Tuesday, August 4, 2015

முதலமைச்சரின் அந்தரங்கம் வெளியாகியது அதிர்ச்சியில் கூட்டமைப்பு!!!


கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றனர் – விக்கினேஸ்வரன்
வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்குமிடையே கடுமையான முரண்பாடுகள் விரிந்து வருவது இரகசியமானதல்ல. இணைய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைபபின் தலைவர்கள் மீது மிகக் கடுமையான வார்த்தைகளைத் தொடுத்துள்ளார்.
“நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை” என்று ஆரம்பித்த முதலமைச்சர் “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல தலைவர்களுடைய குடும்பம் இந்தியாவில் இருக்கின்றன. அப்ப, இவர்கள் வந்து ஒரு பிசினஸ்ஸை நடத்துகிற மாதிரிதான் நடத்திக்கொண்டு.. அந்தந்த நேரத்திற்கு வந்து வாக்குகளை எடுப்பதும் போவதும்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துள்ள வதிவிடங்களைக் கொண்டுள்ள தலைவர்களான இரா சம்பந்தன் (த.தே.கூ தலைவர், இந்தியா), மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சித் தலைவர், இந்தியா), செல்வம் அடைக்கலநாதன் (தமிழீழ விடுதலை இக்கத்தின் தலைவர், இந்தியா), என் சிறிகாந்தா (தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட வேட்பாளர், அவுஸ்திரேலியா), வினோதாரலிங்கம் (தமிழீழ விடுதலை இயக்கத்தின் முலைத்தீவு மாவட்ட வேட்பாளர், பிரித்தானியா), சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியின் தலைவர், கனடா) ஆகியோர் முதலமைச்சரின் சொல்லம்புகளுக்கு இலக்காகி உள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிவித்த முதலமைச்சர் “இது சரிவராது” என்றும் திட்டவட்டமாக மேலுள்ள தலைவர்களுக்கு சுட்டிக்காட்டியும் உள்ளார்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்து இருப்பது தொடர்பாக தேர்தல் நிறைவடைந்த பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்து அதேசமயம் முதலமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டும் வெளிவந்து உள்ளது.
முதலமைச்சரின் பதிவின் முழுமையை கீழே காணலாம்.
இன்றுள்ள தலைமைத்துவம் சரியானதா என்பதற்கு நான் பதில் சொன்னேன் என்றால், எனக்கு அடியும் நல்லா விழும.; ஆனால், நான் பதில் சொல்லுறன். பதில் சொல்லுறன். பதில் சொல்ல வேண்டிய கட்டம் வந்திட்டுது.
இப்ப ஏழெட்டு மாதத்திற்கு முதல் ஈபிஆர்எல்எவ் இனுடைய ஆண்டு விழாவொன்று நடந்தது. அங்கு நான் பேசுறதுக்கெண்டு போகவில்லை ஆனால், பேச விட்டுவிட்டார்கள். அந்த நேரத்தில் நான் என் மனசிற்கு வந்த சில விசயங்களை பேசியிருக்கிறன். அது ஒரு முக்கியமான பேச்சு என்னைப் பொறுத்தளவில். தமிழ் தலைமைத்துவம் அறுபது எழுபது வயதிற்கு மேற்பட்ட ஆட்களைத்தான் கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட தலைமைத்துவத்தை நாங்கள் இன்னும் ஏற்படுத்தவில்லை.
இன்னொரு விடயத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும். எங்களுக்குள்ள வளங்கள் குறைவு. தலைமைத்துவத்திற்கு வயது போயிட்டுது. இந்த நிலையில், தலைமைத்துவத்திற்கு ஏதாவது ஒன்று நடந்தால் நாங்கள் பெரும் பிரச்சினையிலும் சீரழிவிலும் முடிய வேண்டிவரும். ஆகவே, நாங்கள் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். மாவையிட்டையும் இதைப்பற்றி சொன்னேன்.
“ஓமோம் செய்யத்தான் வேணும்;, எங்கள் இளைஞர் அணி எல்லாத்துக்கும் அப்பிடி செய்யோணும் இப்படிச் செய்யோணும்” எண்டு சொல்லுறதுதான், ஆனால் எதுவுமே நடக்கிறதில்லை. இப்ப இன்னுமொரு உதாரணம் தாறன். பாராளுமன்றத்தில் போய் இஞ்சை நடக்கிற பல விசயங்களை எந்தளவுக்கு சொல்லி நடவடிக்கை எடுக்கிறம் என்பதும் பிரச்சினையாக இருக்கிறது. இப்ப இந்த மகாவலி சம்பந்தமாக எந்தளவுக்கு தெளிவுபடுத்தி பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறம்?
நீங்கள் இப்பிடியெல்லாம் செய்யிறியல் இது பிழை என்று எங்கையும் சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்லியிருந்தாலும் அது பற்றி எங்களுக்கு சரியாக தெரியாது. பல விடயங்களிலும் எங்களுக்குள்ள பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து, அதை பாராளுமன்றத்தில் தெரிவித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்தி, அதை பிரபலப்படுத்தி, மக்களிடையே அது சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம். அதற்கு ஏற்ற அளவுக்கு எங்களது தலைமைத்துவம் இருக்கின்றதா? இனிவரும் ஒரு தலைமைத்துவம் அப்பேர்ப்பட்ட தலைமைத்துவமாக இருக்குமா? இதுவெல்லாம் பெரிய கேள்விகள்.
அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். நான் ஒரு தீவிரவாத கருத்தை இப்ப கொண்டிருக்கின்றேன் என்று மக்கள் சொல்கிறார்களாம். அதுக்கு நான் பதில் சொன்னேன். எவ்விதமான தீவிரவாத கருத்துக்களையும் நான் கூறவில்லை. நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். ஆனால், இங்கு வந்து ஒன்றரை வருடமாக மக்களோடு மக்களாக இருந்து, நாளாந்தம் மக்களின் பிரச்சினைகளை நான் கேள்விப்பட்டுக் கொண்டு வாறன். அவர்களின் ஊர்களுக்குப் போறன். பார்க்கிறன், கேட்கிறன். அப்ப… இதுகள் எல்லம்தான் என்னை மாத்தியிருக்கு. அட இப்பிடிப்பட்ட ஆட்களுக்குப் போய் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம்.. இதுகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைச்சிக்கொண்டு….? நாங்கள் அவர்களுக்கு முழுமையான தீர்வு ஒன்றை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் தன்பாட்டில் வருகிறது.
அதான் உங்களுக்கு நான் சொன்னன் எந்தத் தலைவராக இருந்தாலும், தமிழ் மக்களின் தலைவர்களாக இருந்தால், அவர்கள் வந்து இங்கு இருக்க வேணும். மக்களோடு மக்களாக இங்கு வாழ வேணும். வாழ்ந்தால்தான் மக்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கலாம், நடத்திக்கொண்டு போகலாம். இதைவிட்டு. அந்தந்த நேரத்திற்கு மாத்திரம் வந்து மக்களிடம் வாக்குகளை கேட்கிறது…?
நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. பலருடைய குடும்பம் இந்தியாவில் இருக்கின்றன. இது ஒரு பிசினஸ் மாதிரி வந்திட்டுது.. எனக்கு குடும்பமே இல்லாததால் அது வேறு.. ஆனால், பலருடைய குடும்பங்கள் இந்தியாவில் தான். மனைவிகள் பிள்ளைகள் எல்லாரும் அங்கே.. அப்ப, இவர்கள் வந்து ஒரு பிசினஸ்ஸை நடத்துகிற மாதிரிதான் நடத்திக்கொண்டு.. அந்தந்த நேரத்திற்கு வந்து வாக்குகளை எடுப்பதும் போவதும்.
இது சரிவராது. மக்களோடு இருந்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய விதத்தில் நாங்கள் சிந்திக்க வேணும். அதற்குரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டியது பற்றி நாங்கள் சிந்திக்க வேணும். அதற்கு நாங்கள் தியாகப்படுத்த வேணும்.. எங்களை நாங்கள் அர்ப்பணிக்க வேணும். அந்தவிற்கு தலைவர்கள் இருந்தால்தான் எங்களுக்கு.. தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையென்று சொன்னால் நாங்கள் ஒரு காலமும் விமோசனத்தை எதிர்பார்க்க முடியாது.
அடுத்த பொதுத் தேர்தலில் நான் எவருக்குமே சார்பாக பேசப் போவதில்லை என்ற கருத்தில்தான் இப்போது இருக்கின்றேன். அதனை மாற்றிக்கொள்வேனோ என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் அபபடியானதொரு நிலைமை.
மகாவலி தண்ணீரை வட மாகாணத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் ஒற்றைக் காலில் நிற்கிறது. இதுவரை ஒரு சொட்டுக் கூட வடமாகாணத்திற்கு வரவில்லை. ஆனால், மகாவலி அதிகார சபைக்கு கீழ் மகாவலி எல் வலையம்; ஒன்றை வட மாகாணத்திற்குள்ளேயே நிர்ணயப்படுத்தி, இந்த இடத்திற்குத்தான் தண்ணீர் வரபோவதாக மகாவலி திட்டத்தில் இருந்தது என்று கூறி, அந்த இடத்தில் நாங்கள் மக்களை கொண்டுவந்து குடியேற்றுகிறோம் என்று கூறி, அந்த இடங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றியிருக்கிறார்கள். கனகாலத்துக்கு முதல், அந்த தண்ணீர் இங்கு வரப்போகின்றது என்று கூறித்தான் இது நடந்தது.
தண்ணீரை கொண்டு வாறம், தண்ணீரைக் கொண்டு வாறம் என்று கூறி வேறு விசயங்களையும் இந்த அரசாங்கம் கொண்டுவரப் பார்க்குது. அதனை இப்படியே கொண்டுவந்து இரணைமடுவோடு சேர்க்க வேணும் என்று பேச்சு நடக்குது. இரணைமடு வரைக்கும் மகாவலி சபை இருந்து கொண்டு, அதுவரைக்கும் சிங்கள மக்களை கொண்டுவந்து அதுக்குள்ளே போடுது. நாளைக்கு இது என்ன மாதிரி பாதிக்கப் போகின்றது என்று பாருங்கள்.
இதற்காகத்தான நான் சென்ற கிழமை ஆயர் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். எல்லா விதமான மாறுபட்ட கருத்துக்களையும் கொண்டுள்ள மக்களின் தலைமைத்துவங்களையும் ஒன்று சேர்த்து. பொதுவான ஒரு கருத்தை நிலைநாட்டக் கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் பதில் தருவதாக கூறியிருந்தார் ஆனால், இதுவரை வரவில்லை. அப்படி செய்ய வேண்டிய அவசியம் ஒன்று எங்களுக்கு இருக்கின்றது. எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பிரியக்கூடாது.
நன்றி
த. ஜெயபாலன்

No comments:

Post a Comment