Thursday, December 18, 2014

தர்மினி கவிதைகள்

சாமம்

பகலில் ஒலிக்காத கடிகாரச் சத்தம் பெரிதாகிப் பெரிதாகி….
அதை மட்டும் உற்றுக் கேட்கிறேன்
கதவு நீக்கி
குளிர் ஒதுக்கி
வானைத் திறந்து பார்த்தால்
அங்கு நிலவில்லை
நட்சத்திரங்களில்லை
கொஞ்சிச் சென்ற கன்னத்தின் தண்மை போன்றொரு சிறு வெண்முகிற் துண்டு தன்னுமில்லை
கருங்கூடாரம் விரித்த இச்சாமம் என்னைக் கதைகதையாகக் கேட்கிறது.
முகம் முகமாய் மின்னித் தெறிக்கும் இந்த இரவும்
பேசித் தணிந்த குரலின் கனிவும்
கண்கள் கசிய நினைவும்
எத்தனை சொல்லி என்ன?
என்னைச் சுற்றி மிதந்தலையும் இறகுகள்
இரகசியமாக வந்தலைகின்றன
நீங்கள் அனைவரும் உறங்கிவிட்டீர்கள்
இப்போது நேரம் அதிகாலை இரண்டு மணி 8 நிமிடங்கள்.


பெயர் அறியாத ஒருவனின் முத்தம்

வெளியே கொஞ்சங் கொஞ்சமாக இருள்பூசும் வேலை நடக்கிறது
மனிதர் நீல வண்ண இருக்கைகளில் தூவிக்கிடந்தனர் .
இருபுறக் காடுகள் ஊடாக என்னைக் கொண்டோடுகிறது ரயில்
அந்நிய நாட்டின் வெறுமையை இன்னும் இன்னும் உணரும் சலிப்பாக இப்பயணம்.
என் நீண்ட தனிமையில் இடையிட்டு
சற்றுத் தள்ளி ஒருவன்
எழுந்து நடந்து கதவருகில் நின்று கடந்தோடும் மரங்களை பார்க்கிறான்
இருக்கையின் சலிப்பில்
அது போலவே இரசிக்கக் கதவருகே சென்றேன்
மரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன
‘நீங்க தமிழா?’ நான் கேட்க
இங்லீஷில் பேசினான்.
கல்கத்தா நகரிலிருந்து கம்பியூட்டர் வேலைக்கு வந்தானாம்
சில நிமிடங்களில் பிராங்போர்ட் நிலையம் சென்றடைய
‘இதோ இறங்குமிடம் உன்னை முத்தமிட்டுப் பிரியலாமா?’ கேட்டான். மறுப்பதற்கு அவனோடு எனக்கென்ன கோபம்.
அவனது ஆடைகளின் நிறங்கூட ஞாபகத்திலில்லை.
முகம் மறந்து போய்விட்டது.
பெயர் கேட்டறியவில்லை.
அவனிட்ட இரு முத்தங்கள் மட்டும்
முத்தமிட்ட தருணங்களின் ஞாபகங்களுக்காக என்னோடு மிஞ்சிப் பயணிக்கின்றன

No comments:

Post a Comment