Friday, May 29, 2015

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படத்திற்கான விருப்பங்கள்
படைப்பிற்கு கிடைப்பதில்லை
முகநூலில் !

ஏமாற்றி கறக்கின்றனர்
இறந்த கன்று வைத்து
பால் !

மீனவர் வலையில் மீன்கள்
இலங்கைப்படை வலையில்
மீனவர்கள் !

இதயத்தை இதமாக்கும்
ஓசையின் ஒழுங்கு
இசை !

ஓவியர் உள்ளம்
ஓங்கி உரைக்கும்
ஓவியம் !

எந்த ஓவியராலும்
வரைய முடியாது
குழந்தை வரையும் ஓவியம் !

பராமரிப்பில் உள்ளது
விளையாமல் போவதும்
விதை விருட்சமாவதும் !

வெகு நாட்களாகி விட்டன
நேர்மை விடைபெற்று
அரசியல் !

தூரப்போனது
தூய்மை
அரசியல் !
.
வாசலில் விட்டு விடுகிறோம்
கால்களைக் காத்த போதும்
காலணிகள் !

வேலை தேடுவதே
வேலையனாது
வேதனையில் வாலிபர்கள் !

எளிமை
எள்ளல் அன்று
இனிமை !

ஆடம்பரம்
நிரந்தரமன்று
ஆபத்தாகும் !

தமிழ்த் திரைப்படத்திற்கு
தமிழில் பெயர் வைக்க
தமிழ்நாட்டில் வரி விலக்கு ?

பெயரில் மட்டும் தமிழ்
பேசுவதெல்லாம் தமிங்கிலம்
திரைப்படம் !

மூச்சுள்ளவரை இயங்கினால்
மூச்சு நின்ற பின்னும்
நினைக்கப்படுவோம் !

பிறருக்காக வாழ்ந்தவர்களுக்கு
வாழ்க்கை உண்டு
இறந்த பின்னும் !

மகத்தானவை
மனித உறுப்புகளில்
விழிகள் !

காதலுக்கு முன்னுரை
வரைபவை
விழிகள் !

கண்டு பிடியுங்கள்
காத்த சக்தி
உள்ளது கண்களில் !

வேண்டாம் தயக்கம்
உடன் பாராட்டுக
பரவும் மகிழ்ச்சி !

இன்சொல் இனிது
வன்சொல் கொடிது
வள்ளுவர் மொழிந்தது !

முகம் மலர
அகம் மலரும்
இனிது இன்முகம் !

வேண்டாம் பொய்
மாற்றுங்கள் பெயரை
மக்களாட்சி ?

பொழுது மங்கியதும்
பாதையில் விழுகிறான்
குடிமகன் ?

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

No comments:

Post a Comment