Sunday, September 27, 2015

இடோ நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்கு விடை கிடையாது.

1657 மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்கு விடை கிடையாது.
இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைத்த வீடுகள் (மரத்தால் காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள் நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.
கனத்த சாரீரமுடைய ஒருவர் தும்மினால்கூட நில அதிர்வு ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657 மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பி வந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்பு படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்முரமாக வேலை பார்த்துவிட்டு நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.
புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில் கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள் அந்தப் பேரழிவு நெருப்பு பரவ காரணம் என்ன?
நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களை கேட்டால் இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்த சம்பவத்தை சொல்வார்கள்.
ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த பகட்டான கிமோனோ(kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.
அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணித்துகொண்டு அழகு பார்த்தால் மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.
இடே நகரமெங்கும் விஷயம் பரவியது. ' அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது. மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி சடங்குகள் செய்து எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க....
அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர.... உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ...
அந்த சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள் அநேக கட்டடங்கள். 60-70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்த பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

No comments:

Post a Comment