து கொண்டிருக்கிற உடல்களின் நாற்றமும், பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் போன்றவற்றின் நாற்றமும் தாங்க முடியாமல் மூக்கை வந்து தாக்கியது. குமட்டலெடுத்தது. இந்த நாற்றமே ஆளைக் கொன்றுவிடும் போலிருந்தது. சாலை நெடுகிலும் ஒரே பிணங்களாகக் கிடக்க, ஒரு ஆள் அந்தப் பிணங்களை எண்ணிக்கொண்டிருந்தான். “யார் நீங்க?” என்று கேட்டேன். “ஜர்னலிஸ்ட்” என்றான். மேலும் சொன்னான். “இதுவரை 639 பிணங்களை எண்ணியிருக்கிறேன். நீங்களும் சேர்ந்து எனக்கு உதவி செய்யுங்கள். குறைந்தபட்சம் இந்தப் பிணங்கள் எவ்வளவு என்று எண்ணியாவது உலகுக்குச் சொல்லுவோம்”. அப்போது அந்தப் பிணக்குவியலிலிருந்து ஒரு பிணம் எழுந்து நடந்து வந்தது. அதன் வயிற்றிலிருந்து வெளியே சரிந்திருந்த குடல் தலைப்பாகையால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த பிணம் அப்படியே எங்கள் மீது விழ வயிற்றில் கட்டப்பட்டிருந்த தலைப்பாகைத் துணி அவிழ்ந்து குடல் எங்கள் கைகளில் சரிந்தது. அதே சமயத்தில் யாரோ டமடமவென்று எதையோ தட்டும் ஓசை கேட்டது. கைதட்டல் சத்தமா என்று ஒரு கணம் சந்தேகம் எழுந்தது. அப்படியானால் நடந்தது நாடகமா? நாடகம் முடிந்து கைதட்டுகிறார்களா? பத்துப் பதினைந்து பறைகள் சேர்ந்து ஒலிப்பது போன்ற சத்தம். அலறிக்கொண்டு எழுந்தேன். எதிரே மீனா என்னை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தாள். ”என்ன இது எவ்வளவு நேரம் எழுப்புவது? யாரோ கதவைத் தட்டுகிறார்கள். போய்ப் பார்ப்போம் வாருங்கள்” என்றாள்.
எழுந்து வந்து கதவைத் திறந்தேன். ரேக்கியும் அவன் அம்மாவும். அவர்களை உள்ளே அழைத்து கதவைச் சாத்திவிட்டு “என்ன ஆயிற்று? உங்கள் வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. எங்கே போயிருந்தீர்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டேன்.
அவர்கள் இருவராலும் ஒன்றும் பேச முடியவில்லை. தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தேன். தண்ணீரைக் குடித்துவிட்டு சற்று ஆசுவாசமாகி ரேக்கியின் அம்மா பேச ஆரம்பித்தாள்.
கலவரம் ஆரம்பித்த உடனேயே எல்லோரும் ஓடிப்போய் 28ஆவது பிளாக்கிலுள்ள இந்துக்களின் வீடுகளில் ஒளிந்து விட்டதாகவும், ஆனால் இன்று அங்கேயும் கும்பல் வந்து தேடுவதாகவும், இன்று பூராவும் இருவரும் அவர்கள் ஒளிந்திருந்த வீட்டின் ரஜாய் பெட்டியிலேயே மறைந்திருந்ததாகவும், இனிமேலும் அங்கே இருப்பது ஆபத்து என்று எண்ணியே ஓடிவந்துவிட்டதாகவும் சொன்னாள். உடனே போய் கத்தரிக்கோலை எடுத்து வந்து ரேக்கியின் நீண்ட முடியை வெட்டி ஒரு சுமாரான் கிராப்பாக மாற்றினேன். அவன் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. அவளிடமும் ரேக்கியிடமும் இனி உங்கள் பெயர் பிந்தியா, ரேக்கியின் பெயர் ராகேஷ் என்று சொல்லி, இனிமேல் இங்கிருந்து போகும்வரை ஸல்வாருக்கு பதிலாக புடவை கட்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு, மீனாவிடம் அவளுக்குப் புடவை கொடுக்கச் சொன்னேன்.
மறுநாள் காலை ராணுவமும், போலீஸும் வந்தது. ஆனால அவர்கள் வந்த பிறகும் ஜீப்புகளில் வந்த கும்பலை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த முறை ஜீப்புகளில் வந்த கும்பல் வீடுகளை நோக்கிப் போகாமல், நேராக ரேஷன் கடைக்குப் போய் அந்தக் கடைக்காரரை சாவியுடன் அழைத்துவரச் செய்தது. அவர் வந்து சேர்ந்ததும் கடை திறக்கப்பட்டு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி அடங்கிய ரெஜிஸ்தர் தேடி எடுக்கப்பட்டது. அதிலிருந்த பெயர்களை வைத்து, எந்தெந்த வீட்டு எண்கள் சீக்கியர்களுடையது என்று குறித்துக் கொள்ளப்பட்டது. அப்போதுதான் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. வீட்டு எண்களைக் குறித்து கொண்டு அந்தக் கும்பல் பக்கத்திலிருந்த மண்ணெண்ணெய் கடையை நோக்கிச் சென்றது. அதற்குள் அந்தக் கடைக்காரரே கடையைத் திறந்து வைத்திருந்தார். மண்ணெண்ணெய் டிரம்களும், டின்களும் ஜீப்பில் ஏற்றப்பட்டன.
நான் வேகவேகமாய் ஓடிவந்து குருத்வாராவின் அருகே முகாமிட்டிருந்த ராணுவ சிப்பாய்களிடம் விஷயத்தைச் சொன்னேன். அதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. எங்களால் எதுவும் செய்வதற்கில்லை என்றார்கள். “கலவரம் செய்பவர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக டி.வி.யில் சொன்னார்களே?” என்று கேட்டேன். “அப்படியானால் போய் டி.வி.யில் கேளுங்கள்” என்று சொன்னார் ஒரு சிப்பாய். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான போலீஸ்காரர் என்னைக் கூப்பிட்டு, “தம்பி... பிரதம மந்திரியைச் சுட்ட இரண்டு பேருமே போலீஸ்காரர்கள். அதனால் எங்கள் போலீஸ் துறையே பயந்து போய்க் கிடக்கிறது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு யார் யார் தலை உருளப் போகிறதோ என்று எங்கள் பெரிய அதிகாரிகளே பயந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் இந்தக் கும்பலைச் சுட்டால் எங்கள் கதி என்னவாகும்? எங்கள் வேலைக்கு என்ன உத்தரவாதம்? இந்தக் கும்பலில் இருப்பவர்களெல்லாம் யார் என்று நினைக்கிறாய்? எல்லாம் எங்கள் அதிகாரிகளுக்கே உத்தரவு போடுகிற கூட்டம். தெரியுமா உனக்கு? பேசாமல் போய் டி.வி.யைப் பார்த்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இரு” என்றார்.
போலீஸ்காரர் சொன்னது போல் வீட்டுக்குப் போகாமல் குருத்வாராவின் உள்ளே போனேன். முந்தின நாள் சந்தித்த கல்யாண்புரிக்காரர்களிடம் வாள், கம்பு என்று கொஞ்சம் ஆயுதங்கள் இருந்ததால், அவர்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் குருத்வாராவில் ஒரு ஈ, எறும்பு கூட இல்லை. சுத்தமாக அத்தனை பேருமே கொல்லப்பட்டு விட்டார்களா? தப்பியிருந்தால் எங்கே போயிருக்க முடியும்? ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஜீப் கும்பல் ஒரு பெரிய கூட்டத்தை இழுத்துக் கொண்டு வந்தது. கூட்டத்தில் ஒரு பெண் கூட இல்லை. எல்லோரும் ஆண்கள். நான்கு ஐந்து வயதுக் குழந்தைகள் கூட இருந்தார்கள். அவர்கள் தலையில் டின் டின்னாக பெட்ரோலையும், மண்ணெண்ணெயையும் ஊற்றி நெருப்பு வைத்தார்கள். திமிறிக் கொண்டு ஓடியவர்களை நீண்ட அரிவாளால் வெட்டிச் சாய்த்தார்கள்.
திரிலோக்புரியில் ஒரு சீக்கிய ஆண் கூட மிஞ்சியிருக்க மாட்டான் என்று தோன்றியது. பிறகு ஜீப்புகள் கல்யாண்புரி ரோட்டில் பறந்தன.
மதியம் ராணுவத்தினர் ஒரு கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். அணிவகுப்பு முடிந்து ஒரு அரை மணி நேரத்திற்குள்ளாகவே ஜீப் கும்பல் எங்கள் மயூர் விஹாருக்குள் நுழைந்தது. கையிலிருந்த முகவரி நோட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றது. அகப்பட்ட சீக்கியர்களைப் பிடித்து நடுரோட்டில் வைத்துக் கொளுத்தியது. எங்கள் பக்கத்து வீட்டுக்கு வந்தது கும்பல். வீட்டில் இருந்தவர்கள் பஞ்சாபி இந்துக்கள். ஆனால் நம்ப மறுத்தது கும்பல். பூஜை அறையையெல்லாம் காட்டினார்கள். அப்புறமாகத்தான் முகவரி நோட்டை வைத்திருந்தவர் “தர்பாரா சிங் கோன் ஹே?” என்று கத்தினார். உடனே அந்த வீட்டுக்காரர் “வோ இஸ் கர் கா மாலிக் ஹை. வோ திலக் புரி மே(ங்) ரெஹ்தா ஹை”(4). என்றார். “யே தோ பெஹலே போல்னா தா யார்” (5) என்று சொல்லிவிட்டு எங்கள் வீட்டை நோக்கி வந்தது கும்பல்.
அவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே ரேக்கியையும் ஜஸ்பீரையும் அழைத்து வந்து “இவர்கள் என் பாபி. பெயர் பிந்தியா. என் அண்ணன் ராணுவத்தில் இருக்கிறான். அவன் இவர்களை லவ் மேரேஜ் செய்துகொண்டான். இவன் அவர்களின் பையன் ராகேஷ். என் அண்ணன் இப்போது ஆக்ராவுக்கு ஸ்பெஷல் டியூட்டியில் போயிருப்பதால் இவர்கள் இங்கே எங்களுடன் தங்கியிருக்கிறார்கள்” என்று சொன்னேன். வந்திருந்த கும்பல் சற்று குழப்பத்துடன் பார்த்தது. கும்பலின் தலைவனைப் போலிருந்த ஆள் ரேஷ்மாவைப் பார்த்து “துமாரா நாம் க்யா ஹை?” என்று கேட்டான். அவள் பயத்துடன் என்னைப் பார்த்தாள். நான் “ரேஷ்மா” என்றேன். அந்த ஆள் ரேஷ்மாவின் தலையை வருடி, “க்யோ(ங்) டர்த்தி ஹோ, பேட்டீ? துமே ஹம் குச் நஹி கரோங்கே” (6) என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து “மதறாஸி பாபு... துமாரி கர் மே அப்னி காவ்(ங்)கி லட்கி ஆயி ஹை. உம்மீத் ஹை கி தும் ஜூட் நஹு போலோகே. அகர் ஏ ஜுட் நிகலா, துமே(ங்) நஹி சோடேங்கே” (7) என்று எச்சரித்தான்.
அன்றைய இரவு டி.வி.யில் “இன்று பதினைந்து பேர் அல்லது அநேகமாக இருபது பேர் இறந்திருக்கலாம். ஆனாலும் நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார் போலீஸ் கமிஷனர். அடுத்து பேசிய கவர்னர் “நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. இன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். ஆனால் பி.பி.சி.யில் கேட்டபோது இன்றைய தினம்தான் இந்த மூன்று நாட்களிலேயே மிகவும் உச்சக்கட்ட கலவரங்கள் நடந்த தினமாகத் தெரிவித்தது. தீஸ் ஹஸாரி போலீஸ் மார்ச்சுவரியில் இருநூறு உடல்கள் கிடந்ததாகவும், கிழக்கு தில்லியில் ஷக்கர்பூர், கல்யாண்புரி, ஷாதரா, கிருஷ்ணா நகர், பட் பட் கஞ்ஜ், ஷிவ்புரி, சந்தர் நகர், காந்தி நகர், கீத்தா காலனி, துர்காபூர், பஜன்புரா, சீமாபுரி போன்ற இடங்களில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் - ஆனால் அதே கிழக்கு தில்லியில் நத்து காலனி மற்றும் திர்லோக்புரி என்ற இரண்டு இடங்களில் மட்டுமே ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், மேற்கு தில்லியில் மங்கோல்புரி, சுல்தான்புரி, புத்விஹார் என்ற இடங்களிலும், வடக்கு தில்லியில் நரேலா, ஜஹாங்கிர்புரி என்ற இடங்களிலும் பல காலனிகளில் ஒரு ஆண் கூட விடப்படாமல் அத்தனை ஆண்களும் கொல்லப்பட்டதாகவும், ரயில்களில் வெறும் பிணங்களே வந்து சேர்ந்ததாகவும், புதுதில்லியைத் தவிர மற்றபடி தில்லி முழுவதிலும் போலீஸே இல்லாதது போன்ற தோற்றத்தைத் தருவதாகவும், எங்காவது ஓரிரண்டு இடங்களில் தென்படும் ராணுவம் கூட எதுவும் செய்ய முடியாமல் வெறும் பார்வையாளர்களாகவே நின்று கொண்டிருப்பதாகவும் பி.பி.சி.யில் சொன்னார்கள்.
காலையில் எழுந்து திர்லோக்புரி சென்றேன். சாலைகளிலும் தெருக்களிலும் கருகிய உடல்களும், அடித்துக் கொல்லப்பட்ட உடல்களும், துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளும் இறைந்து கிடந்தன. கிட்டத்தட்ட ஐநூறு உடல்களாவது இருக்கலாம் என்று தோன்றியது. 27 ஆவது பிளாக்கின் எல்லா வீடுகளுமே எரிந்து கரிக்கட்டைகளாக நின்றன. ரேக்கியின் வீடும் தப்பியிருக்கவில்லை. சுற்றிச் சுற்றி வந்து 28 ஆவது பிளாக்குக்கு வந்து சேர்ந்தேன். ராணுவ லாரிகளில் உடல்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அதை ஒரு குடிசை என்று சொல்ல முடியாது. ஷெட் அல்லது கூடாரம்... அல்லது அதை எப்படிச் சொல்லலாம் என்றே தெரியவில்லை. கையில் கிடைத்ததையெல்லாம் வைத்து அந்தக் கூடாரம் கட்டப் பட்டிருந்தது. சுற்றிலும் மரப்பலகைகள்... மேலே தார்ப்பாலின். பலகை இல்லாத இடங்களில் முள்வேலி, தகரம். நேற்று இரவு எரிக்கப்பட்டிருக்க வேண்டும். பிணங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த ராணுவ சிப்பாய்கள் முழுக்கவும் எரிந்து போன அந்தக் கூடாரத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நெருங்கிப் போய்ப் பார்த்தேன். மேலே போடப்பட்டிருந்த தார்ப்பாலின் எரிந்து மொட்டையாக இருந்தது. மேலே ஒரு ஓரத்தில் நான்கைந்து பலகைகள் செருகப்பட்டு கீழே அதற்குப் பிடிமானமாக ஒரு கம்பு நடப்பட்டிருந்தது. முழுக்க எரிந்திராத அந்தக் கம்பில் தொங்கி நின்றது பலகை. பலகையின் மேல் முழங்காலை கைகளால் கட்டிக்கொண்டு முழங்கால்களுக்கிடையே முகத்தைப் பதுக்கிக் கொண்டு அமர்ந்த நிலையில் இருந்தன இரண்டு சிறிய உடல்கள். ஒரு குழந்தைக்கு நான்கு வயது இருக்கலாம். மற்றொரு குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு இருக்கலாம். ஒரு இளம் சிப்பாய் அந்தக் காட்சியைப் பார்த்து முகத்தை மூடி அழுதுகொண்டிருந்தான். எரிந்து நின்ற கதவை உதைத்துத் திறந்த பொழுது உள்ளே - ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்தக் குழந்தைகளை நோக்கி ஒரு கையை உயர்த்தியபடி நின்றுகொண்டிருந்தார் - உடல் கருகிய நிலையில். அந்த பிளாக்கிலிருந்த அத்தனை பேரும் அங்கே கூடி விட்டார்கள். பிணங்களையே பெரும் எண்ணிக்கையில் பார்த்துப் பார்த்து செத்துப் போயிருந்த உணர்வுகள் திடீரென்று உயிர் பெற்று அதிர்ந்தன. நேற்று மாலை ஒரு இந்துவின் வீட்டில் ஒளிந்திருந்த இந்த சீக்கியக் கிழவரும், அவருடைய பேரன்களும் ஜீப்பில் வந்த கும்பலால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் துரத்தத் துரத்த ஓடி வந்து இந்தக் குடிசையில் ஒளிந்ததாகவும், துரத்தி வந்த கும்பல் அதற்கு மேல் குடிசையில் போகாமல் “அச்சா ஹுவா! இன் கோ ஜலாகே இதர் ஹீ லோடி* பனாயேங்கே” (8) என்று சொல்லி அந்தக் குடிசையையே கொளுத்தி விட்டுவிட்டதாகவும் சொன்னார்கள் அந்தக் காலனி வாசிகள்.
பிணங்கள் அப்புறப்படுத்தப்படுவதையும், தொடர்ந்து வந்து கொண்டிருந்த ராணுவ லாரிகளையும் பார்த்த பிறகு அந்த பிளாக்கில் ஒளிந்திருந்து மிஞ்சிய பெண்களும் குழந்தைகளும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியே வந்தார்கள். தங்கள் வீட்டு ஆண்கள் அத்தனை பேரையும் இழந்து அழுதுகொண்டிருந்த அவர்களையும் ராணுவத்தினர் தங்கள் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள்.
வீட்டுக்கு வந்தேன். 27ஆவது பிளாக் முழுவதும் எரிந்துவிட்ட செய்தியை ரேக்கியிடமோ அவன் அம்மாவிடமோ சொல்லவில்லை. “தீன் மூர்த்தி ஹவுஸில் அடைபட்டிருந்த தலைவர்கள் இன்று கலைந்திருப்பார்கள். நாளை நிலைமை சீரடையலாம் என்று தோன்றுகிறது” என்று மீனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது கதவை யாரோ விரல் நுனியால் தட்டுவதுபோல் சத்தம் கேட்டது. இவ்வளவு நாசுக்காக கதவைத் தட்டுவது யார் என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தால் - நேற்றைக்கு முன் தினம் வந்து போன அதே கும்பல்.
“அரே.... ஏ...மதறாஸி! தும்னே ஹமே(ங்) தோகா தியா?” (மதறாஸி நீ எங்களை ஏமாற்றிவிட்டாய் அல்லவா?) என்று சொல்லி ஒருவன் என் கன்னத்தில் அறைந்தான். மற்றொருவன் “நஹி பாய்.. இஸ் மதறாஸி கோ சோடோ.. கஹாங் ஹை ஸர்தார்?” (இந்த மதறாஸியை விட்டுவிடு. அந்த சர்தார் எங்கே) என்று சத்தமாகக் கேட்டான். வெளியே நடந்த சச்சரவைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் வெளியே வர, கும்பலில் ஒருத்தன் ரேக்கியின் கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டு போனான். தள்ளிய வேகத்தில் கீழே விழுந்த ரேக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. கையில் ஒரு டின்னை வைத்திருந்த ஒருவன் “இதர் ஹீ லோடி பனாயேங்கே”(9) என்று சொல்ல மற்றொருவன் ”நஹி பையா... பெட்ரோல் காஃபி நஹீ(ங்) ஹை. சடக் பர் ஔ சார் லோக் ஹை. சப்கோ மிலாகே லோடி பனாயேங்கே. ஏக் ஏக் கர் கே பெட்ரோல் கோ கதம் நஹி கர்னா” (10) என்று சொல்லிக் கொண்டே ரேக்கியை ஜீப்புக்குள் தூக்கிப் போட்டு ஜீப்பைக் கிளப்பினான் ஒருவன். கும்பலும் ஜீப்புக்குல் ஏறிக் கொண்டது.
ஜஸ்பீரும் மீனாவும் ஜீப்பை துரத்திக்கொண்டே ஓட அவர்களின் பின்னால் ஓடிய ரேஷ்மாவைத் தூக்கிக்கொண்டு செயலற்று நின்றேன் நான்.
******
(1) தேஸு – DESU – வெளி - தில்லி மின்சார வாரியம்
(2) சாச்சி – பெரியம்மா
(3) ”பாரதத்தின் புதல்வியைக் கொன்ற கூட்டத்தின் வம்சத்தை அழிப்போம்”
(4) ”அவர் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர். திலக்புரியில் இருக்கிறார்”
(5) ”இதை முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டாமா, நண்பா?”
(6) ”ஏன் பயப்படுகிறாய் மகளே? உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்”
(7) “மதறாஸி பாபு, உன் வீட்டுக்கு எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி வந்திருப்பதாக தகவல். அநேகமாக நீ பொய் சொல்ல மாட்டாய் என்று நம்புகிறோம். சொல்லியிருப்பதாகத் தெரிந்தால், உன்னைச் சும்மா விட மாட்டோம்.”
(8) ”நல்லதாகப் போயிற்று. இவர்களை இங்கேயே வைத்து லோடி* கொண்டாடி விடுவோம்.”
* லோடி –போகிப்பண்டிகை அன்று தமிழ் நாட்டில் பழைய பொருட்களையெல்லாம் போட்டுக் கொளுத்தி கொண்டாடுவது போல் வடநாட்டின் போகி லோடி. பஞ்சாப் கிராமங்களில் இந்துக்கள் தங்கள் வீடுகளிலேயே சாராயம் காய்ச்சிக் குடித்துவிட்டு, பழைய பொருட்களைக் கொளுத்தி, அதைச் சுற்றி நின்று நடனமாடி லோடியைக் கொண்டாடுவது வழக்கம்.
(9) ”இங்கேயே லோடி கொண்டாடிவிடலாம்”
(10) ‘வேண்டாம்… நம்மிடம் பெட்ரோல் அதிகம் இல்லை. ரோட்டில் வேறு இன்னும் நான்கு பேர் இருக்கிறார்கள். எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து லோடி கொண்டாடுவோம். ஒவ்வொருத்தருக்காக தனித்தனியாக பெட்ரோலை வீணடிக்கக் கூடாது.’
****
-சுபமங்களா - செப்டம்பர், 1993

No comments:

Post a Comment