Monday, November 23, 2015

ஸ்ரீீஆதிசங்கரர் அருளிய "ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம் “ !!!


ஸ்ரீீஆதிசங்கரர் அருளிய "ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க'த்தின் தமிழ் ஆக்கம் கீழே தரப் பட்டுள்ளது. அதை தினமும் ஸ்ரீசுப்ர மண்யரை மனதில் நினைத்துப் பாராய ணம் செய்து வந்தால், வளமான வாழ்க் கையும் நிலையான செல்வமும் பெற்று நலமுடன் வாழலாம்.
பிள்ளையாய் நின்றே விக்ன
பெருமலை தகர்க்கும் தெய்வம்
தொல்லிறை சிவமாம் சிங்கம்
தொழுதிடும் யானைத் தெய்வம்
வெள்ளை வாரணன் பிரம்மாவும்
விரும்பியே தேடும் தெய்வம்
நல்லருள் உருகணேச
நம் தெய்வம் அருள்வதாக.
திறமிலேன் சிறிதும்; உண்மை
தெரிந்து நற் கவியைப் பாட!
உரைநடை அறியேன்: வார்த்தை
ஒலியோடு பொருளும் தேறேன்!
அறுமுகம் கொண்ட தெய்வ
அறிவே என் உள்ளிருந்து
பொருள் நிறை கவியாய் வந்து
புனிதமாய்க் காட்சி நல்கும்!
மயிலேறி வருவோனாகி,
மனங்கவர் எழிலோனாகி,
பயில் மறைப் பொருளோனாகி
பரந்தங்கு மறைவோனாகி
கயிலையோன் மகனாய், மேலோர்
கருத்தில் வாழ் தெய்வமாகி
தயவினால் உலகம் காப்போன்
தாள் மலர் வணங்குகின்றேன்.
"அடைந்திடும் போதே என்றன்
அலைவாயில் கோவில் தன்னைக்
கடந்தனர் பிறவி என்னும்
கடலினை' என்று காட்டி
இடங்கொண்டங்கினி திருக்கும்
இளையவேல் முருகன் தன்னை
படியெலாம் காக்கும் சக்தி
பாலனைப் போற்றுகின்றேன்!
"கோவிலின் முன்வந்தென்னைக்
கும்பிட்டு வணங்குவோர்க்குத்
தீயவை, கடலின் மீது
திரை தோன்றி மறைவதைப் போல்
மாய்வுறும்' என்று காட்டி
மனிதரைத் தேற்றுகின்ற
தூய நல் குகனை என்றும்
தொழுவேனுள் மலரில் வைத்தே!
கந்தமா மலையின் மீது
காலடி வைத்த போதே
சுந்தரக் கயிலை யேறி
சுக முற்றோர் ஆவரென்று
வந்தவர்க் குரைப்பாரைப் போல்
வடிவேலன் அங்கிருக்கும்!
அந்த நற்றெய்வம் என்றும்
அகமகிழ்(வு) அருள்வதாக!
தண்கடற் கரையின் ஓங்கித்
தவத்தவர் விழைவதாகி
மண்ணவர் பாவமெல்லாம்
மாய்த்திடும் சுகந்தமென்னும்
புண்ணிய மலைக்கு கைவாழ்
பொங்கொளி குகனை அன்பர்
துன்பங்கள் துடைத்தாள் வோனைத்
துதிக்கின்றேன் விருப்பினோடு!
உலகினர் விருப்பமெல்லாம்
உவந்தருள் ஒளிர்பொன் வீட்டில்
மலர் நிறை மணி மஞ்சத்தில்
மகிழ்ந்திருப்பவனைத் தேவர்
தலைவனைக் கார்த்திகையார்
தனயனைக் கோடி சூரிய
ஒளிமிகு வடிவினோனை
உணர்வுடன் தொழுவேன் என்றும்!
ஒலிக்கின்ற சிலம்பினோடும்
ஒப்பிலா அழகினோடும்
சொலிக்குஞ்செந் நிறத்தினோடும்
சுடரும் நின் கமலபாதம்
அளிக்கின்ற அமுதம் மாந்தி
ஆறுமுகத் தேவே என்றன்
உளத்துயர் வண்டு நாளும்
உயரின்பம் அடைவதாக!
பொன்னொளி வீசுகின்ற
புகழ்மிகு பட்டினாலும்
இன்னொலி சலங்கையொட்டி
யாணத்தின் ஏற்றத்தாலும்
மின்னொளி அரை ஞாணாலும்
மேன்மை கொள் நின்னிருப்பின்
தன்னெழில் போற்றி வாழ்வேன்!
சண்முகத் தேவே என்றும்!
தாரகக் கொடியோன் தன்னைத்
தடிந்தவேல் முருகா! இந்தப்
பாரகம் அடங்கக் காக்கும்
பரிவினால் உயர்ந்து வள்ளி
மார்பகச் சாந்தில் தோய்ந்து
மணக்கும் நின் அகன்ற மார்பாம்
சீரகம் தனை வணங்கிச்
சிந்தித்து வாழ்வேன் என்றும்!
மருவிடும் அண்டமெல்லாம்
மலைந்திடச் செய்தும், இந்த்ரன்
செனுநரைத் தேய்த்தும் வேதன்
செருக்கினைத் தீர்த்தும் நன்மை
பெருகிடக் காத்தும் யானைப்
பெருங்கையும் நாண ஓங்கிக்
கருணை செய் நின் ஈராறு
கைகளே சரணம் கந்தா!
அழகனே! நின்றன் கோலம்
அளவிட்டிங் குரைப்பாருண்டோ?
மழைபொழி பருவம் தன்னில்
மங்குலில் வானில், திங்கள்
முழுமையாய் என்றும் ஆறாய்
முளைத்திடின் களங்கமின்றி
எழில்வளர் நின்முகங்கட்(கு)
ஈடாகும் ஒருகால் என்பேன்!
புன்னகை அன்னம் தோன்றப்
புகழ் கடைக் கண்களான
வண்டுகள் இனிதியங்க
வண்சுவை அமுதைச் சிந்தும்
இன்னுதடு இதழ்கள் கொண்டு
எமக்கருள் சிவகுமாரா!
நின்முகக் கமலம் ஆறும்
நேரினில் யான் கண்டுய்ந்தேன்!
அருள் நிறை முருகா! நீண்டு
அகன்ற நின் விழியீராறும்
கருணையைச் சுரந்து நல்கும்
கடல்களே! அவற்றால் என்றும்
வரையிலா தெவர்க்கும் நீதான்
வழங்கும் நின் அருட்பார்வையில்
ஒரு சிறிதென்மேல் பெய்தால்
உமக்கொரு குறையுண்டாமோ?
என்னருள் குமரா! வாழ்க,
இனிது என ஈசனார் தாம்
அன்பொடிம் மந்த்ரம் கூறி
அறுமுறை மோந்தங்குச்சி
இன்புறற் கேற்றவாகி
எழில் ஒளிர் முடிகள் தாங்கி
மண்பொறை கொளும் நின்ஆறு
மலர்தலைக்கென் வணக்கம்!
மணியணித் தோள்வளையால்
மாலையால் குண்டலத்தால்
அணிபெறு கன்னம் தன்னால்
அழகு கை வேலால் அன்போடு
அணிந்திடும் மஞ்சள் பட்டால்
அழகிற்கோர் வடிவன் ஆன
இனியனாம் முருகன், ஈசன்
ஈன்றவன் இருக்க என்முன்!
வருக என் செல்வ என்றே
வாஞ்சையாய்ச் சிவனழைக்க
விரைவில் தாய்மடியை விட்டு
விருப்புடன் சென்ற பால
முருகனை, உவகை பொங்க
முன்னவன் தழுவிக் கொண்ட
சிறுவனைச் சேயோன் தன்னைச்
சிந்தித்து வணங்குகின்றேன்!
பரமன் தன் குமரா! சேனா
பதி! குகா! கந்தா! வேலா!
குறமகள் வள்ளி தன்னைக்
கொண்டவா! குறையில் செல்வா!
அறங்கொல்தாரகனை மாய்த்த
அருளாளா! அடியார்க் கின்ப
வரந்தரும் மயில்மேல் வீரா!
வந்தெனைக் காப்பாய் என்றும்!
அடங்கியே புலன்கள் ஐந்தும்
அறிவற்றுச் செயலும் அற்று
மடங்கிட நினைவும் நெஞ்சில்
மல்கியே கோழை பொங்க
நடுங்கிடும் உடலினின்று
நமனுயிர் பிரிக்கும்போது
தடையிலா தென்முன் வந்து
தயை நிறை குகனே நிற்பாய்!
கொடுமை செய் கால தூதர்
கோபத்தோ டென்முன் வந்து
கடலென ஆர்ப்பரித்துக்
கலங்கிடச் செய்யும்போது
நடுங்கிடேல் என்று கூறி
ஞானவேல் கையிலேந்தி
உடன் எதிர் மயிலில் தோன்றி
உளத்துயர் தீர்ப்பாய் அப்பா!
கருணையங் கடலே! அந்திக்
காலத்தில் வாயடைத்தொன்(று)
உரைக்கவும் மாட்டேனாகி
ஊமையாய்க் கிடப்பேன் அப்போது
இறைவனே! நினைப் போற்றாத
இழுக்கினால் துறந்திடாதீர்!
குறை நீக்கிக் கொள்ள இன்றே
கும்பிட்டேன் வேண்டி வேண்டி!
ஆயிரம் அண்டங்கட்கோர்
அதிபனாம் சூரன் என்னும்
தீயனோடுற்ற சிங்க
முகனும் தாரகனும் எல்லாம்
மாயவே கருணை கொண்ட
மாவீர! என் மனத்துள்
ஏயுமோர் துயர் வீழ்த்தாயேல்
என் செய்வேன்! எங்கு செல்வேன்!
வளர் துன்பச் சுமையால் என்றும்
வாடுவேன் நாயேன் நீயோ
தளர்பவர் தம்மையெல்லாம்
தாங்கிடும் கருணாமூர்த்தி!
மலைமகள் மைந்தா! உம்மை
மறந்து வேறெங்கும் செல்லேன்!
அளியன் நின்னை துதிக்கவொட்டாது
அலைக்குமென் மனநோய் தீர்ப்பாய்!
தீய தாரகனை கொன்றோய்!
திவ்விய இலையில் நின்றன்
நேயமார் நீற்றைக் கண்டால்
நீரிழி(வு) என்புருக்கிப்
பேயொரு குன்மம் குஷ்டம்
பெருகுகாக் கைவலிப்பும்
சாயபைத்தியமே மூலம்
சளிச்சுரம் அனைத்தும் ஓடும்!
கண்ணவன் வடிவே காண்க!
காதலன் புகழே கேட்க!
அன்னவன் சரிதமேவாய்
அன்புடன் உரைக்க; கைகள்
பண்ணுக தொழில வற்கே!
பணிகட்கே உடலம் ஆக!
எண்ணங்கள் எல்லாம் அந்த
எழில் குகனிடமே சேர்க!
அன்புடன் பக்தி செய்வோர்,
அருந்தவ முனிவர்க் கெல்லாம்
இன்பத்தை யருளு தற்கிங்(கு)
எண்ணற்ற தெய்வமுண்டு!
பண்பிலா ஈனர் கட்கும்
பரிந்தருள் புரிவதற்குச்
சண்முக மன்றி வேறு
சாமியான் காணேன் காணேன்!
செந்தில் வாழ் முருகா! என்னைச்
சேர்ந்துவாழ் மனைவி மக்கள்
பந்துக்கள் பசுக்கள் ஆண் பெண்
பலரும் நின் பதமே பற்றிச்
சிந்தித்தல் துதித்தல் யாகம்
செய்தல் சேவித்த லென்னும்
இந்த நற்பணிகளே செய்(து)
இருக்க நீ அருள்வாய் அப்பா!
மாயக்கி ரவுஞ்சம் என்னும்
மலையினைப் பொடியாச் செய்தோய்!
நோயென துடலிற் செய்யும்
நுண்புழு விலங்கு புட்கள்
ஆயவை அனைத்தும் நின்றன்
அயில் வேலால் துளைக்கப்பட்டும்
போயழித்திடுக! இந்தப்
புவியினை தாண்டி அப்பால்!
தெய்வ யானை மணாள!
தேசத்தில் அன்பு மைந்தன்
செய்திடும் பிழையைப் பெற்றோர்
சிந்தையில் பொறுத்தி டாரோ!
உய்வருள் மகேச! நாயேன்
ஒரு சிறு குழந்தை! நீயோ
வையத்தின் தந்தை! என்றன்
வசையெலாம் பொறுத்தருள்வாய்!
கந்தவேள் போற்றி! நீ வாழ்
கடற்கரை தனக்கும் போற்றி!
சந்தமா மயில் தனக்கும்
சக்தி வேலுக்கும் போற்றி!
வந்தனை போற்றி, ஆட்டு
வாகனம் தனக்கும் கோழிச்
செந்திருக் கொடிக்கும்! மீண்டும்
சேவடி போற்றி! போற்றி!
ஈசனார் மகனே வெல்க!
எல்லோர்க்கும் உறவே, வெல்க!
மாசிலாப் புகழோய் வெல்க!
வானுயர் பதத்தோய் வெல்க!
ஆசையோ டன்பர் ஆடும்
ஆனந்தக் கடலே வெல்க!
ஏசிலா இன்பம் ஈவோய்!
என்றும் நீ வெல்க! வெல்க!
போற்றியே குமரன் தன்னைப்
புகழுமிப் புஜங்க மாலை
சாற்றியே வணங்கும் அன்பர்
சன்மார்க்க ராகி, உள்ளம்
ஏற்றிடும் மனைவி மக்கள்
இருஞ்செல்வம் நீண்ட ஆயுட்
பேற்றுடன் வாழ்ந்து கந்தன்
பெரும் பதம் அடைவர் திண்ணம்!
வாழ்க சீரடியாரெல்லாம்.

No comments:

Post a Comment