Sunday, September 27, 2015

காதல் .என்பது என்ன?



நாரதர்: கிருஷ்ணா சமீபகாலமாக நீங்கள் இறுக்கமான காதல் கவிதையை எழுதத்துவங்கி விட்டது ஏன்?
கிருஷ்ணன்: காதல் இறுக்கத்தொடங்கிவிட்டது என்று பொருள்
நாரதர்: துவக்கம், தொடக்கம் என இரண்டு சொல்லால் ஏன் குழப்புகிறீர்கள்?
கிருஷ்ணன்:சரியான சொல்லையும் சரிபோல் தோணும் தப்பான சொல்லையும் சேர்த்தே காதல் மொழி இருக்கும்..
நாரதர்:தங்கள் பேரன் அனிருத் காதல் செய்யும் காலத்தில் நீங்களும் காதல் செய்யலாமா?
கிருஷ்ணன்: அவன் காதல் அவனை சுகப்படுத்தும்..என் உணவை அவன் எப்படி செரிக்கமுடியும்?
நாரதர்:காதல் கட்டாயம் தேவைதானா?
கிருஷ்ணன்:ஒருத்தி நம்மை காதலிப்பது என்பது நம் வாழ்வின் கெளரவம் அல்லவா…சிபாரிசு இன்றி கிடைத்த சாகித்ய அகாடமி பரிசை விட பெருமை அல்லவா?அது இருப்பின் உன்னதம் இது பெண்ணுக்கும் பொருந்தும் நாரதா..
நாரதர்: காதலிக்க என்ன தகுதி வேணும் கிருஷ்ணா?
கிருஷ்ணன்:விரும்புபவளின் கடந்தகால வாழ்வின் பிரேதத்தை பரிசோதிக்காதே-தேவதையாக இருப்பினும் அது துர்வாசம் வீசும்.அவளின் நிகழ்கால உடலில் உன் அன்பின் கொடியை பதியமிடு.எதன் பொருட்டும் காதலின் எதிர்கால உறுதிமொழியை அவளிடம் யாசிக்காதே-காரணம் அது அவள் வசம் இல்லை.
நாரதர்: ஆக…கிடைக்கும் வரை காதலி என்கிறாய்.
கிருஷ்ணன்:இல்லை …அவள் அனுமதிக்கும் வரை காதலி
நாரதர்:ஐய்யோ இந்த காதல் என்பது என்ன புரியும் படி சொல்லித்தொலையேன் கிருஷ்ணா?
கிருஷ்ணன்:அதோ..
“காற்றைக் கிழித்து போகும் அம்புகளாய்
’சக்தி’களால் சதாகாலமும் இயங்கும்
அந்த தேசிய நெடுஞ்சாலையில்
எந்த சலனமுமின்றி சிவனேனென..
ஒழுங்கற்றதும் ஆனால் ஒழுங்கானதுமான
சப்த தாளத்தில் மூத்திரம் பெய்தபடி…
குறுக்காக சாலையை கடக்கும்
அந்த எருமையைப் போன்றது..”

நாரதர்: ஓ .காதல் என்பது எருமையா?சாலையைக் கடக்கும் நடையா?தடங்களாக பதிந்து இருக்கும் காய துடிக்கும் மூத்திர தடமா?இந்தகேடு கெட்ட காதல் தேவையா?
கிருஷ்ணன்: கோபம் கொண்டவன் தன் காதலை புதைகுழியில் தள்ளிக்கொள்கிறான்..அவன் காம அறுவடைக்கு தகுதியில்லாதவன்
நாரதர்:சரி சரி..நான் இப்போது காதலை வசப்படுத்த இறுதியாய் ஒரு வழி சொல்
கிருஷ்ணன்:அந்த யதார்த்த எருமையாக நீ மாறாத வரை காதல் ஒரு போதும் வசப்படாது
நாரதர்: நீ கிருஷ்ணனும் இல்லை நான் நாரதரும் இல்லை..காதல் நம்மை சாக்காகி தன் வாக்குமூலத்தை வரைந்துக்கொண்டுள்ளது..சில காதலர்க்காக …போதும் நாம் அருபமாகலாமா?
-----------------கவிதையாக்கம்-அமிர்தம் சூர்யா

No comments:

Post a Comment